சிராஜ்-உத்-தௌலா

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. – குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.

ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிராஜ்-உத்-தௌலாவங்காள நவாபாக ஆனார்.

சிராஜ்-உத்-தௌலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது.

1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.

ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார்.

கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்

No comments:

Post a Comment