முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்) பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.
ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.
எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றன.
வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.
நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும். தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.
No comments:
Post a Comment