Thursday, March 29, 2012

அணு உலைகள் பேராபத்தா அல்லது பாதுகாப்பானதா ?

இந்த அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்.

முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!

ஆமாம். அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.

ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.

மேலும் பூமியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூமியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.

இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம்.

மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.
 
இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும்.
நன்றி: கீற்று.காம்

No comments:

Post a Comment