Thursday, March 8, 2012

வீட்டு மனை பத்திரம் பதிவு செய்வது எப்படி?


கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை வைத்து விரும்பிய இடத்தில் வீடு, நிலம், காலி மனை போன்ற சொத்தை கிரையமாக வாங்குவோம். அதை நாம் முழுமையாக அனுபவிக்க பதிவு செய்ய வேண்டும். வீடு மற்றும் வீட்டு மனை வாங்கும் போது மூலப்பத்திரத்தை வைத்து கண்டிப்பாக வில்லங்கம் பார்க்க வேண்டும். ஏன் என்றால் வீடு, வீட்டு மனையை வங்கி கடன் அல்லது வேறு ஏதாவதுக்கு அடமானம் வைத்திருக்கலாம். சொத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பிரித்து சதுர அடிக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
கிரையம் என்றால் சொத்தின் மதிப்பில் இருந்து 8 சதவீதத்திற்கு பத்திரம் வாங்கி அதனை அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தரிடம் கொடுத்து சரியான முகவரியுடன் சர்வே எண், நான்குமால் பட்டா எண், வீட்டு வரி ரசீது, குழாய் வரி, மின் இணைப்பு எண் ஆகியவற்றை எழுதவும். இத்துடன் வீட்டு வரி ரசீது, மூலப்பத்திரம், சர்வே எண், பட்டா எண் ஆகியவற்றின் நகல் மற்றும் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப சேர்க்கை படிவத்தில் எழுதி பத்திரத்துடன் இணைத்து பதிவு செய்ய வேண்டும்.

வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகிய நகல் ஆகியவற்றை இணைத்து சார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்.

சொத்து மதிப்புக்கு ஏற்ப பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா, சரியான சொத்துதானா என ஆய்வு செய்து பதிவு செய்ய கட்டணத்தை சார் பதிவாளர் நிர்ணயிப்பார். சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இக்கட்டணம் ரூ.ஆயிரத்துக்குள் இருந்தால் ரொக்கமாக அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்யலாம். 

ஆயிரத்திற்கு மேல் சென்றால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சார் பதிவாளர், பத்திர பதிவு அலுவலகம் என்ற பெயரில் வங்கியில் டி.டி எடுத்து பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் 2 பேர் சாட்சி கையெழுத்து போட வேண்டும். சொத்தின் மதிப்பு குறைவாக இருந்து சார் பதிவாளர் சந்தேகம் அடைந்தால் சொத்தை மதிப்பீடு செய்ய பதிவாளருக்கு அனுமதி உள்ளது. பதிவு செய்த பின்பு மூன்று நாட்களில் பதிவு பத்திரம் பெறலாம்

No comments:

Post a Comment