"ஸ்டெம் செல்" உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளில் நம்பிக்கை தரும் வெற்றிகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு, ஸ்வீடன் நாட்டில், பத்து வயது சிறுமியின் ஸ்டெம் செல் உதவியால், ரத்த நாளத்தை வளர்த்தெடுத்துப் பொருத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருப்பவர் மருத்துவர் சுசித்ரா ஹோல்கர்சன். உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ள இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் படித்தவர். பத்து வயது சிறுமியின் கல்லீரலுக்கு ரத்தம் கொண்டு செல்லும் நாளம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதால், அந்தச் சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் நேர்ந்தது.
ரத்தநாள மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாலும் போதும் என்று மருத்துவர்கள் தீர்மானித்தனர். அச்சிறுமியின் கழுத்து அல்லது கால் பகுதியிலிருந்து ரத்தநாளங்களை வெட்டி எடுத்தால், வளர வேண்டிய அச்சிறுமிக்கு பின்விளைவுகள் ஏற்படும். ஆகவே, உடல்தானம் கொடுத்தவரின் இடுப்பிலிருந்து 9 செமீ ரத்த நாளத்தை எடுத்து, அதில் இருந்த செல்களை அகற்றிவிட்டு, வெற்றுக்குழாய் போல மாறிய அந்த ரத்தநாளத்தில், சிறுமியின் எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்துப் பொருத்தினர். இரு வார காலம், இன்குபேட்டரில் அதை வளர்த்து, சிறுமியின் கல்லீரலில் பொருத்தினர். இப்போது சிறுமி நலமாக இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது: ஓராண்டுக்குப் பிறகுதான் இந்த வெற்றியைப் பறைசாற்றுகிறார்கள்!
இந்தப் புதிய முறை மேலும் பல்வேறு சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ரத்த தமனி, நாளம் ஆகியவற்றை ஸ்டெம் செல் மூலம் இவ்வாறு உற்பத்தி செய்ய முடியும் என்றால், இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சையிலும்கூட இத்தகைய முறையைப் பயன்படுத்த இயலுமே என யோசிக்க வைத்திருக்கிறது இந்த வெற்றி. இருப்பினும், "இந்த வெற்றியில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்' என்கிறார் டாக்டர் சுசித்ரா. ஸ்டெம் செல் தொடர்பான அறுவைச் சிகிச்சைகள் இந்தியாவில் மிகக்குறைவு. உலக அளவில் ஒப்பிட்டால் 0.25% மட்டுமே. ஆனால், இந்தியாவில் மருத்துவச் செலவு வெளிநாட்டவருக்கு மிகக் குறைவாக இருக்கிறது. ஆகவே, ஸ்டெம் செல் விவகாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. இந்தியாவில் தொப்புள்கொடி ரத்த வங்கிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. "உங்கள் குழந்தைகளின் நலனுக்காக இப்போதே தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வையுங்கள்" என்ற வாசகங்களுடன் இவை இளம் தம்பதிகளை வளைய வருகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு வலைவீசுகின்றன. குழந்தைகளின் ஸ்டெம் செல்களை ஒரு காப்பீட்டுத் திட்டம்போல சேமித்து வைப்பது குழந்தைக்காக நாம் செய்யும் சிறு முதலீடு என்கின்றன
இந்த தொப்புள்கொடி ரத்த வங்கிகள். இவர்கள் குறிப்பிடும் தொகையைச் செலுத்தினால், அவர்களே மகப்பேறு நடைபெறும் மருத்துவமனைக்கு வந்து, குழந்தைக்கு தொப்புள்கொடி அறுத்தவுடன், குழந்தைக்குத் தேவைப்படாத தொப்புள்கொடியில் தேங்கியிருக்கும் ரத்தத்தைச் சேகரித்து, -196 செல்ஸியஸ் குளிர் நிலையில் உறைய வைத்துப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதாகக் கூறுகிறார்கள். தேவைப்படும்போது இந்த ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். தனிப்பயன்பாடு என்றால் அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுக்க வேண்டும். தானம் என்றால் அவர்களே வந்து தொப்புள்கொடி ரத்தத்தை ஆய்வுக்காகவும் தேவைப்படின் மற்றவர்களுக்குப் பயன்படுத்தவும் எடுத்துச்செல்வார்கள்.
அதெல்லாம் சரி. ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் குறித்து இந்திய அரசின் கொள்கை முடிவு என்ன? ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் இந்தியா எந்த அளவுக்கு ஈடுபட்டு வருகிறது? சிகிச்சைகளில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இத்தகைய ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனைக்கு என்ன வசதிகள் இருக்க வேண்டும்? டாக்டர்களுக்கு எத்தகைய பயிற்சி இருக்க வேண்டும்? இதுபற்றி இன்னும் தெளிவான முடிவுகள் எதுவும் இல்லை. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐசிஎம்ஆர்) தற்போதுதான் ஸ்டெம் செல் ஆய்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் குழு அமைத்திருக்கிறது. அவர்கள் இன்னமும் நெறிமுறைகளை உருவாக்கவில்லை.
இந்நிலையில், தொப்புள்கொடி ரத்த வங்கிகளை யார் கட்டுப்படுத்துவது? ஏதோ ஒரு கோளாறினால், தொப்புள்கொடி ரத்தம் கெட்டுப்போய்விடுகிறது என்றால் யார் பொறுப்பேற்க வேண்டும்? எல்லோரிடமும் பணம் வாங்கிக்கொண்டு, ஒரு நிறுவனம் திடீரென காணாமல் போனால் பணமும்போய், குழந்தையின் தொப்புள்கொடி ரத்தமும் இல்லாமல் போகுமே! இதற்காக இந்த நிறுவனங்கள் அரசுக்கு வைப்புநிதி அளிக்க வேண்டாமா? இந்த நிறுவனங்கள் நிஜமா போலியா? சர்வதேச நிறுவனம் என்று சொல்லிக் கொள்வதாலேயே அவை உத்தரவாதம் மிக்க நிறுவனங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச அளவில்தான் போலி நிறுவனங்கள் பல இயங்குகின்றன. ஸ்டெம் செல் ஆராய்ச்சியே இன்னும் முழுமை பெறவில்லை என்கிற எதிர்ப்பும் மருத்துவ உலகில் இருக்கிறது.
புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்ற திசுப்பெருக்கம். ஸ்டெம் செல் கட்டுப்பாடுடன் நடைபெறும் திசுப்பெருக்கம். இதில் தவறு நேர்ந்தால்... சிகிச்சையே நோயாக மாறலாம் என்று அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை குறித்து இந்திய அரசு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதோடு, மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், இதிலும் மக்கள் பல ஏமாற்றங்களையும் பொருளிழப்பையும் சந்திக்க நேரிடும்.
ஸ்டெம் செல் ஆய்வு மனித குலத்திற்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து அரசு தெளிவான கொள்கை முடிவு எடுத்து, அதில் ஈடுபடும் நிறுவனங்களைக் கண்காணிப்பு வளையத்தில் இப்போதே கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, கடமையும்கூட.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment