ஒரு விவசாயி வயலில் வேலை செய்யாமல் ஜீவிக்க முடியாது. ஒரு பாட்டாளி உழைக்காமல் உயிர்வாழ முடியாது. கட்டடப் பொறியாளர் கூட, கட்டடப் பக்கமே வராமல் சம்பாதிக்க முடியாது. ஆனால்,
"ஒரு டாக்டர் நோயாளியைக் குணப்படுத்தாமலே லட்சம் லட்சமாய் குவிக்க முடியும்."
மருத்துவ உலகில் வளர்ந்துவரும் ஆய்வக நோயறியும் முறையினால் (லேபரட்டரி டயக்னோசிஸ்) ஏற்பட்டிருக்கும் நூதன மாற்றம் இது. ஒரு நல்ல டாக்டருக்கான முன் நிபந்தனையாக அவர் எந்த அளவுக்கு நோயாளியைக் குணப்படுத்துவார் என்பது இருந்தது. அவரை ஊரில் "கைராசி" டாக்டர் என்பார்கள். ஒரு டாக்டர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனில், நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையளித்து குணப்படுத்தியாக வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம்!
இன்றைக்கு நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் டாக்டர்களுக்கு இல்லை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்தாலே போதும், அதிலிருந்து வருகிற கமிஷன், சிகிச்சை பெற வருவோர் தரும் ஃபீûஸக் காட்டிலும் பலப்பல மடங்கு அதிகம். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் டாக்டர்களுக்குக் கிடைக்கிற கமிஷன் விகிதத்தைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும்; பி.பி. எகிறும்.
மதுரை போன்ற நகரத்தில், மூளைக்கான சிடி ஸ்கேனுக்கு ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது; இதில் டாக்டருக்கான கமிஷன் ரூ. 1,500. சிடி ஸ்கேன் நடத்தும் நிறுவனத்துக்கு கிடைப்பது ரூ. 1,000 மட்டுமே.
அதேபோல், மூளைக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு வசூலிக்கப்படுவது ரூ. 6,000. இதில் டாக்டருக்கு கமிஷன் ரூ. 4,000. மீதி ரூ. 2,000 மட்டுமே ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு. இது தவிர டாக்டரிடமிருந்து வரும் ஒவ்வொரு 6-வது பரிந்துரை மூலமாகக் கிடைக்கும் முழுத் தொகையும் கமிஷனாக டாக்டருக்கே தரப்படுகிறது.
டாக்டருக்குத் தந்தது போக மீதியுள்ள தொகையில் ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஒரு லாபம் இருக்கும். அது இல்லாமல் நிறுவனத்தை நடத்த இயலாது. அப்படியெனில், ஒரு ஸ்கேனுக்கான அசலான மதிப்புதான் என்ன? கமிஷனையும் லாபத்தையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு ஸ்கேன் ரூ. 500-க்கும் ஒரு எம்.ஆர்.ஐ. ரூ. 1,000-க்கும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
ஆனால், ரூ. 500 மதிப்புள்ள சி.டி. ஸ்கேனை ரூ. 2,500-க்கும்; ரூ. 1,000 மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை ரூ. 6,000-க்கும் பெற்று வருகிறோம். கிட்டத்தட்ட 5 அல்லது 6 மடங்கு லாபம் இந்தத் துறையில் புகுந்து விளையாடுகிறது. இதில் பெரும்பகுதி டாக்டர்களுக்குக் கொடுப்பதற்காக நோயாளிகளிடமிருந்து பறிக்கப்படுவதாகும்.
எந்தத் துறையிலும் கமிஷன் பெறுவது என்பது லஞ்சத்துக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவத் துறையில் இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே நடந்து வருகிறது.
இதுதான் இப்படியெனில், மருந்துப்பொருள்கள் விற்பனையிலும் மருத்துவ அறிவியல் உபகரணங்கள் விற்பனையிலும் (சயன்டிஃபிக் எக்யுப்மென்ட்ஸ் சேல்ஸ்) அடிக்கப்படும் கொள்ளை அளவு கடந்தது.
உதாரணமாக, லேடக்ஸ் கையுறைகள் 100 கொண்ட டப்பாவின் சந்தை விலை (எம்ஆர்பி விலை) ரூ. 600. இதனை மருந்துக் கடைகளில் வாங்காமல் மொத்த விற்பனையாளரிடம் வாங்கினால், ரூ. 200-லிருந்து ரூ. 250-க்குள் கிடைக்கும்.
இதில், மொத்த விற்பனையாளருக்கு ஒரு லாபம் இருக்கத்தான் செய்யும். கையுறைகளை அவருக்கு விநியோகித்தவர் இன்னும் குறைவான விலைக்குத்தான் விநியோகித்திருப்பார்.
குறைவான விலைக்கு விநியோகித்தவரும் ஒரு லாபத்துடன்தான் சரக்கைத் தள்ளிவிட்டிருப்பார். கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அந்த விநியோகஸ்தருக்கு இன்னும் குறைவான விலையில்தான் சப்ளை செய்திருக்கும். அதில், உற்பத்தி செய்யும் கம்பெனிக்கும் ஒரு லாபம் இருக்கும். இப்படியே கழித்துக்கொண்டு போனால், அந்தக் கையுறைகளின் அசல் மதிப்பு ரூ. 50 தேறினால் அதிசயம்! ஆனால், அது சந்தை விலையில் ரூ. 600-க்கு விற்கப்படுகிறது.
அதாவது பொதுமக்களை வந்து சேர்கிறபோது, சராசரியாக 1,000 சதவிகித லாபத்தில் விற்கப்படுகிறது. மக்களின் உயிர்காக்கும் இந்தத் துறையில் இத்தனை திருவிளையாடல்கள் இருப்பது, இந்தியா மாதிரியான கோடானுகோடி "தரித்திர நாராயணர்'களைக் கொண்ட தேசத்துக்கு அடுக்குமா? இதற்குக் காரணம் என்ன?
அரசின் அபத்தமான கொள்கை. அல்லது கொள்கையே இல்லாமல் இருப்பது. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையை தனியாருக்கு தாரைவார்த்து விட்டதும்; தன் வசம் இருக்கும் மருத்துவத் துறையை நம்பகத்தன்மை இல்லாமல் ஆக்கியதும் அரசு செய்த மாபெரும் தவறு. தனியாருக்குப் போட்டியாக பல்வேறு ஸ்கேன் மையங்களை அரசே தனது முதலீட்டில் ஏன் தொடங்கக் கூடாது? அப்படிச் செய்தால், அசல் விலையில் மக்கள் பயன் பெறுவார்களே!
மேலும், அரசின் போட்டி காரணமாக தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அல்லவா! மருத்துவத் துறையில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கையை அரசு உருவாக்காத வரை, இந்த அவலம் தொடர்கதையாகத்தான் இருக்கும். அதுவரை, குணமாக்குவதே டாக்டரின் கடமை என்கிற நிலை மாறி, பணமாக்குவதே அவர்கள் பணி என்ற நிலை தொடரத்தான் செய்யும்.
நன்றி: தினமணி நாளிதழ்
No comments:
Post a Comment