Tuesday, March 26, 2013

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா...?

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது.  ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின்கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது . அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களை ப் பயன்படுத்துகிறது


ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படு கிறது.  பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கியகொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையின ர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது.

வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில்தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது . அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப் படுகின்றன. இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது.  இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன. கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத்தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.

பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை.ஆனால்,

ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடுஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும்.

3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  வங்கியின் வர்த்தகமுதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7% தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது.  ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .

அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால்சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்கள் .

விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள் . பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை , பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாகவிளங்குகிறது.

கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!  மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?

பாலபாரதி , MLA
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)

No comments:

Post a Comment