இந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள்.
தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்........
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும் எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால் 7 கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால் அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர, அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை நிலையாக இருந்தது.
இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம் ராணுவத்தில் தனி மரியாதைச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனி பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள் அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.
1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம் நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது.
பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.
மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.
இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி இலங்கையைச் சார்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.
அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம்.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும் இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி பொறுப்பாவார்கள்?
இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை
இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும் வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று படுவோம்.
சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன.
ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச் சிறந்தது.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள் பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.
எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை.
இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம் அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில் ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?
எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக? எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன், சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.
1. இதற்கான தீர்வுதான் என்ன?
2. இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?
3. நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?
இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்?
இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால் தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கின்றன.
இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில் எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால் அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில் எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு.
ஆட்சி கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.
இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். நமக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்; இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும் கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.
இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவர் என்பது நிச்சயம்.
பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும்
நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன? இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த விதத்தில் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான். 1. அறிவு 2. ஆயுதம்
ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள்.
தமக்காக சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால் ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர் மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம் ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.
இந்தியாவில் முஸ்லிம்களின் பலம்
மாநிலத்திற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?
இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும்
இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழிகாட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.
தமிழக முஸ்லிம்களின் பலம்
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கேயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை துரைமுகம்
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எக்மோர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.
இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.
தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.
சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும்.
இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.
இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?
தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.
தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.
நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா? நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!
நன்றி : சகோ. Naseerudeen Mohammed
No comments:
Post a Comment