நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர்.
எது நல்லது, கேட்டது என்று அறியாத பதின்ம வயதினருக்கு ‘எப்படியாவது 100க்கும் அதிகமான நண்பர்களை தங்கள் வட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என்ற பிற பள்ளி நண்பர்களிடையே ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, முன் பின் தெரியாத பலரின், நட்பு விண்ணப்பத்தை ஏற்று அவர்களின் ‘நட்பு’ வட்டத்தை 100-200க்கும் மேலும் பெரிதாக்குகின்றனர். விளைவு, கயவர்களின் ஜாலப் பேச்சுக்கும், பிற தொல்லைகளுக்கும், தவறுகளுக்கும் துணைபோகவோ, ஆட்படவோ நேரிடும் சூழலில் தள்ளப்படுகிறார்கள்.
சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளை அடிமைப்படுத்தும் கணினி, வீடியோ விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் அவர்களை வெளி உலக எதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்துகின்றன. மனிதர்களிடம் பழகுவது, அவர்கள் உணர்வுகளை பற்றின புரிதல் என்னவென்று அறிந்து கொள்ளும் திறமை குறைந்து போகின்றன. நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாத வயதில் இவ்வாறான சூழல் அவர்களை மேலும் பிரச்சனைக்குள் தள்ளும் நிலைதான் வலுக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது. சென்ற ஆண்டு மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கொலை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல், கொலை மிரட்டல், சாட்சியங்களை மிரட்டல், மோசடி போன்ற குற்றங்கள் மீதான விசாரணைகளில் பேஸ்புக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்புகளின் எண்ணிக்கையை சமூக அந்தஸ்தாக அளவிடும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேஸ்புக் புதிது புதிதான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு உத்திகளில் தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் பேஸ்புக் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளும், பேஸ்புக்கில் சேர வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. குழந்தைகள் பெற்றோரின் கடன் அட்டைகளை பயன்படுத்தி தாம் விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வைப்பதற்கான உத்திகளையும் யோசித்து வருகிறது.
பதின்மவயதினரை போல அவர்கள் பெற்றோர்களும் பேஸ்புக்க்கு அடிமையாகி இருக்கும் போது, தமது சந்தைப்படுத்தும் லாப வேட்டைக்கு பயன்படுத்தும் நோக்கில் வணிக நிறுவனங்கள் அந்த அடிமைத்தனத்தை மேலும் மேலும் உறுதியாக்கும் சூழலில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டங்களும் காவல் துறையும் என்ன பாதுகாப்பு அளிக்க முடியும்? அயோக்கியர்களையும் நண்பர்கள் என்று காண்பிப்பதுதான் முகம் தெரியாத பேஸ்புக்கின் அடிப்படை செயல் முறை. அதிலிருந்து அறுவடை ஆகும் வருமானத்தை வங்கியில் குவித்துக் கொள்ளும் பேஸ்புக் அதன் விளைவாக பலியாகும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்கப் போவதில்லை.
தவறான நபர்களை அறிமுகம் செய்து குற்றங்கள் நிகழும் சூழலை உருவாக்கியுள்ள பேஸ்புக் மற்றும் நகரத்து மேட்டுக்குடி கலாச்சார நிறுவன முதலாளிகளை தண்டிப்பது யார்...?
No comments:
Post a Comment