அப்சல் குரு - நேர்காணல்


அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. 

அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.

அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்? 

அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.

அப்படியெனில் அந்த அப்சல் யார்? 

அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். 

ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர். உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.

அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த ‘கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.

வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?

உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...? 

நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது. முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர்.

நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்கு ‘சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.

எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன். ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர். 22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.

நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.


வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை? 

சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: ‘ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).

நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.

ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.

மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.


உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை? 

எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாகவே இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.

சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்? 

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.

தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன? 

பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன.

உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது... 

எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.

தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? 

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.

தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்? 

தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?

நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...

உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? 

ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.

(காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)

நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்? 

அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

- தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம்

.நன்றி - பூங்குழலி

No comments:

Post a Comment