Sunday, November 20, 2011

அயல்நாடுகளை அசத்திய அழகர்சாமி முருங்கை காய்.....

சர்வதேச அளவில் காய்கறிச் சந்தைகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘பள்ளப்பட்டி அழகர்சாமி வெள்ளியங்கிரி முருகன்’ (PAVM–) என்ற முருங்கைக்காய். திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி அழகர்சாமி கண்டுபிடித்த 5வகை ஒட்டு முருங்கை ரகமான இதில் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அபார ருசி கொண்ட இவ்வகை முருங்கை, நடவு செய்த 6மாதங்களிலிருந்து காய்ப்புக்கு வந்து, வருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலும் 3000காய்கள்வரை காய்க்கும் (மொத்த எடை சுமார் 300கிலோ இருக்குமாம்!). அழகர்சாமியைச் சந்திக்க அவரது தோட்டத்திற்குச் சென்றோம். ‘பச்சை முருங்கைத் தோட்டத்தை’ சுற்றிக்காட்டியபடி உற்சாகமாகப் பேசுகிறார்...


"பரம்பரை பரம்பரையா விவசாயக் குடும்பம் எங்களுடையது. கிராமமாக இருந்தாலும், என்னை எம்.பில்., பிஎச்.டி. வரை படிக்க வெச்சாங்க எங்க அப்பா, அம்மா. கல்லூரி நூலகத்தில், ஒருநாள் பழங்காலச் சித்தர் அகத்தியர் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நூலில் முருங்கை மரம் சாதாரண மரம் இல்லை. இலை, காய், பட்டை, வேர், பிசின் போன்ற அனைத்தும் மருத்துவக் குணம் வாந்தவை. மூலிகைக் குணம் நிறைந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப் படித்தவுடன் முருங்கையின் மீது எனக்கு பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது.

அன்றிலிருந்து முருங்கை பற்றிய பல தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். பி.கே.எம் 1,பி.கே.எம். 2என்ற இரு குறுகிய கால ரகங்களை மட்டுமே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். அந்த ரகத்தை இரண்டு வருடங்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். காற்று அடித்தால் சாய்ந்துவிடும். இதையெல்லாம் அறிந்த நான், நல்ல முருங்கை ரகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த ரகம் அதிகம் காய்க்கக் கூடியதாகவும், நல்ல லாபம் கொடுப்பவையாகவும், 60வருடங்கள் வரை நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.அதனால் முழுமையாக முருங்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன்" என்று முருங்கை ஆராய்ச்சியின் முன்கதைச் சுருக்கத்தை விவரித்தார்.

தொடர்ந்து, "நாட்டு முருங்கையில் ஐந்து ரகங்களை மட்டுமே ஆய்வு செய்யத் தேர்வு செய்தேன். மகரந்தச் சேர்க்கையின் மூலம் ஒன்றன்பின் ஒன்றாக அந்த ரகங்களுக்குள் கருவுறுதல் ஏற்படுத்தி ஆய்வு செய்தேன். ஐந்து ரக முருங்கை மரங்களின் மகரந்தத் தூள்களையும், ஒரு மரத்தின் சூல் முடியில் தூவி விடுவதன் மூலம் புதிய ரகம் உருவானது. பின்னர் அந்த விதைகளைப் பயிர் செய்து கன்றுகளாக வளரச் செய்தேன். முதலில் 70செடிகள் மட்டும் உருவாக்கி 1ஏக்கர் அளவுள்ள, என் சொந்த நிலத்தில் நடவு செய்தேன். 

பரிசோதனை செய்து பார்த்தபோதே, ஒரு வருடத்திற்கு, ஒரு ஏக்கருக்கு 2லட்சம் ரூபாக்கு மேல் லாபம் கிடைத்தது. முன்பெல்லாம் தோட்டத்தில் கரும்பு, திராட்சை, கத்தரி போன்றவற்றைத்தான் பயிர் செய்தேன். இவை அனைத்திலும் குறைந்த வருமானமே கிடைத்தது. ஆனால் முருங்கையில் மட்டும்தான் அதிக லாபம் கிடைத்தது. இந்தக் கண்டுபிடிப்பிற்காக 12வருடங்கள் கடுமையாக உழைத்தேன். நினைத்தபடியே சாதித்துவிட்டேன்" என்றார் அழகர்சாமி பெருமிதத்துடன். தன்னுடைய ஆராச்சியிலேயே 12வருடங்களைக் கழித்ததால், தற்போதுதான் அழகர்சாமி திருமணம் செய்துள்ளார்.

அழகர்சாமியின் 5வகை ஒட்டு முருங்கைச் செடி ஒன்றின் விலை 40ரூபாய். இந்த முருங்கைகள் செழிப்பாக வளர்வதற்கான இயற்கை உரத்தையும், இவரே தயாரித்துத் தருகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, மலேஷியா, ஸ்ரீலங்கா, நைஜீரியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கும், அழகர்சாமியின் முருங்கைகள் ஏற்றுமதியாகின்றன.

"நம் நாடு 64சதவீதம் விவசாயத்தையே நம்பி இருக்கு. ஆனால், இன்றுள்ள சூழலில் விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. விவசாயத் தொழில் செழிக்கணும்ன்னா விவசாயிகளை ஊக்கப்படுத்தி, மாணவர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு வேளாண்மை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் விவசாயம் பற்றி என்னிடம் பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள். விவசாயம் தழைக்க என்னாலான முயற்சிகளை தொடர்ந்து செய்வேன்" என்கிறார் இந்த ‘விவசாய விஞ்ஞானி’.

விருதுகள் விளைச்சல்

அழகர்சாமியின் முருங்கை கண்டுபிடிப்பைப் பாராட்டி மத்திய அரசு, ‘நேஷனல் வின்னர்’ விருதும்’, ‘சிறந்த இயற்கை விஞ்ஞானி’ விருதும் அளித்து 3 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவித்துள்ளது. அகமதாபாத்திலுள்ள சிருஷ்டி தேசியக் கண்டுபிடிப்பு நிறுவனம், ‘தேசிய சிருஷ்டி சல்மான்’ விருது வழங்கியுள்ளது. மேலும் ‘தங்கச் சாதனையாளர்’, ‘முருங்கை விஞ்ஞானி’, ‘இயற்கை விவசாய ஞானி’ போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தோட்டக்கலைத்துறையிடமும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார் அழகர்சாமி
ஆக்கம்: பூ. சர்பனா

No comments:

Post a Comment