இஸ்லாத்தை அவமதித்து படம் எடுத்தால் ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும் கிடைக்குமா? வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.
திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை..
ஆங்கிலப்படங்கள் பார்க்காத நம்மூர் மக்களை ஏமாற்றுவதில் கமலஹாசனுக்கு ஒரு கள்ளப்பெருமை இருக்கலாம்.
மற்றபடி மொத்தப் படமும் freezerல் வைத்து பல நூற்றாண்டுகளாக அறைக்கப்படும் அதே ஊசிப்போன மாவு தான். பின்னணி இசையிலும் பல இடங்கள் Dark Knight உட்பட எனக்கு பிடித்த பல படங்களில் இருந்து சுட்டவையே.. (தழுவல் என்று வேண்டுமானால் நாசூக்காக சொல்லாம்.)
இத்தகைய அமெரிக்க ராணுவ வீர சாகச மொக்கை படங்களை அந்த கதையுடன் நேரடி தொடர்பு உள்ள அமெரிக்கர்கள் கூட இப்போதெல்லாம் அவ்வளவாக ரசிப்பதில்லை.. அதையே தமிழ்மொழியில் எடுத்து கமல் பெருமைப்படுவது நகைப்புக்குரியது.
நல்ல கலைஞனுக்கும் அவனது படைப்புக்கும் மூன்று முக்கியமான குணங்கள் உண்டு. ஒன்று தன் கலை வடிவத்தில் உண்மையை மட்டுமே பரப்பே வேண்டும் என்ற பிடிவாதமான நேர்மை.. இரண்டாவது தன் கலை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூக அக்கறை.. இன்னொன்று அந்த கலையை புதுமையாக மெருகூட்டும் ஆர்வம். Creative Instinct என்றும் சொல்லலாம். இதில் எதுவுமே கமலுக்கு இல்லை.
மூன்றாவது விடயத்தை முதலில் பார்ப்போம்.. முழுக்க முழுக்க பல படங்களில் இருந்து சுட்ட காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை.. இது எதேச்சையாக நடந்தது அல்ல.. Creativity is all about hiding your sources என்று Einstein சொன்ன தத்துவத்தையே இங்கு கமல் மெய்ப்பித்திருக்கிறார். பிறமொழி படங்களை பார்க்காத பெரும்பான்மை தமிழ் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கலாம்.. பிறமொழி படங்கள் குறிப்பாக ஆங்கில படங்கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் மட்டுமே மிஞ்சும். எனவே இது creativity என்ற பட்டியலில் எக்காலத்திலும் சேராது.
அடுத்து இரண்டாவது விடயம். சமூக அக்கறை. தீமை பயக்கும் மெய்யை விட, நன்மை பயக்கும் பொய்யே நல்லது என்று நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தீமையை மட்டுமே விளைக்கும் நிரூபிக்கப்படாத உண்மைகளை பரப்புவது எதற்காக?
தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.
மூன்று விடயங்களில்.. முதல் விடயமே நம்மை மிகவும் கவலை கொள்ள செய்யும். அது நேர்மையின்மை. கதை சொல்பவர்கள் கொஞ்சமேனும் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு திரித்து சுய-நியாயம் ஏற்று கூறுவது இயல்புதான். ஆனால் அது அளவை மிஞ்சும்போது ஆபத்தாகி அந்த கலையின் ஜீவனையே கொன்றுவிடும்.
இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம்.
அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை (அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.
அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார். இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.
ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை.. தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார். இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது? தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு? கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது? மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான். ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”
- Sooriya Prakash Thangaswamy
No comments:
Post a Comment