Sunday, March 4, 2012

நான் போலீஸ் இல்ல பயங்கரவாதி!

இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வங்கி கொள்ளையர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு பாராட்டு என்று செய்திகள். இது போலீஸ்காரர்களை பாராட்டும் விஷயம் இல்லை. இது போலீசாரின் கையாலாகாத தனத்தை, கோழைத்தனத்தை, பயங்கரவாதத்தையே காட்டுகிறது. வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக அவர்களை சுட்டு கொல்லும் அளவுக்கு போக வேண்டியதன் அவசியம் என்ன?

எத்தனையோ வழிகள் இருக்கிறது அவர்களை மடக்கி பிடிக்க. மயக்க மருந்து கலந்த ஊசிகள் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தலாம். மனிதர்களை வேட்டையாடும் யானை, சிங்கம், புலி போன்றவற்றை யாரும் சுட்டு கொன்று விடுவது இல்லை. அதை பிடிக்க மயக்க மருந்து ஊசி கொண்ட துப்பாக்கியால் சுட்டு பிடிக்கிறார்கள். ஏனென்றால் அதை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கிறது.

மனித உயிர்கள் அவ்வளவு கேவலமாக போயிவிட்டது. வங்கிகளை கொள்ளையிடும் திருடர்களை சுட்டு உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே கோடிகணக்கில் மக்கள் சொத்துக்களை கொள்ளையிட்ட கனவான்களை எல்லாம் என்ன செய்யப்போகிறீர்கள். கள்ளச்சாரயமும், ரவுடிசமும் பண்ணும் உங்களின் கூட்டாளிகள் செய்த கொலைகள்தான் எத்தனை அதற்கெல்லாம் நீங்கள் துப்பாக்கி தூக்கியதுண்டா? நாய்கள் மாதிரி நன்றியோடு அவர்களுக்கு வால் ஆட்டிநீர்களே.

நீங்கள் அடிக்காத மாமூல் கொள்ளையா? அராஜகமா? செய்யாத காவல் நிலைய கற்பழிப்புகளா ? பண்ணாத காவல் நிலைய கொலைகளா? இராமநாதபுரம் துப்பாக்கி சூட்டில் நீங்கள் கூலி படைகள் போல் வெறி கொண்டு பொதுமக்களை சுடும் படங்கள் பதிவாகி இருக்கிறதே. உங்களை போலீஸ் என்று சொல்ல முடியுமா? ஐரோப்பிய நாடுகளின் போலீஸ் என்றால் மக்களை பாதுகாக்க கூடியவர்கள். நீங்களோ மக்களின் உயிரை குடிக்கும் ஓநாய்கள்.

போலீஸ் என்கிற பெயரில் திருடர்களும், கொள்ளைகாரர்களும், பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், ஒளிந்திருக்கும் ஒரு நாடுதான் இந்தியா. நாம் தைரியமாக சொல்லலாம் ஒரு சிலரைத்தவிர பெரும்பான்மையானோர் மனசாட்சிகளே இல்லாத மிருகங்கள். கொள்ளையர்கள் தங்களை நோக்கி சுட்டதால், பொதுமக்களை பாதுகாக்கவும், தங்களை பாதுகாக்கவும் பதிலுக்கு சுட்டோம் என்று இவர்கள கூறியுள்ளனர்.

பொதுமக்களை பாதுக்காக்க சுட்டது என்று சொல்வது எல்லாம் மாய்மாலம். இது போன்ற சம்பவங்களில் வீரதீரமாக செயல்பட்டோம் என்று காட்டி கொள்வதற்கும், பதவி உயர்வு கிடைக்கும் என்கிற நோக்கிலுமே இது செய்யப்பட்டது என்று சொல்லலாம். ரவுடிகளிடம் மாமூல் வாங்கிகொண்டு அவர்களை வளர்த்து விடும் இவர்கள் அவர்களை என்கவுண்டர் செய்து பதவி உயர்வு அடைவது என்று ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கும் கயவர்கள். என்கவுண்டர் பண்ணினால் பதவி உயர்வு என்று இவர்களுக்கு ஒரு சலுகை இருக்கும் வரை இவர்கள் இதனையே செய்து குறுக்கு வழியில் முன்னேற துடிப்பார்கள்.

போலீசாரின் வழக்கமான என்கவுண்டர் முறையே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம் என்று சொல்லி இரண்டு போலீசாரை ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் படுக்க வைத்துவிடுவது. இதுவரை செய்யப்பட்ட எல்லா என்கவுண்டர்களுமே நீதிமன்றத்தில் போலி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையர்களை சுட்டு கொன்றதும் அதிலேயே அடங்கும். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளியே வரும். கொள்ளையர்கள் ஒன்றும் நவீன ஆயுதங்களோடு வந்திருக்கவில்லை. ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகளில் இருந்து இவர்கள் இதுபோன்ற கொள்ளைகளில் பொம்மை துப்பாக்கிகளையே பயன்படுத்தினர் என்று தெரியவருகிறது. இது ஒரு பகிரங்கமான போலீஸ் பயங்கரவாதம்.

No comments:

Post a Comment