Tuesday, March 29, 2011

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே.........

 திருமண வயது ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்கிறது திருமணச்சட்டம். திருத்தப்பட்ட திருமணச் சட்டமோ ஆணுக்கு 23, பெண்ணுக்கு 21 வயது என்கிறது. இருவீட்டார் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், பெரும்பாலும் சட்டப்படி நடக்கிறது. ஆனால் காதல் வயப்படுவோர், வயது வித்தியாசம் ஏதும் பார்ப்பதில்லை. பெற் றோர் எதிர்ப்பால் தாங்கள் பிரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், வீட்டிலிருந்து "ஓடி' திருமணம் செய்து கொள்கின்றனர். பிள்ளைகளை காணாத பெற்றோர் போலீசில் புகார் அளிக்கும்போது, பல நாள் தேடலுக்கு பின் "காதலர்களை' பிடித்து அழைத்து வருகின்றனர்.


இருவருமே, திருமண வயதை எட்டாதவர்கள் என்கிற நிலையில், வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணையை துவக்க வேண்டியது போலீசின் கடமை. ஆனால், சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்களது படிப்பு பாழாகிவிடுமே என்ற அக்கறையுடனும் பஞ்சாயத்து பேசி, பெற்றோருடன் அனுப்பி விடுகின்றனர். மனமுவந்தோ அல்லது வேறுவழியில்லாமலோ "காதலர்கள்' பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே கோவையில் நடந்தன. தற்போது, அதிகளவில் நடக்கிறது
.
கோவை மாநகர கிழக்கு சப்-டிவிஷனிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், கடந்த வாரத்தில் மட்டுமே 5 "காதலர் ஓட்டம்' சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் என்ன வியப்பு என்றால், ஒரு புகாரில், "காதலன்' வயது 17; காதலி வயது 19. நகரில் கிளினிக் நடத்தும் டாக்டரின் மகள் (இவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்கிறார்), தன்னைவிட இரண்டு வயது இளையவனை காதலித்து வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்;  காதலன் 8ம் வகுப்பு படித்தவன். டாக்டர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஜோடியை பிடித்து வந்து இருவருக்கும் தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதற்கான பேச்சு, நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்து, ஒரு வழியாக தீர்வு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், இன்ஜி., கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவன், 17 வயது இளம்பெண்ணுடன் காதல் கொண்டு, இருவரும் காணாமல் போயினர். மாணவனின் தந்தை போலீசாரிடம் அளித்த புகாரில், "பெண் வீட்டார், தனது மகனை கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளனர்' என தெரிவித்திருந்தார். விசாரணை நடத்திய போலீசார், இளம்பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு பேர் மீது "ஆள்கடத்தல்' பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 மூன்றாவது சம்பவத்தில் பள்ளி மாணவி ஒருவர், கூலி வேலை செய்யும் இளைஞனுடன் காணாமல் போனார். இருவரையும் மீட்டு வந்த போலீசார், அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போன்று மேலும் இரு சம்பவங்கள் வேறு இரு போலீஸ் எல்லைக்குள் நிகழ்ந்து பஞ்சாயத்து பேசி தீர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை நகரில் 11 மைனர் காதல் ஜோடிகள் மாயமாகி, போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில ஜோடிகள், திருமணமும் செய்து கொண்டன. இவர்களது திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால், இருதரப்பு பெற்றோர் முன் நடந்த பேச்சில் ஜோடிகள் பிரிக்கப்பட்டு, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
.
இதுகுறித்து,  போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சினிமாவும், "டிவி'யும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டுவிடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, வீட்டிலிருந்து வெளியேறி திருமணமும் செய்து கொள்கின்றனர். "பிள்ளையை காணவில்லை' என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து மீட்கிறோம். இரு வீட்டாரும் கண்ணீர் மல்க போலீஸ் ஸ்டேஷனில் தங்கள் பிள்ளைகளிடம் அழுது புரண்டு சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவங்களும் இதற்கு முன் நடந்துள்ளன. 

பள்ளி வயதிலேயே கர்ப்பமடைந்த மாணவி ஒருவர், காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி எங்களிடம் புகார் அளித்த சம்பவமும் நடந்தது.  இதுபோன்ற சம்பவங்களின் போது ஆள்கடத்தல், கற்பழிப்பு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து "காதலனை' கைது செய்து சிறையில் அடைக்கவே முடியும்; தவிர்க்க முடியாத நிலையில், இவ்வாறான நடவடிக்கையையும் மேற்கொள்கிறோம்.
அதே வேளையில் மைனர் திருமணம் நடந்திருக்காவிடில், பெற்றோருடன் பேச்சு நடத்தி "பிரித்து' அனுப்புகிறோம். இருதரப்பும் உடன்பட்டால் மட்டுமே இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது; இல்லாவிடில், வழக்குப்பதிவு செய்வதை தவிர வேறு வழியில்லை. மைனர் காதல் திருமண முயற்சி புகார்களை விசாரிப்பது சாதாரண காரியமல்ல; பல மணி நேரம் பேச்சு நடத்தியே தீர்வு காணமுடியும். இதற்கான பேச்சுகளின் போது போலீசாரின் பணி நேரம் விரயமாகிறது;  

அவசியமற்ற பல தொல்லைகளும், அதனால் தலைவலியும் எங்களுக்கு ஏற்படுகிறது.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், பள்ளியில் அவர்கள் என்ன செய்கிறார்கள், முறையாக வகுப்புக்கு செல்கிறார்களா என, அவர் களது நடத்தையை மறைமுகமாக கண்காணிப்பதும் அவசியம். வீட்டில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது எண்ணம், நோக்கம், செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கு அனுப்புவதோடு கடமை முடிந்தது என நினைத்தால், பிள்ளைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
நன்றி: பயனுள்ளதகவல் குழுமம்

No comments:

Post a Comment