புத்தாண்டில், வளர்ந்த உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? பாரட்டுக்கள். அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாமா!
1.நேர எல்லைகள்:
டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், விரைவில் அதற்கு அடிமையாகும் பண்பு சிறுவர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே, பக்குவமாக, ஒரு நாளில், எந்த எந்த வேலைகளுக்கு அவற்றை, எவ்வளவு நேரம் அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என்பதை, விளக்கமாக எடுத்துரையுங்கள்.
2. பிரைவசி செட்டிங்ஸ்:
பேஸ்புக் போன்ற சமுதாய தளங்களில், யார் யாருடைய செய்திகளை உங்கள் மகன்/மகள் பார்க்கலாம் என்பதனை அவர்களுடன் சேர்ந்தே முடிவு செய்து செட் செய்திடவும்.
3. தனிநபர் தகவல் கொள்கை:
இணைய தளங்கள், அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்தும் முன்னர், அவை பிரைவசி பாலிசி என தனிநபர் சுதந்திரத்தினை அவர்கள் எந்த அளவிற்கு மதிக்கின்றனர்; உங்கள் தகவல்களை அவர்கள் என்ன செய்வார்கள் என்று தந்திருப்பார்கள். இவை சற்று நீளமான டெக்ஸ்ட்டாக இருந்தாலும், பொறுமையாகப் படித்து அவை என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது.
4. பின்னால் வராதே:
இப்போது அனைத்து பிரவுசர்களும், பயனாளருக்கு “Do Not Track” வசதியைத் தந்து வருகின்றன. இதனை இயக்கி வைக்கவும். இதன் மூலம் ஒருவர் பார்த்த தளங்கள் என்ன என்ன என்று, மற்றவர்கள் பார்க்க முடியாது.
5. பாஸ்வேர்ட் பகிர்வு:
பல சிறுவர்கள், ஒரே பாஸ்வேர்டினை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதனைப் பார்க்கலாம். உங்கள் பிள்ளைகளிடம், அது தவறு என்று எடுத்துக் கூறி, அவனுக்கு மட்டுமான பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தூண்டவும். எப்படி பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவது என்று கற்றுக் கொடுங்கள். அவற்றை மறந்துவிடாமல் இருக்க, என்ன வழிகளைக் கையாள வேண்டும் என்பதனையும் சொல்லிக் கொடுங்கள்.
6. தனி நபர் தகவல்கள் தனி நபருக்கு மட்டுமே:
உங்கள் மகன்/மகளிடம் அவர்கள் சார்ந்த தகவல்கள் அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்வதோ, போட்டோ போன்றவற்றை, அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்புவதோ கூடாது என்று கற்றுக் கொடுக்கவும்.
7. அனுமதி முக்கியம்:
உங்கள் மகன்/மகள் புதிய தளம் ஒன்றிலோ, சேவைக்கெனவோ தங்களைப் பதிவு செய்திடும் முன், உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதனை அன்பாக வற்புறுத்தவும்.
8. எச்சரிக்கையாக இருக்க:
இணையப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க, அனைத்து வழிகளையும் கற்றுக் கொடுங்கள். எப்படியெல்லாம், சிலர், இணையத்தில் நம்மை ஏமாற்றி, தகவல்களை வாங்குவார்கள் என்பதனைக் கூறவும். எந்நிலையிலும் மெயில்களில் காட்டப்படும் இணைய முகவரிகளில் கிளிக் செய்திடக் கூடாது என்பதனை அவசியம் தெரிவிக்கவும்.
9. வயது வரையறையைப் பின்பற்ற:
பல இணைய தளங்களில் அக்கவுண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் எனில், குறைந்த பட்ச வயது அளவினைக் கட்டாயமாகக் கொண்டுள்ளன. ஆனால், நம் குழந்தைகள், அதனை ஏமாற்றும் விதமாக, தங்கள் வயதைக் கூடுதலாகக் காட்ட முயற்சிப்பார்கள். உடனே, ஆஹா! என்ன புத்திசாலித்தனம் என்று பாராட்டாமல், பொய்யான தகவல் கொடுப்பது சரியல்ல என்று கற்றுக் கொடுங்கள். எப்படி நல்ல நேர்மையான குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை இந்த உலகில் வளர வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே போல இணைய உலகிலும், அவர்கள் நல்ல குடிமக்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
10. பேச விடுங்கள்:
உங்கள் குழந்தைகள் அவர்களின் எண்ண ஓட்டங்களைக் கூறுகையில் காது கொடுத்துக் கேளுங்கள். உனக்கு ஒன்றும் தெரியாது என்று என்றும் கூற வேண்டாம். சில வேளைகளில், அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் கூடக் கிடைக்கலாம்.
No comments:
Post a Comment