Thursday, February 21, 2013

'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்

இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்டென்ட். இது உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பைக்கொண்டது. ரத்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இதயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் 'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னையின் மூத்த இன்டர்வென்ஷனல் இதய நோய் சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலுவிடம் பேசினோம். 'இதயத் திசுக்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மாரடைப்பு வருகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவது, ரத்தம் உறைவது உள்ளிட்ட காரணங்களால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இந்த ரத்தக் குழாய்களைச் சரிசெய்யும் வகையில், 1977-ல் பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி முறை வந்தது. இந்த சிகிச்சையின்போது, தொடையில் உள்ள ரத்த நாளத்தில் சிறிய துளையிட்டு அதன் வழியே கம்பி போன்ற கருவி ஒன்றை அனுப்பி, அடைப்பு உள்ள இடத்தில் பலூன் போன்ற அமைப்பு ஒன்றை வீங்கச் செய்து அடைப்பு சரிசெய்யப்பட்டது. 

1988-ம் ஆண்டில், இதயத் திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பை உள்ளே செலுத்தி, குறிப்பிட்ட இடத்தை பலூன் துணையுடன் விரிவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது. வலை அமைப்பு விரிவாக்கப்பட்டதும் பலூன் சிறிதாக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுவிடும். இதனால், ரத்தம் செல்வதில் இருந்த தடை சரிசெய்யப்படும். இந்த உலோகத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இதன் அடுத்தக் கட்டமாக, 2002ம் ஆண்டில், மருந்து தடவப்பட்ட ஸ்டென்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது தற்போது முதன்முறையாக உலோக ஸ்டென்ட்டுக்கு மாற்றாக, இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும் ஸ்கேஃபோல்டு என்கிற புதிய ஸ்டென்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


பொதுவாக உலோக ஸ்டென்ட் என்பது கூண்டு போன்ற நிரந்தர அமைப்பு. நம்முடைய இதயத்தில் அது எப்போதும் இருக்கும். இந்த ஸ்டென்ட்டைப் பயன்படுத்தும்போது, அந்த இடத்தில் ரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்தம் கட்டியாவதைத் தடுக்க, பல ஆண்டுகளுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். புதிய கரையக்கூடிய இதய ஸ்டென்ட் தற்காலிகமானது. ரத்தக் குழாய் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில்தான் இது இருக்கும். இதன் பிறகு 12 முதல் 24 மாதங்களில் இந்த ஸ்டென்ட் இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும். இதனால், இந்த புதிய ஸ்டென்ட் பயன்படுத்துவதன் மூலம் 6 மாதங்களிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துவிடலாம்.

ரத்தக் குழாயானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. அப்படி சுருங்கி விரியும்போதுதான் அது ஆரோக்கியமாக இருக்கும். பழைய ஸ்டென்ட் நிரந்தர அமைப்பு என்பதால், ரத்தக் குழாயின் தன்மை பாதிக்கப்பட்டது. ஆனால், புதிய ஸ்டென்ட் ரத்தக் குழாயின் இயற்கையானத் தன்மையைப் பாதுகாக்கிறது. மேலும், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்க முடியும் என்பது இந்த ஸ்டென்ட்டின் மற்றொரு சிறப்பம்சம்'' என்கிறார் ஆர்வமும் நம்பிக்கையுமாக.

இதயத்துக்கு எத்தனை இதமான செய்தி! 

Thanks: vikatan.com

No comments:

Post a Comment