மாஸலாமா

ஆக்கம் : அபூஃபைஸல்
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது ஆனால் இவனது மனமோ அதைவிட அதிவேகமாக பறந்து கொண்டிருந்தது. சந்தோஷக் கனவுகள் மின்ன சவூதி தலைநகர் ரியாத் செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கிறான். கைநிறைய சம்பளத்துடன் நல்லதொரு நிறுவனத்தில் வேலை கிடைத்த சந்தோஷம், முதல் வருடம் முடிந்ததும் ஊருக்கு போய் சொந்த வீடு, பைக் வாங்கணும், குழந்தைகளை பெரிய ஸ்கூலாக பார்த்து சேர்க்கணும், அம்மாவுக்கு நல்ல டாக்டரிடம் காட்டி சுகர் பிரஷர் போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் போன்ற பல நினைவுகளிடையே பயணித்தவனை ”எக்ஸ்கியூஸ் மீ...! யுவர் சீட் பெல்ட் ப்ளீஸ்” என்ற விமானப் பணிப்பெண்ணின் அழைப்பு அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது.

அவசர அவசரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டான் விமானம் விர்ர்ரென்ற சத்தத்துடன் ஓடுபாதையில் இறங்கி விமான நிலையத்தில் வந்து நின்றது. மனதில் இனம்தெரியாத ஒரு பரபரப்பு கேபின் பேக்கேஜை எடுத்துகொண்டு இமிகிரேசன் பகுதிக்கு வந்தான் அரபு மொழியில் அறிவிப்புகள் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக இமிகிரேசனை முடித்து லக்கேஜை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். ஜில்லென்ற +3 டிகிரி குளிரில் நடுங்கியபடியே அந்த நிறுவனத்திலிருந்து அவனை அழைத்துச்செல்ல வந்த ஊழியருடன் காரில் புறப்பட்டான். இருபுறமும் மணல் வெளி ஆங்காங்கே ஒட்டகங்களும் பேரீத்த மரங்களும் இருக்க உள்ளுக்குள் ஒரு இனம்தெரியாத சிலிர்ப்புடன் பாத்துக்கொண்டே சென்றான்.


ரியாத் சிட்டி செண்டரில் உள்ள ஒரு ஓட்டலை வந்தடைந்ததும் அங்கு இரண்டாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. நாளை காலை வந்து அழைத்து செல்வதாக அரபியிலும் ஆங்கிலத்திலும் கலந்து அவனிடம் சொல்லிவிட்டு கார் டிரைவர் பறந்தான். கட்டிலில் வந்து அமந்தவனுக்கு வீட்டு நினைவு வந்தது கீழே போய் போனில் தான் ரியாத் வந்து சேர்ந்து விட்டதாக மனைவியிடமும் உம்மாவிடமும் சொல்லி விட்டு போனை வைத்தபோது ஏதோ ஒன்றை இழந்து வெகு தூரத்தில் வந்துவிட்டதை போல் மனதில் தோன்ற கண் கலங்கியது.


மறுநாள் காலை டிரைவருடன் காரில் அலுவலகத்துக்கு சென்றான். பெரியதொரு நிறுவனமாக இருந்தது அந்த அட்மாஸ்ஃபியர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது உள்ளே சென்ற அவன் அங்கிருந்த மேலாளரிடம் தன்னை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டான். அவனுடைய கேபினில் சென்றமர்ந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் உள்ளே வந்த அவனது மேலாளர் “ஹாய்! ஹவ் ஆர் யூ” என்றதும் அவசரமாக எழ முற்பட்டான் ஆனால் அவரோ “பிளீஸ் பீ சீட்டட்” என்று அவன் செய்ய வேண்டிய அலுவல்களை விளக்கிவிட்டு கிளம்பிவிட்டார். ரொம்ப நல்லவரா இருக்காரே என்று வியந்தபடி அலுவலை கவனிக்கலானான்.


காலையில் அலுவலக வேலையும் மாலையில் வீட்டுக்கு அலைபேசி அழைப்புமாக 11 மாதங்கள் கழிந்தன. இப்போது ஊருக்கு புறப்பட தயாராகும் நிலையில் அவன்... உம்மா, மனைவி, குழதைகள் மற்றும் அனைவருக்கும் வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் ரியாத் ஏர்போர்டுக்கு வந்து லக்கேஜை போட்டு போர்டிங் பாஸை வாங்கிக்கொண்டு வந்தவனிடம் நண்பர்கள் விடைபெற்று கொண்டனர். விமான நிலைய ஃபார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து விமானத்தில் சென்றமர்ந்தான் விமானம் புறப்பட்டது. சில சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் அயர்ச்சியில் தன்னையறியாமல் உறங்கிப்போனான்.


மறுநாள் காலை விமானம் சென்னை வந்திறங்கியது. இப்போது மனதில் ஒரு சந்தோசம், ஆவலுடன் லக்கேஜுடன் வெளியே வந்தவனுக்கு ஒரு வருடம் கழித்து சென்னையை பார்க்கும்போது எல்லாமே வித்தியாசமாக.... கார்களெல்லாம் சோப்பு டப்பா மாதிரியும் மனிதர்களும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தார்கள் அவனுக்கு.... ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனது மனம் எதையோ தேடி அலைபாய்ந்தன “அதோ உன் உம்மா, சகோதரி” என்று கண்கள் காட்டிக்கொடுத்தாலும் “எங்கே என் மனைவி, குழந்தைகள் என்று ஆத்திரப்பட்டது சுயநலம் பிடித்த மனம். உம்மா அருகில் வந்ததும் “என்ன வாப்பா நல்லயிருக்கியா, ஏன் வாப்பா இப்படி இளைச்சிபோயிட்டே” என்றபடி உம்மா கண் கலங்கினாள். இல்லம்மா நல்லாத்தேனே இருக்கேன்.... இப்ப உங்க உடம்பெல்லாம் எப்படி இருக்கு உம்மா” என்றவனிடம் பரவாயில்லேப்பா உன் ஞாபகம்தான் வாப்பா என்றாள். குழந்தைகள் ஓடிவர வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.


மற்றவர்களின் வழக்கம் போன்ற விசாரிப்பிற்கு பதில் கொடுத்தவனின் கண்கள் எதையோ தேடியது, அதை புரிந்து கொண்ட அவனருகில் நின்றிருந்த அவன் மனைவியின் தங்கை “மச்சான் அக்கா வேனுக்குள்ளே உட்கார்ந்திருக்காங்க” என்றாள். வேனுக்குள்ளிருந்து பாதி முகத்தை மறைத்தபடி ஒரு முகம் லேசாக எட்டிப்பார்த்தது. அதன் கண்களில் ஒரு சந்தோஷம் ஆவல்.... அதை கவனித்தவன் உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் ...... சரி வாங்க போகலாம் என்று அனைவரிடமும் சொல்லிக்கொண்டே வேனை நோக்கி சென்றான். மச்சானுக்கு அவசரம் போல என்று பின்னால் அவனை கிண்டலடித்துக்கொண்டு வந்தது ஒரு படை.


ஒரு வழியாக வீடு வந்த சேர்ந்தபின் களைப்பாக இருக்கிறது என்று படுக்கைக்கு சென்று சற்றே உறங்கியவனை மதியஉணவுக்காக அழைத்த உம்மாவின் குரல் கேட்டு எழுந்தான். “இதோ வந்திட்டேன் உம்மா” என்றபடி வந்தவனிடம் முகம் கழுவிட்டுவந்து சாப்பிடுப்பா என்றாள்.... மனைவி அடுக்களையில் மும்முரமாக இருந்ததை ஜாடையாக கவனித்துவிட்டு முகம் அலம்பிவிட்டு வந்தமர்ந்தான். உம்மாவையும் மனைவியையும் அழைத்த அவன் வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றவனிடம் “இல்லப்பா நாங்க அப்புறமா சாப்பிடுகிறோம் நீ சாப்பிடு” என்ற உம்மாவிடம் இல்ல உம்மா எல்லோரும் வாங்க சேர்ந்து சாப்பிடுவோம் என்றதும் மனைவி, உம்மா, குழந்தைகள் உள்பட அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.


குழந்தைகளுக்கு வாயில் ஊட்டிக்கொண்டே தானும் சாப்பிட்டான் உம்மாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் மனைவின் முகத்திலும்... ச்சே இதையெல்லாம் விட்டுவிட்டு அங்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று அவனது மனம் கோபமாக கேட்டது.


சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு எழுந்து அறைக்குள் போனான். மனம் நிலைகொள்ளவில்லை. அவன் மனைவி உள்ளே வந்தாள் என்னங்க இத வாயில போட்டுங்கங்க செரிமானம் ஆகும் என்றபடி சர்க்கரை கலந்த ஜீரகத்தை கொண்டுவந்து கொடுத்தவளிடம், “வா இப்படி வந்து உட்கார் என்றான்” “நான் ஒரு முடிவு செய்து விட்டேன் என்றவனை ஆச்சர்யமாக பார்த்தாள் என்னவென்று அவள் கேட்பதற்குள் அவனே தொடர்ந்தான்.


“இவ்வளவு மகிழ்ச்சியையும் நிம்மதியான வாழ்க்கையையும் விட்டுவிட்டு மீண்டும் அந்த வெறுமை நிறைந்த பாலைவன வாழ்க்கையை தொடர எனக்கு துளியும் இஷ்டமில்லை. உம்மாவை டாக்டரிடம் அழைத்துப்போகவும் குழந்தைகளை கவனிக்கவும் அவர்கள் நல்லவர்களாக வளரவும் நன்றாக படிக்கவும் நான் அருகில் இருப்பது அவசியம். உங்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் எனக்கு இருக்கிறது பணத்திற்காக இவைகளை நான் செய்யத்தவறும் பட்சத்தில் நாளை இறைவனிடத்தில் குற்றம் சாட்டப்பட்டவனாக நிற்க விரும்பவில்லை அதனால்...... என்று நிறுத்தியவன் அவளை திரும்பி பார்த்தான்.


அவனை வியப்புடன் நோக்கிய மனைவியிடம்;இனி வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒரு “மாஸ்ஸலாமா”... என்றவனை கண்கலங்க பார்த்தவள் “அல்ஹம்துலில்லாஹ்” என்றபடி அவன் தோளில் சாய்ந்தாள்.



Voip vs வளைகுடா..

ஆக்கம்: சகோ. அபூஃபைஸல்



காலை முதல் மாய்ந்து மாய்ந்து வேலை செய்த களைப்பின் மிகுதியால் ஓய்ந்து போய் படுக்கையில் வீழ்ந்தான் பீர் முஹம்மது. மனதில் பெரும் அயர்ச்சியுடன் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தான் மதியம் உணவு இடைவேளை நேரத்தில் ஊரில் இருந்து தனது மூத்த மகளிடம் இருந்து வந்த அழைப்பு அவனது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது

"வாப்பா இன்னும் 3 வருடங்கள் பொறுத்துகோங்க வாப்பா அதுக்குள்ளே நான் படிப்பை முடித்து விடுவேன் நீங்க யாரை பற்றியும் கவலைப்படாதீங்க அம்மா நல்ல விதமாக இருக்காங்க தம்பியும் தங்கையும் நல்லா படிக்கிறாங்க எல்லோரையும் நான் பார்த்து கொள்கிறேன் என்ற குரல் திரும்ப திரும்ப காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மகளை நினைத்து பெருமைபடுவதா அல்லது தன் நிலைமையை நினைத்து அழுவதா என்று மனம் தடுமாறியது.

5 ஆண்டுகள் கழித்து 6 மாத விடுப்பில் ஊருக்கு போகாலாம் என்று சந்தோஷமாக ஊருக்கு தகவல் சொன்னவனுக்கு அடுத்த நாள் வந்த அதிரடியான வேண்டுகோள்... அதுவும் அவனது உயிரான மூத்த மகள் எதுவும் சொல்ல முடியவில்லை மனதில் சோகம் அப்பிக்கொண்டது அழவும் முடியவில்லை திரும்பி பர்த்தான் அறையில் நண்பர்கள் இண்டெர்நெட்டில் மும்முரமாக தங்களது குடும்பத்துடன் "Voip" ல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

என்ன வாழ்க்கை இது, குடும்பத்தவர்களுக்காக வாழ்க்கையை குறிப்பிட்ட காலம் தியாகம் பண்ணலாம் அதற்காக நான் தியாகியாகவே வாழ்ந்துகொண்டிருந்தால் என்னை நம்பி என்னுடன் வாழ வந்தாளே என் மனைவி அவளுடைய வாழ்க்கையும் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்களே தான் சாப்பிடாவிட்டாலும் உள்ளதை எனக்கு வைத்து விட்டு பட்டினியாக கிடப்பாளே என் தாய்,

நான் எதை கேட்டாலும் எப்படியாவது வாங்கி கொண்டுவந்து என் முகத்தில் சந்தோஷத்தை பார்ப்பதையே விரும்பும் எனது தந்தை அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கிறதே வயதான காலத்தில் நான் அவர்களை நிராதரவாக விட்டுவிட்டு இங்கு ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேனே இது சுயநலமா தியாகமா..மனதை கேள்வி உறுத்தியது... உன்னை பார்த்து 5 வருஷம் ஆச்சுப்பா... என் கண்ணிலேயே நிக்கிறியே வாப்பா....ஒரு முறை வந்துட்டுதான் போயேன் என்று உம்மா தொலைபேசியில் கண்கலங்கினாளே.... பாசப்போராட்டத்தில் மனம் விம்மியது அழுதான்... மனம் இலேசாகும் வரை அழுதான். அப்படியே உறங்கி போனான்.

நண்பர்கள் அடிக்கடி அவனை திரும்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாரும் சமாதானம் சொல்ல முன் வரவில்லை அவர்களும் அழுது ஓய்ந்து போனவர்கள்தாம்.....

4 comments:

  1. ஒரே வருடத்தில் திரும்பி வந்து வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒரு “மாஸ்ஸலாமா”... என்ற கணவனிடம் "அல்ஹம்துலில்லாஹ்” சொன்ன அந்த மனைவியை உண்மையில் நாம பாராட்டனும்

    - அபு ரய்யான்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    மாஷா அல்லாஹ் மிக அருமையான கதை.
    இவ்வளவு மகிழ்ச்சியையும் நிம்மதியான வாழ்க்கையையும் விட்டுவிட்டு மீண்டும் அந்த "வெறுமை நிறைந்த" பாலைவன வாழ்க்கையை தொடர எனக்கு துளியும் இஷ்டமில்லை. உண்மையான வரிகள்.
    பணத்திற்காக வாழ்கையின் அணைத்து அம்சங்களையும் இழக்கிறோம் இந்த பாலைவன மணலில்.
    சந்தோசத்திற்காக இங்கு வந்து அணைத்து உண்மையான சந்தோசங்களையும் இழக்கிறோம்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    கதைகள் படித்து ரொம்பகாலம் ஆகிவிட்டது.
    இக்கதை கண்ணீரை வரவழைத்துவிட்டது.கைர்.

    ReplyDelete
  4. ஹ்ம்ம்... லைட்டா ... கண்ணீர் ...

    ReplyDelete