Home

Saturday, February 16, 2013

சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்...



உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக் கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச் சியாளர்கள். ‘‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும். இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டி விடாது என்பது இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது. சாக்லெட் உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்தாலும், அதை சரியான விகிதத்தில் சேர்த்து உடலை இளைக்கச் செய்கிறது.

சிறிதும் உடற்பயிற்சி செய்யாமலேயே சாக்லெட் சாப்பிடுகிறவர் உடல் இளைப்பது இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை நிபுணர், பீட்ரிஸ் கோலம்ப். சாக்லெட் மட்டுமல்ல... எடையைக் கூட்டும் என்று நாம் நினைத்திருந்த வறுத்த உணவு, கேக் போன்றவற்றைக் கூட 600 கலோரி அளவுக்கு எடுத்துக் கொண்டால் அது மனிதர்களின் எடையை பெருமளவு குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவ்வளவு ஏன்... கொழுப்பு உணவுப் பொருட்கள் கூட உடல் எடையைக் குறைக்கும் என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

ஒமேகா-3 என்ற கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு, உங்களது எடையும் குறைந்து ஸ்லிம் ஆகிவிடலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. இவை எல்லாமே நம்ப முடியாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று நினைக்கலாம். புதிய புதிய ஆராய்ச்சிகள் பல பழைய நம்பிக்கைகளைப் பொய் என நிரூபிப்பது மருத்துவ உலகில் சகஜம்தானே. அதிலும் உடல் எடை விஷயத்தில் நம் வாயைக் கட்டும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான இந்த ஆராய்ச்சிகள் நம் நாக்குக்கும் வயிற்றுக்கும் நல்லதுதானே!

நன்றி: தினகரன்.காம்

1 comment: