Monday, March 25, 2013

கேட்டமைன் ((KETAMINE) என்னும் போதை எமன்!

எப்போதாவது செய்தித்தாள்களில், விமான நிலையங்களில் கேட்டமைன் பிடிபடும் செய்திகளைப் படிக்கிறோம். அது என்ன கேட்டமைன்?

கேட்டமைன் - ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் எமன். ஹெராயின், அபின், கஞ்சா, மது ஆகிய போதைப் பொருட்களுக்கு மூலப் பொருள் இயற்கையான விளைபொருட்களே. ஆனால், கேட்டமைன் முழுக்க, முழுக்க ரசாயனப் பொருள். உண்மையில் இது கால்நடைகளுக்கு ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான ஆந்தராக்ஸ் முற்றிய நிலையில் கடைசி யாக உயிர் காக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் கால் நடை மருந்து. தவிர, ஆபத்தான வலி நிவாரணி மருந்தும்கூட. பார்க்க சர்க்கரை போலவே பளபளப்பாக வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் உண்மையான வேதியியல் பெயர் க்ளோரோபைனல் மெத்லோமினா சைக்ளோஹெக்ஸானோன். பெயரை உச்சரிக்கவே வாய் தடுமாறுகிறதா? உள்ளே சென்றால் சகலமும் தடுமாறும்.


வரலாற்றில் நீண்ட காலம் வெளிவராமல் இருந்த கேட்டமைன் போதை ரகசியம் வெளியானது வியட்நாம் போரின்போதுதான். அமெரிக்க வீரர்கள் இந்த மருந்தை ஊசி மூலம் உள்ளே செலுத்திக்கொண்டு ஒருமுகப்படுத்தப்பட்ட வெறிகொண்ட மனநிலையில் போரிட்டார்கள். ஒரு கட்டத்தில் இந்த ரகசியத்தை வியட்நாம் வீரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் புத்திசாலித்தனமாகத் தாங்கள் கேட்டமைனைப் பயன்படுத்திக்கொள்ளாமல் குதிரையின் கால்களில் இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தினார்கள். அப்புறம் என்ன, குதிரைகள் பேய்ப் பாய்ச்சல் பாய்ந்தன.

இந்தியாவில் ஹெராயின், அபின், கஞ்சா போன்ற அண்டர்கிரவுண்ட் பிசினஸ்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது கேட்டமைன் பிசினஸ். வட அமெரிக்காவுக்கு அடுத்து போதை உலகில் கேட்டமைன் அதிகம் நுகரப்படுவது இந்தியாவில்தான். இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கேட்டமைன் கடத்தல் மையமாக சக்கைப்போடு போடுவது... சென்னையில்! ஓர் ஆண்டில் சராசரியாக சென்னை விமான நிலையத்துக்கு வந்துபோகிறவர்கள் 12 மில்லியன் மக்கள். இதில் 4 சதவிகிதம் பேர் கேட்டமைன் போதைப் பொருளைக் கடத்துகிறார்கள். 'கஸ்டம்ஸ் மற்றும் டிரக் கமிஷன் ஆஃப் இந்தியா' இணைந்து சமீபத்தில் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு இது!

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட கேட்டமைன் அளவு சுமார் ஒன்றரை டன்னை நெருங்குகிறது. ஒரு கிலோ கேட்டமைனின் இண்டர்நேஷனல் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 10 லட்சம். இந்தியாவில் மும்பையில்தான் ஒட்டுமொத்த கேட்டமைனும் உற்பத்தி செய்யப்படுகிறது. போதைப் பிரிவுக் கடத்தல் தடுப்பு அதிகாரி ஒருவரிடம் பேசினேன்.

''மும்பையில் சுமார் 4,000 மருந்துத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த நிறுவனங்களில் பல நிறுவனங்கள், பகுதி நேரமாக கேட்டமைன் உற்பத்தியில் ஈடுபடு கின்றன. உயிர் காக்கும் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள், விட்டமின் மருந்துகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் அடிப்படையான ரசாயனப் பொருளே இதற்கும் பயன்படுத்தப்படுவதால், இதை மருந்து ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பது சிரமம். பெரும்பாலும் மைதா மாவு பாக்கெட்டுகள், ஹேர் டை பாக்கெட்டுகள், மிக்ஸி, கிரைண்டர் உட்பகுதிகள், வெங்காய மூட்டைகள் ஆகியவற்றில் மறைத்து வைத்துக் கடத்துகிறார்கள்.

என்னதான் விமான நிலையத்தில் கடத்தல்காரனை மடக்கி, கேட்டமைனைக் கைப்பற்றினாலும் முக்கியக் குற்றவாளி பிடிபட்டதாக சரித்திரம் கிடையாது. ஏனெனில், பிடிபட்டவன் கட்டாயம் 50 அல்லது 60-வது கையாளாக இருப்பான்'' என்றார் அவர்.

இதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள்? சென்னையில் அடிக்கடி பப்களுக் குச் செல்லும் வக்கீல் நண்பர் ஒருவர் சொல்வதைக் கேளுங்கள். ''கேட்டமைன் இல்லாத சென்னை பப்களுக்கு மரியாதையே கிடையாது. கேட்டமைனை வாயால் உட்கொள்ள முடியாது. சென்னை பப்களில் கூல்டிரிங்ஸ் பாட்டிலின் மூடியில் பாதி அளவு கேட்டமைனின் விலை ஒரு லட்சம். இது ஐந்து டோஸ் அளவு. அதாவது ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து வாங்கிக்கொள்ளலாம். டாஸ்மாக் கடையில் கட்டிங் வாங்கும் நபருக்காகக் காத்திருப்பதுபோல பப்களிலும் ஒரு டோஸ், இரண்டு டோஸ் கேட்டமைன் வாங்கும் நபர் களுக்காகக் காத்திருப்பதைப் பார்க்கலாம்.

'மிகக் குறைந்த அளவாக மூன்று மில்லிகிராம் கேட்டமைனைத் தொடர்ந்து ஒருவர் ஓர் ஆண்டு எடுத்துக்கொண்டால், மாயத் தோற்றம், மனக்குழப்பம், தூக்கத்தில் நடப்பது, உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு இவை எல்லாம் அதிகரித்து உயிர் பிரிவது 100 சதவிகிதம் கேரண்டி’ என்கிறார்கள் மருத்துவர்கள்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

No comments:

Post a Comment