அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை... !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்குதேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புன்னை எண்ணெய் புண்ணியத்துல !ஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான் ! இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே..
“என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?” என்று உற்சாகத் துள்ளல் போட்டபடி கண்டியன் காடு சென்றடைந்தோம். குளிர்ந்தக் காற்றையும், பரந்த நிழலையும் வாரி வழங்கியபடி தோட்டத்தில் நின்றிருக்கும் புன்னை மரங்கள்.. பூமாரி தூவிக்கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தோம். சடசடவென புன்னைக்கு ‘வாழ்த்துமாரி’ பொழிய ஆரம்பித்தார் ராஜசேகர் (போன்) : 97510 02370).
சுனாமியில கூட சுழற்ற முடியல !
“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழை வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும்.
அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல. 0,70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.
“செடியை நட்ட 5ம் வருஷமே காயாகி, பழம் கிடைக்கும். புன்னை மரம் இருந்தாலே வெளவால் நிறைய இருக்கும். அதுங்க பழத்தைத் தின்னுட்டு, கொட்டையைக் கீழே போட்டுடும். அதனால பழத்தைக் காய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. தானா கீழே விழுற பழத்தை ஆறு நாளைக்கு வெயில்ல காய வெச்சா.. கொட்டையை உடைச்சி எடுக்கலாம். கொட்டைக்குள்ள இருக்கற பருப்புதான் முக்கியம்.
அதைத் தனியா எடுத்து, வெயில்ல 10 நாள் காய வைக்கணும். காய்ஞ்ச பருப்பை, செக்குல கொடுத்து ஆட்டினா, 70 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை எண்ணெய் கிடைக்கும். அதாவது, ஒரு கிலோ பருப்புக்கு 700 முதல் 750 மில்லி எண்ணெய் கிடைக்கும். இதுவே மெஷின்ல ஆட்டினா 80 சதவிகிதம் அதாவது ஒரு கிலோ பருப்புக்கு 800 மில்லி எண்ணெய் கிடைக்கும்.
கரும்புகை போகுது.. கமழும் புகை வருது !
5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும். ஒரு லிட்டர் டீசலோட
விலை 35 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது. மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும்.
இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொன்ன ராஜசேகர், தன் தோட்டத்தில் இருக்கும் டீசல் மோட்டாரில் புன்னை எண்ணெயை ஊற்றி இயக்கியும் காட்டினார். டீசல் மோட்டாரைப் போல குபுகுபுவென கரும்புகை கண்களை சூழவில்லை. வாடையும் மூக்கைத் தூக்கிக்கொண்டு ஓட வைக்கவில்லை. குறைவான புகையே வெளிப்பட்டதோடு, கோயில்களில் கமழ்வதைப் போன்ற சுகந்த வாடையும் வீசியது.
“புன்னை எண்ணெய்ல நிறைய மருத்துவ குணமிருக்கு. அதனால தான் முன்னயெல்லாம் கோயில்ல விளக்கேத்தறதுக்கு இதைப் பயன்படுத்தினாங்க. இந்தப் புகையில நீங்க நின்னாலும் ஒண்ணும் செய்யாது. ஆனா, டீசல் புகைன்னா, கண் எரிச்சல் ஏற்படும். அந்தப் புகையால பயிரும் மாசுபடும். ஆனா, எல்லாவிதத்துலயும் தொல்லை இல்லாதது புன்னை எண்ணெய்தான் ” என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் ராஜசேகர்.
10ஹெச்பி.. 20 ஹெச்.பி.. புன்னை எண்ணெய் பயன்படுத்துவதால் இன்ஜின் துருபிடிப்பதில்லை. இன்ஜின் இயங்கும் சத்தமும் குறைவாகத் தான் கேட்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார் ராஜசேகர். இதுவரை இன்ஜினில் எந்தப் பிரச்சனையும் வராமல் மோட்டார் நல்லபடியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி பேசும்போது, “ டீசல் பயன்படுத்தினப்ப.. ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணியை மோட்டார் கொட்டும்.
புன்னையைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணிக் கொட்டுது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20ஹெச்.பி ஜெனரேட்டர் இதுல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்தேன். நல்லாவே ஓடுச்சி.. எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால.. டீசல்ல ஓடுற வண்டிகளுக்கும் கண்டிப்பாக இதைப் பயன்படுத்த முடியும்ன்னு நம்புறேன். அரசாங்கமும் ஆய்வாளர்களும் தான் அதுக்கான முயற்சியைச் செய்யணும். இதுல நிச்சயம் வெற்றி கிடைக்கும்கிறது என்னோட நம்பிக்கை என்று உறுதியான குரலில் சொன்ன ராஜசேகர், புன்னை வளர்ப்புப் பற்றி பாடமெடுத்தார்.
புன்னை வளர்ப்பு !
எல்லா வகையான மண்ணிலும் புன்னை நன்றாக வளரும். குறிப்பாகக் கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் சிறப்பாக வளரும். உப்புத்
தண்ணீர் பூச்சி, நோய், கரையான் என எதையும் சமாளிக்கும் வல்லமை இதற்கு உண்டு.நிழலும், லேசான வெயிலும் கலந்த இடத்தில், ஒரு பாலித்தீன் பேப்பரைப் போட்டு அதில் மணலைப் பரப்பவேண்டும். அதன் மீது விதைகளைப் (முழுக் கொட்டைகளாகப் பயன்படுத்தவேண்டும்) பரப்பி, அவை மூடுமளவுக்கு மணல் போடவேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும். ஒரு மாதத்தில் செடிகள் முளைத்துவிடும்.
பிறகு, பாலித்தீன் பாக்கெட்டுகளில் மண், மணல் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு ஒரு செடி வீதம் ஊன்றி, தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். இதை நிழலில் வைத்துதான் பராமரிக்க வேண்டும். மூன்றாவது மாதம், நடவுக்குக் கன்று தயாராகிவிடும்.அரை அடி சுற்றளவு, அதே அளவு ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி, ஈரப்பதம் ஏற்படுமளவு தண்ணீர் தெளித்து, அதில் தொழுவுரம் போட்டுச் செடியை நடவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளிக் கொடுத்து நடவு செய்வதன் மூலமாக 75 மரம் வரைக்கும் வளர்க்கலாம். இரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட வேண்டும் என்றார் ராஜசேகர்.
No comments:
Post a Comment