Friday, January 13, 2012

தானே புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய புதுவை ,கடலூர் மாவட்டத்தின் நிலை..

புதுச்சேரி-கடலூர் இடையிலான ‘ரெட்டிச்சாவடி’ என்கிற ஊரில் கரையை கடந்த, ‘தானே’ புயல் ஓர் ஊழித் தாண்டவத்தை நடத்தி ஓய்ந்திருக்கிறது. சுனாமியைவிட பயங்கரம் இது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். கடலூர் மக்களுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் 2011ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகி விட்டது. ‘புயல் என்றால் அது நானே’ என காட்டிவிட்டுச் சென்றுள்ளது, ‘தானே’ புயல். 2004ம் ஆண்டு சுனாமியைவிட இந்தப்ப புயலின் கோரத் தாண்டவம் அதிகம் என்கிறார்கள் மக்கள்.
"எனக்கு வயது 52 ஆகிறது. கடலூர்தான் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம். எனக்குத் தெரிந்து இதுவரை 5 தடவைக்குமேல் கடலூரை புயல் தாக்கியுள்ளது. ‘தானே’வுக்குகப் பிறகுதான் புரிகிறது... இதற்குமுன் வந்ததெல்லாம் புயல் இல்லை, பலத்த சூறைக்காற்று என்று. 

 
புயல் கரையை கடக்கும்போது காற்று பயங்கரமாக இருக்கும் என்று சொன்னார்கள். முந்தின நாள் மாலையிலிருந்தே காற்றும் மழையும் வானத்தைக் கிழித்ததுபோல கொட்டியது. சிறிது நேரத்தில் வீட்டிற்குள்ளே மழை நீர் வர ஆரம்பித்தது. இதுவரை இப்படி ஒரு பயங்கரத்தைப் பார்த்ததில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் இருந்தோம். பலத்த சத்தத்துடன் வீசிய காற்றில் படபடவென்று மரங்கள் சாயும் சத்தமும் வீடுகளின் மேற்கூரைகள் உடையும் சத்தமும் தெரு நாய்களும், கால்நடைகளும் மரண ஓலமிடும் சத்தமும் இன்னும் காதுகளிலேயே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


எந்த நேரத்தில் வீடு இடிந்து விழுமோ என்ற பீதியில், ‘எப்படி அந்த இரவைக் கழித்தோம்’ என்று இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது" என்கிறார் சகுந்தலா.


சகுந்தலா மட்டுமல்ல, கடலூர்வாசிகள் யாரைப் பார்த்தாலும் இன்னும் முகத்தில் புயலின் கலவரமும் அதன்பின் நகரமே சின்னாபின்னமாகிக் கிடக்கும் சோகமும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.


31 பேரைப் பலி வாங்கிய, ‘தானே’ புயல் கரையை கடந்த பின், கடலூர் மாவட்டத்தை சுற்றிப் பார்த்தால் புயலின் கோரத் தாண்டவத்தை உணர முடியும். எங்கும் விழுந்து கிடக்கும் மரங்கள், பழுதான டிரான்ஸ்பார்மர்கள், சரிந்து கிடக்கும் 150 அடி உயர மின் கோபுரங்கள் என போர் நடந்த பூமிபோல் இருக்கிறது. புயலுக்குமுன் பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டிய குழிகளில் மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. பாதாளச் சாக்கடை உடைந்து, பல குடிசைப் பகுதிகள் கழிவு நீரில் மிதக்கின்றன. கடலூர் தபால் அலுவலகம் சாலையில் சுப்பராயலு பூங்கா இருந்ததற்கான அடையாளம் தற்போது புதர் மண்டிய மரம், செடிகளுக்கிடையே இருக்கும் மணிக் கூண்டு மட்டுமே.


ஆண்டுதோறும் நடக்கும் பொருட்காட்சி இந்த ஆண்டும் கடலூரில் உற்சாகமாகத் தொடங்கியது. பொருட்காட்சியை பார்க்க வந்த, ‘தானே’ அங்கிருந்த கடைகள், அரங்கம், காட்சிக்கு வைத்திருந்த பொருட்கள் என எல்லாவற்றையும் தானே அள்ளிக் கொண்டு போய்விட்டது.


சில்வர் கடற்கரையில் உள்ள பூங்கா, படகு குழாம் உருக்குலைந்து கிடக்கின்றன. பெரியார் கலைக்கல்லூரி மைதானம் ஏரிபோல் மாறிவிட்டது.


துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி அமர்ந்து, ‘படகுக் கோபுரமாக’ காட்சி அளிக்கிறது. நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் மட்டும் 25 மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மொத்தத்தில் கடலூர் மாவட்டம் மொத்தமும் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து என்று எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. மின்சாரம் இல்லாததால் ஒரு மெழுகுவர்த்தி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.


கடலூரில் மட்டும் விவசாய நிலங்களில் சாகுபடி செய்த நெல், கரும்பு, மா, பலா, வாழை அனைத்தும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.


கடலூர் மாவட்டத்திலேயே பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளை பகுதிதான் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அங்கு வீடுகள் இழந்த 400 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற கிராமங்களில் பாதிக்கப்பட்டோரையும் மண்டபங்களிலும், முகாம்களிலும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


1972ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் புயல் இந்தப் பகுதியில் கரையை கடந்துள்ளது. இந்தப் புயலால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகள் சேதமடைந்துள்ளன. 60 சதவிகித மரங்கள் முற்றிலும் சாய்ந்துவிட்டன. 2,500 கிராமங்கள் புயலால் உருக்குலைந்துள்ளன. கால்நடைகள் 50 சதவிகிதத்திற்குமேல் உயிரிழந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கடலூரைத் தாக்கிய மூன்றாவது புயல் இது.


நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்தாலும் மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.


நெடுஞ்சாலையில்...

ஷ்யாம்


"குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு 30ம் தேதி காலையில் ஏழு மணிக்கெல்லாம் திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்டோம். புயல் உருவாகியிருப்பது, கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையில் கரையை கடக்கலாம் என்கிற வானிலை அறிக்கை தெரியும். இருந்தாலும் கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையில்தானே, நாம்தான் திருச்சியிலிருந்த சென்னைதானே வரப்போகிறோம் என்று நினைத்துதான் புறப்பட்டோம். திருச்சியை தாண்டியவுடன் லேசாக மழை பெய்தது. விர் விர் என்று காற்றும் அடிக்க ஆரம்பித்தது.


விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். ரொம்பவும் பயந்து, 30 கி.மீ. வேகத்தில்தான் பயணித்துக் கொண்டிருந்தோம். சின்னக்குப்பம் என்ற இடத்தில் வந்தபோதுதான் அந்த அதிர்ச்சி. கண்ணெதிரே ஒரு பெரிய கண்டெய்னர் லாரியை அப்படியே தூக்கிக் கவிழ்த்தது புயல். சென்டர் மீடியனில் லாரி கவிழ்ந்தவுடன் அப்படியே ஒரு பக்கத்தில் போக்குவரத்து தடைபட்டது.


நேரம் ஆக ஆக, காற்றின் வேகம் பயங்கரமாக இருந்தது. இவ்வளவு பெரிய கண்டெய்னர் லாரியே தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால், காரின் கதி என்ன என்ற பயம் ஒரு பக்கம். காரை நிறுத்தினால், ஓட்டும்போது இருந்ததைவிட அதிகமாக ஆடுகிறது. போய்க்கொண்டே இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.


மனைவி, பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டார். மாரனோடை என்ற இடத்திற்கு வந்தபோது இன்னொரு லாரி கவிழ்ந்து கிடந்தது. நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் இருந்த கடைகள், உணவகங்கள் ஒன்றின் மேற்கூரையைக் கூட காணோம். எல்லாவற்றையும் ‘தானே’ தூக்கிப் போய்க் கொண்டிருந்தது.


அந்தப் பீதியிலும் சற்றே நம்பிக்கையை கொடுத்தது, லாரி கவிழ்ந்தவுடன் கண் இமைக்கும் நேரத்தில் உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, காவல்துறை வண்டி மூன்றும்தான்."


புதுச்சேரி

புதுவையின் முக்கிய சாலையான நேரு வீதி கலவரம் நடந்த பகுதிபோல் இருந்தது. அங்குள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ‘தானே’வுக்கு இரையாகி விட்டன.  அலைகள் எழும்பி வரும்போது கடற்கரையின் ஓரமாகப் போடப்பட்டிருந்த பாறைகளைத் தூளாக்கி, அலைக் கரங்களால் அவற்றை எடுத்து சாலையில் வீசின. சுத்தமான சாலை என பெயர் பெற்ற கடற்கரைச் சாலை மண் மண்டி, குப்பைக்கூளமாகக் காட்சியளித்தது. கடற்கரையில் வேன் ஒன்றில் ஓர் உணவகம் இருக்கும். அந்த வேன் மீது மரம் விழுந்து, கார் அப்பளம் போல நொறுங்கிக் கிடந்தது.


விழுப்புரம்

‘தானே’ புயலின் தாக்கம் விழுப்புரம் மாவட்டத்தையும் மிகவும் பாதித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.


புதிதாக திறக்கப்பட்ட ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகை, மேற்கூரை பறந்து சென்று நீண்ட தொலைவில் விழுந்து கிடந்தன. நடைமேடையின் மேற்கூரைகள், மின் விசிறிகள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன.


அரசு பேருந்துகள் பெரும்பான்மையானவை பராமரிப்பின்றி இருந்ததால் தண்ணீர் ஒழுகி, பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.


மழை, காற்று காலங்களில் பெரும்பாலும் மரங்கள் சாய்வதினால்தான் சேதம் ஏற்படும். இந்த முறை செல்போன் டவர்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. முழுவதும் சாய்ந்தோ, பாதி உடைந்தோ, பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. விழுப்புரத்தின் முக்கிய சாலையான கிழக்கு பாண்டி ரோட்டில் செல்போன் டவர் பெயர்ந்து ஒரு பாதி, கீழே நின்றிருந்த வேன் மீதும் மறு பாதி எதிர்ப்புறம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீதும் விழுந்துள்ளன. இதில் வேன் டிரைவர் காயமடைந்தார்.


புயல் மற்றும் மழையால் அதிகம் வெளியே வர முடியாதபடி பாதிக்கப்பட்டவர்கள் இரு சக்கரம் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள்தான். மழையில் நனைந்துகொண்டே சென்ற இருவர், ‘புத்தாண்டு சபதமாக கார் வாங்கியே தீருவோம்’ என சூளுரைத்தபடி சென்றனர். புயல், ‘தானே’ வந்தால் காரும் தானே வரும்போல!
நன்றி: புதிய தலைமுறை.காம்

No comments:

Post a Comment