நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும், பலர் விசிட் விசா அல்லது ஃப்ரீ விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. விசிட் விசா மற்றும் ஃப்ரீ விசாவில் வருபவர்களுக்குத் தான் சிக்கல்கள் அதிகம். விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும், ஃப்ரீ விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதி அரேபியாவின் நிலை.
நம்மில் சிலர் நான் சொந்த விசாவில் தான் சவூதிக்கு வந்திருக்கேன் என சொல்வதுண்டு. அவர்களின் அறியாமையால் அப்படி சொல்வதை காலம் கடந்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள். அது சரி சொந்த விசா என்றால் என்ன? என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது. இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும். அந்தளவுக்கு ஃப்ரீ விசா ஆபத்தானது,
இப்போது விஷயத்திற்கு வருகிறேன், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு ஓட்டுனர் விசா வேண்டுமென்றோ அல்லது தனது கடை மற்றும் கம்பெனிகளுக்கு தொழிலாளர் விசா வேண்டுமென்றோ அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட விசாவை பெற்றுக்கொண்டு அதை இங்குள்ள சில புரோக்கர்கள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த விசாவை வெளிநாட்டு மோகம் கொண்ட அப்பாவி மக்களிடம் விற்று விடுவார்கள்.
அது மாதிரி விசாவில் வருபவர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலையில் சிக்கியவர்கள் வீட்டை விற்று, நகைகளை விற்று ஒரு வழியாக சவூதிக்கு வந்ததும் மெடிக்கல் செக்கப்புக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3,000, இன்சூரன்ஸ் மற்றும் இகாமா எடுப்பதற்கு ரூ. 30,000 என மொத்தம் ரூ.33,000 செலவழிக்க வேண்டும். இந்த செலவுகள் அனைத்துமே அவரவர்கள் பொறுப்பு. இகாமா கிடைத்ததும் அவர்களே வேலையும் தேடிக்கொள்ள வேண்டும். வேலை கிடைத்ததோ இல்லையோ மாதம் தவறாமல் விசா கொடுத்த அரபிக்கு 300 ரியால் அதாவது ரூ.4,300 கொடுத்தாக வேண்டும். இது தவிர சாப்பாடு மற்றும் தங்குமிடமும் அவரவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இது போன்ற விசாவில் வருபவர்கள் சராசரியாக 2,000 ரியாலில் இருந்து ,2500 ரியால் வரைக்குமே மாதச் சம்பளமாக பெற முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2500+2400=4,900 ரியால் செலவழித்து இகாமாவையும் புதுப்பிக்க வேண்டும். ஒரு மாதச் சம்பளம் 2,500 ரியால் ஆகும். செலவினங்களின் வகைகள்: தங்குமிடம் - 300 ரியால் சாப்பாடு - 400 ரியால் அரபிக்கு கொடுப்பது - 300 ரியால் இகாமா புதுப்பித்தல் - 400 ரியால் போக்குவரத்து செலவு- 150 ரியால் போன் செலவு - 150 ரியால் ------------ மொத்தம் - 1,700 ரியால் ------------ இதில் 2,000 ரியால் சம்பளமாக இருந்தால் 300 ரியாலும், 2,500 ரியால் சம்பளமாக இருந்தால் 800 ரியாலும் செலவினங்கள் போக மிஞ்சும். மொத்தத்தில் மாதம் ரூ.5,000- 10,000 வரை மட்டுமே குடும்பத்தாருக்கு அனுப்ப முடியும்.
இதையும் கூட சுதந்திரமாக பெற முடியாது! ஜவசாத் என்னும் காவல்துறைக்கு பயந்தே சம்பாதிக்க வேண்டும். காரணம் ஹவுஸ் டிரைவர் விசா அல்லது மற்ற ஃப்ரீ விசாக்களில் வெளியில் வேலை பார்ப்பது சட்டவிரோதமாகும்.
இப்போது இத்தகைய தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக ஜவசாத் எனும் காவல்துறை அதிரடியாக ஹவுஸ் டிரைவர் விசாவில் வெளியில் வேலை பார்ப்பவர்களையும், ஃப்ரீ விசாவில் வந்து வெளியில் வேலை பார்ப்பவர்களையும் சல்லடை போட்டு தேடி வருகிறது. பாவம், விசாவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வந்திருக்கும் நமது சகோதரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை நினைக்கும்போது வேதனையே மிஞ்சி நிற்கிறது.
எனதருமை சொந்தங்களே, இனியாவது வெளிநாட்டு மோகத்தில் மற்றவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் தீவிரமாக விசாரித்து கூடுமானவரை கம்பெனி விசாக்களில் வந்து வேலை பார்ப்பது போல் அமைத்துக் கொள்ளுங்கள்.
(கட்டுரையாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்)
No comments:
Post a Comment