எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை! அந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீபகாலமாக. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரே இரவில் நடக்கிற மாயவித்தை அல்ல. மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் நமக்குப் பொறுமை ஏது? விளைவு... ஒரு வாரத்திலோ, பத்து நாள்களிலோ பலன் தருவதாகச் சொல்கிற தவறான வாக்குறுதிகளை நம்பத் தயாராகிறார்கள்.
அந்த வகையில் உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்களுக்கும், மாத்திரைகளுக்கும் ஏக கிராக்கி! உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் இந்தப் பொருட்கள் உண்மையில் உபத்திரவமே தருகின்றன!


















