விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லிம்களின் எதிர்வினை குறித்துப் பலரும் கருத்துக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். ஒரு நண்பர் ‘ஓபன்’ இதழின் இணை ஆசிரியரும் இளம் பத்திரிக்கையாளருமான ராகுல் பண்டிதாவின் சமீபத்திய நூலின் பின்னணியில் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். காஷ்மீர்ப் பண்டிட்கள் காஷ்மீர்த் தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்டதையும் குஜராத்தில் முஸ்லிம்களின் மீதான வன்முறையையும் அதில் ஒப்பிட்டிருந்தார்.
காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதையும் குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 2 லட்சம்பேர் அகதிகளாக்கப்பட்டதையும் ஒன்றாகச் சமப்படுத்திப் பார்க்க இயலாது.
ராகுல் பண்டிதா மிகச் சிறந்த ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர். அக் கட்டுரையைப் படித்தேன். நூலை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. பண்டிட்கள் வெளியேற்றப் பட்டதில் தீவிரவாதத்திற்கு உள்ள பங்கையும், அவர்கள் மீண்டும் அங்கேயே குடியேற்றப் பட வேண்டும் என்பதையும் யாரும் மறுக்க இயலாது. ஆனால் பண்டிட்களை வெளியேறச் சொல்லி ஊக்குவித்ததில் இந்துத்துவ மனநிலையுள்ள அன்றைய காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகனின் பங்கை நாம் மறந்துவிட இயலாது. (முடிந்தால் என் காஷ்மீர் நூலை வாசித்துப் பாருங்கள்). அதே நேரத்தில் முஸ்லிம் மூத்தவர்கள் அடங்கிய குழு ஒன்று சென்று வெளியேறிக் கொண்டிருந்த பண்டிட்களைச் சந்தித்து, நீங்கள் வெளியேற வேண்டாம். நாங்கள் உத்தரவாதமளிக்கிறோம் வாருங்கள் எனக் கோரிய சம்பவமும் அங்கு உண்டு,
வெளியேறிய பண்டிட்களுக்கு டெல்லியில் முக்கிய கடைத்தெருக்களில் கடைகள் ஒதுக்கப்பட்டன. குடியிருப்புகள் அளிக்கப்பட்டன. அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு முழு ஊதியமும் அளிக்கப்பட்டது. ஆனால் குஜராத்தில் என்ன நடந்தது? கொலைகள் ஆட்சியாளர்களால் நியாயப்படுத்தப்பட்டன. மத்திய அரசு அளித்த உதவிகளும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்காமல் திருப்பி அனுப்பப்பட்டன. இடம்பெயர்க்கப்பட்டவர்கள் வேலைகளை இழந்தனர். குழந்தைகள் கல்வியை இழந்தன.
வன்முறைகளின் அளவும் கூட இரண்டிலும் ஒன்றல்ல. பெரிய அளவு பண்டிட்கள் காஷ்மீர்த் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது என்பது நதிமார்க் படுகொலைதான., 24 பண்டிட்கள் அங்கு கொல்லப்பட்டனர். குஜராத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குள் 2000த்திலிருந்து 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விதமும் அத்தனை கொடூரம். பாராளுமன்ற உறுப்பினரும் காங் தலைவருமான ஈஷான் ஜாஃப்ரி அவர் குடும்பத்தின் முன் கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் தீவிரவாதத்திற்கான அரசு எதிர்வினையையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அங்கு கானாமலடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சம் பேர்.
இவ்வளவையும் சொல்வது பண்டிட்களை வெளியேற்றியதை நியாயப்படுத்துவதற்காக அல்ல. குஜராத் வன்முறையையும் பண்டிட்களின் வெளியேற்றத்தையும் சமப்படுத்திச் சொல்வதில் எள்ளளவும் நியாயமில்லை எனச் சுட்டிக்காட்டத்தான்.
பொதுவாக இப்படியான ஒப்பீடுகளைத் தவிர்த்து இரு அநீதிகளையும் நாம் கண்டிக்கவும், இரண்டிலும் நீதி கிடைக்கவும் கோருதலே சரியாக இருக்கும்.
நன்றி: சகோ.Marx Anthonisamy
No comments:
Post a Comment