டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா? இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.
கிருமிநாசினி (Antiseptic liquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.
பாராசெட்டமால் மாத்திரை (Antiseptic liquid):பொதுவாக நாம் பயன்படுத்திவரும் வலி நிவாரண மாத்திரை இது. டாக்டரைச் சந்திக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலைகளில் ஏற்படும் காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு நிவாரணம் அளிக்க பாராசெட்டமால் மாத்திரைகள் தேவைப்படும். இது தற்காலிக நிவாரணிதான். நோயின் தன்மையைப் பொருத்து டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
க்ரிப் பாண்டேஜ் (Crepe bandage) வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்தப் பயன்படும். காயம்பட்டு வீக்கம் ஏற்பட்டால், அந்த வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தைக் குணப்படுத்த, இந்த க்ரிப் பேண்டேஜ் (Crepe bandage) உதவும். காயம்பட்ட இடத்தைச் சுத்தம் செய்து, மருந்து போட்டவுடன் கட்டுப் போடவும் பயன்படும்.
தெர்மாமீட்டர் (Clnical thermometer) - காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலையைக் கண்டறியப் பயன்படும். கண்ணாடியினால் செய்யப்பட்ட தெர்மாமீட்டரைக் குழந்தைகள் கடித்துவிட வாய்ப்பு அதிகம். அதனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் எலக்ட்ரானிக் தெர்மாமீட்டர் வாங்குவதே சிறந்தது.
அடிசிவ் டேப்(Adesive tape) - காயம்பட்ட இடத்தில், கட்டுப் போட முடியாதபட்சத்தில், இந்த டேப் பயன்படும். பேப்பர் பிளாஸ்டர் என்றும் இதைச் சொல்வார்கள்.
பருத்தி பஞ்சு (Cotton wool) - காயம்பட்ட இடத்தைப் பஞ்சின் மூலம் சுத்தம் செய்வதே சிறந்தது. காயம்பட்ட இடத்தில் இருக்கும் மண், தூசிகள் படிவதைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், வேறு ஏதேனும் துணிகள் மூலம் சுத்தப்படுத்துவதைத் தவிர்ப்பதும் அவசியம். எனவே, சுகாதாரம் நிறைந்த சுத்தமான பஞ்சினால் மட்டுமே காயத்தை சுத்தம் செய்யவேண்டும். 'அப்சார்பென்ட் காட்டன் உல்’ (Absorbent cotton wool) ரத்தத்தையோ, மருந்தையோ உறிஞ்சும் தன்மை கொண்ட சுத்தமான பஞ்சு.
ஆஸ்பிரின் மாத்திரை (Aspirin Tablet) தலைவலி மற்றும் இதர உடல் வலிகளுக்கான நிவாரணியாகச் செயல்படுவதோடு, ரத்தம் உறைதலைத் தவிர்த்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது ஆஸ்பிரின். இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கும்பட்சத்தில் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிமிடத்தில் ஆஸ்பிரின் சிறந்த முதல் உதவியாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வதே நல்லது. நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதைத் தவறுதலாக, நெஞ்சு வலி என நினைத்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், பக்கவாதம், ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தம் உறைவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரினைப் பயன்படுத்தக் கூடாது.
ஆன்டிபயாட்டிக் க்ரீம் (Antibiotic cream)- காயங்களைக் குணப்படுத்த முதல் உதவியாக இந்த க்ரீமைப் பயன்படுத்தலாம்.
ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மருந்து (Anti - inflammatory ointment) - உடல்வலி, முதுகுவலி, சுளுக்கு போன்றவற்றுக்கு நிவாரணமாகப் பயன்படும் ஆயின்ட்மென்ட். இவை அடிக்கடி வரும் உடல் உபாதைகள் என்பதால், வீட்டில் இருப்பது நல்லது.
கத்தரிக்கோல் - கட்டுப் போட வேண்டிய பஞ்சு, பேண்டேஜ் போன்றவைகளை வெட்டியெடுக்க பிரத்யேகமாக, சுகாதாரமாக ஒரு கத்தரிக்கோல் இருப்பது நல்லது.
நன்றி: பெட்டகம்.காம்
No comments:
Post a Comment