Thursday, January 19, 2012

புயல் நிவாரணம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... நிதி இல்லாமல் நடக்கும் கண் துடைப்பு நாடகம்!

விவசாய நிலங்களை புயல் சூறையாடிச் சென்று 15 தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னமும் முழுமையான அடிப் படை வசதிகள் கிடைக்கவே இல்லை. தமிழகத்தில் 5,250 கோடி சேதம் என்றும் புதுவையில் 2,475 கோடி சேதம் என்று கணக்கிட்டு, மத்திய அரசிடம் நிதிஉதவி கேட்கப்பட்டது. பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவும், 'பாதிப்பு அதிகம்தான்...’ என்று ஒப்புக்கொண்டு முதல் கட்ட மாக தமிழகத்துக்கு 500 கோடியும் புதுவைக்கு 125 கோடியும் இடைக்கால நிவாரணம் ஒதுக்கி உள்ளது. அடுத்து ஒதுக்கப்படுவதும் சில நூறு கோடி களைத் தாண்டாது என்பதுதான் நிச்சயமான உண்மை!




'தமிழகத்தை வஞ்சித்து விட்டது மத்திய அரசு...’ என்று கடலூர், விழுப்புரம், புதுவை பகுதி மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். நிவாரணத் தொகை வழங்குவதில் ஏன் இத்தனை சிக்கல் என்பது குறித்து விளக்கமாகப் பேசினார் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம். ''நம் நாட்டின் இயற்கை அமைப்பின்படி இயற்கை சீற்றங்களால் ஆண்டு தோறும் 40,000 கோடி ரூபாய் முதல் 50,000 கோடி ரூபாய் வரை பயிர்கள் சேதம் அடைகிறது. படகு, வீடு மற்றும் கட்டுமானங்களின் சேதம் சுமார் 30,000 கோடி ரூபாய் ஆகிறது. உதாரணமாக இப்போது தாக்கிய புயலில் மின்சார சேதம்தான் மிகவும் அதிகம். இவற்றைத் திரும்பக் கட்டமைக்கவும் விவசாயப் பாதிப்புகளை ஈடுகட்டவும் மத்திய அரசு, இயற்கைப் பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு நிதியை வழங்குகிறது. மாநில அரசின் வசமும் இப்படி ஒரு நிதி இருக்கிறது. இவற்றில் இருந்துதான் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


மத்திய அரசு இந்த ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு நிதிக்காக ஒதுக்கியுள்ள தொகை 4,525 கோடி ரூபாய்தான். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தொகை. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநில அரசுகளும் கேட்டிருக்கும் தொகையோ 7,725 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, 625 கோடி ரூபாயைக்கொண்டு எப்படி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளமுடியும்? இந்த நிதி எப்படி முழுமையான துயர் துடைக்கும் நிதியாக அமையும்?


இது தவிர, இயற்கைச் சீற்றங்களை சமாளிக்க முன்கூட்டியே ஐந்து ஆண்டுகளுக் கான நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்குவது உண்டு. அப்படி, தமிழகத்துக்கு மாநிலப் பேரழிவு நிவாரண நிதியாக 2010-15 ஆண்டுகளுக்காக 1,621 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 75 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு கொடுக்கும், மீதம் உள்ளதை மாநில அரசு ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு அந்தத் தொகையில் இருந்து நிவாரணத்துக்காக ஒதுக்கப் பட்டுள்ள தொகை 308 கோடி ரூபாய்தான்.


மத்திய அரசிடம் இருந்து மொத்த நிதியையும் தமிழகம் எதிர்பார்க்கிறது. அவ்வளவு நிதியையும் மத்திய அரசே கொடுக்க வேண்டும் என்றால், தன்னிடம் உள்ள இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துயர் துடைப்பு நிதியை அதிகமாக்க வேண்டும். அந்த நிதியை உயர்த்திக் கொள்வதற்கும் வழி இருக் கிறது.


இந்தியாவில் சேவைவரி 1994-ம் ஆண்டுதான் விதிக்கப்பட்டது. அப்போது, சேவை வரியின் வரவு 410 கோடி ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது அது 82,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்த வரியில் இருந்து 50 சதவிகிதத்தை மட்டும் இந்த நிதிக்கு ஒதுக்கினால்... எத்தனை பெரிய இயற்கைப் பாதிப்பு, தேசத்துக்கு வந்தாலும் சமாளித்துவிட முடியும். இப்படிக் கிடைக்கும் நிதியில் சரிபாதி விவசாயத்துக்கும், மீதம் உள்ள சதவிகிதம் கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கும் ஒதுக்க வேண்டும். விவசாயத்துக்கு ஒதுக்கும் ரூபாயில் முழுமையான காப்பீடும் செய்து விட்டால், இன்னும் அதிகப் பாதுகாப்பு விவசாயிகளுக்குக் கிடைக்கும்.


மாநில அரசும் தன்னுடைய இயற் கைப் பேரிடர் பாதுகாப்பு நிதியை அதிகரித்துக்கொள்ள, டாஸ்மாக் வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும். இப்போது வரும் 1,60,000 கோடி ரூபாயில் இருந்து 25 சதவிகிதமான 4,000 கோடியை மட்டும் இந்த நிதிக்கு ஒதுக்கினாலே, எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். இப்படி நிதியை அதிகரித்து செயல்பட்டால் மட்டும்தான், துயர் துடைப்புப் பணிகள் முழுமையாகவும் உண்மையாகவும் நடக்கும். அப்படி இல்லாத பட்சத்தில், புயல், வெள்ளம் என்று சீற்றங்கள் வரும்போதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகத்தைத்தான் மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்திக்கொண்டே இருக்கும்'' என்று விளக்கமாகச் சொன்னார் சரிதானே! 
- கரு.முத்து 
நன்றி: ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment