Thursday, March 29, 2012

அணு உலையின் தொழில் நுட்பம் & அணு மின்சாரம் தயாரிப்பு முறை..!

உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது).

டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம். யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.

கூடங்குளம் அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.
Source:  http://keetru.com 

No comments:

Post a Comment