Tuesday, September 27, 2011

ஏர்-கண்டிஷன் அறையில் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் உருவாகும்!


உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனித குலத்துக்கு பல்வேறு நோய்களை பரிசாக தந்து கொண்டு இருக்கின்றன. மனநிலை பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. முன்பு 40 வயதுக்கு மேல் ஏற்பட்ட சர்க்கரை நோய் இப்போது குழந்தை பருவத்திலேயே வந்த விடுகிறது. மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

சிறுநீரக கல் பாதிப்பு பொதுவாக கோடை காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. சிறுநீரக கல் என்பது கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தின் கூட்டு கலவை ஆகும். அறிகுறி இருக்காது இந்த கல் கிட்னியில் அதாவது சிறுநீரக பையில் இருக்கும் வரை, அது தோன்றி இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது தான் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகிறது. சிலரால் அந்த வலியை தாங்க முடியாது. அப்போதுதான், சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பது தெரிய வரும்.
 
 
சிறுநீரக கல்லை அகற்ற இரண்டு விதமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு மருந்து- மாத்திரை மூலம் குணப்படுத்திவிடலாம். சிறுநீரக கல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் பாரி கூறியதாவது:- சென்னை நகரில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைகள், நகரத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி போன்றவைதான் இதற்கு காரணம்.
 
 
ஏர்-கண்டிஷன் செய்யப் பட்ட அலுவலகங்களில் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் உணராமலேயே ஆண்டு முழுவதும் சிறுநீரகத்தில் கல் இருந்து வரும். ஏர்-கண்டிஷன் அறையில் இருப்பதால், இவர்களுக்கு தாகம் எடுப்பதில்லை. இதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உடலில் உப்புச் சத்து அதிகரிக்கிறது. இது சிறுநீரக கல் உருவாக வாய்ப்பாகி வருகிறது.
 
 
எங்களிடம் வரும் நோயாளிகளில் அதிகமானோர் 25 முதல் 45 வயதினர் ஆவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள். இளம் வயதினர் அதிக உப்புச்சத்து கொண்ட உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். துரித உணவுகளில் உப்பு, காரம் அதிகமாக காணப்படும். பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. உண்மையில் பால் அதிகம் குடித்து வந்தால், கிட்னியில் கல் உருவாவதை தவிர்க்க முடியும்.

Source: addtoany.com

No comments:

Post a Comment