மாவீரன் ஹைதர் அலி

 மன்னர் குலம் சாராத மாவீரன் ஹைதர் அலி ......

“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும்….”

- ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை, ஜனவரி, 1782.

முகலாய சாம்ராச்சியம் நொறுங்கி, அதன் கவர்னர்களாக ஆங்காங்கே நியமிக்கப்பட்ட நிஜாம், ஆற்காட்டு நவாப் போன்றவர்கள் தம்மை மன்னர்களாகப் பிரகடனம் செய்து கொள்ள, அவர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களும் சிற்றரசர்களும் அவர்களது அதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுக்க, முடிவில்லாத போர்களால் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் சின்னாபின்னமாக்கப்பட்டுவந்த காலம்தான் ஹைதர் காலம்.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹைதரின் கொள்ளுப்பாட்டன் ஒரு தர்காவின் பணியாள். தாழ்தப்பட்ட முசுலிம்களின் சூஃபி வழிபாட்டு முறையையே ஹைதரின் குடும்பம் பின்பற்றியது என்பதிலிருந்து அவரது சமூகப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள இயலும். ஆற்காடு திப்பு மஸ்தான் தர்ஹாவில் நேர்ந்து கொண்டு அவர் நினைவாகத் தன் மகனுக்குத் திப்பு என்று பெயர் சூட்டினார் ஹைதர்.

குதிரைப்படை வீரனாக மைசூர் உடையார் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது மூன்றாவது கர்நாடகப் போர்களில், உடையாரின் குதிரைப்படைத் தளபதியாக பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து போரிட்ட ஹைதர், திண்டுக்கல்லின் பவுஜ்தாராக (கவர்னர்) உடையாரால் நியமிக்கப்பட்டார்.


மன்னன் இறந்த பின் அரண்மனைச் சொகுசை அனுபவிப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத மன்னனின் வாரிசுகளை ‘கவுரவமான அரியணையில்’ ஓரமாக அமர்த்திவிட்டு மைசூர் அரசை விரிவுபடுத்தத் தொடங்கினார் ஹைதர்.

1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

படைகளுக்கும் வரிவசூலுக்கும் பாளையக்காரர்களின் தயவைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு மையப்படுத்தப்பட்ட இராணுவத்தையும் அரசையும் உருவாக்குவதை நோக்கித் திரும்பியது ஹைதரின் கவனம். மைசூர் அரசின் கீழிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாளையக்காரர்களை நீக்கிவிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யும் மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை உருவாக்கினார் ஹைதர்.
சிப்பாய்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் என்னும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ஹைதர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஹைதருடைய படைவீரர்களின் எண்ணிக்கையோ 1,80,000. துப்பாக்கிகள் பீரங்கிகள் ஆகியவற்றை உருவாக்கவும் இயக்கவும் 210 ஐரோப்பியர்களையும் பணிக்கு அமர்த்தியிருந்தார் ஹைதர்.

1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அதனைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி:
“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.” ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

முதல் போரில் தோல்வி கண்டபின் நிஜாமுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க ஆங்கிலேயர்கள் ஹைதரை அழைத்தபோது அவர் அதற்கு இணங்கவில்லை. அதேபோல, பிளாசிப் போரில் ஆங்கிலேயர் வென்றுவிட்ட செய்தியறிந்த கணம் முதல் மராத்தியர்களையும் ஹைதர் எதிரியாகக் கருதவில்லை.

1780இல் தொடங்கி 1784இல் முடிந்த இரண்டாவது காலனியாதிக்க எதிர்ப்புப் போர்தான் ஹைதரின் கனவுப்போர். தன்னந்தனியே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்திக் கொண்டே, மராத்தாக்களையும் நிஜாமையும் இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஆங்கிலேயரைத் துடைத்தொழிக்க முயன்றார் ஹைதர். ஆனால், முதுகெலும்பில் தோன்றிய புற்றுநோய் அவரை 60வது வயதில் காவு கொண்டுவிட்டது.

மரணத்திற்குச் சில மணி நேரங்கள் முன், 1782 டிசம்பர் சித்தூர்ப் போர்க்களத்தில் இருந்தபடியே, மலபாரில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த தன் மகன் திப்புவுக்கு ஹைதர் எழுதிய கடைசி கடிதம் நெஞ்சை உருக்கும் ஓர் ஆவணம்.

அந்தக் கடிதத்தில் மைசூர் அரசின் பாதுகாப்பைப் பற்றி ஹைதர் கவலைப்படவில்லை. ஆசியாவில் கவுரவமான இடத்தைப் பெற்றிருந்த ‘இந்துஸ்தானம்’ சிதறிச் சின்னாபின்னமாகி விட்டதே என்று கலங்குகிறார். ‘இந்துஸ்தானத்’தின் மக்களுக்கு நாட்டின் மீதான நேசம் போய்விட்டதே என்று வருந்துகிறார். கவுரவத்தை இழந்து அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களின் துரோகமும், சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பும் காலனியாதிக்க எதிர்ப்புணர்வாக ஹைதரிடம் கருக்கொள்வதை நாம் காண்கிறோம்
.
ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டி முனையாக மைசூர் விளங்கவேண்டும் என்பதுதான் திப்புவுக்கு ஹைதர் விட்டுச் சென்ற உயில்.

நன்றி: வினவு

No comments:

Post a Comment