உலகின் மூல ஒளியாக... ஒளிப்பிழம்பாக இருக்கும் சூரியனில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஒரு முக்கிய நிகழ்வு நிகழ இருக்கிறது. சூரிய புள்ளியும், சூரியப்புயலுமாக சூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால், பூமிக்கும் சில பாதிப்புகள் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சூரிய புள்ளி என்றால் என்ன? என்ற கேள்வி இந்நேரத்தில் எழலா. 6 ஆயிரம் கெல்வின் மேற்புற வெப்ப நிலையைக் கொண்டுள்ள சூரியனில் 4 ஆயிரம் கெல்வின் வெப்பநிலைக்கும் குறைவாக இருக்கும் பகுதிகள் மங்கலாக தோன்றும் நிகழ்வே சூரியப்புள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.
11 ஆண்டுகளுக்கு ஒரு முறை உச்ச நிலையை எட்டும் இந்த நிகழ்வு வரும் மே மாதம் நிகழ இருக்கிறது.இதுவரை அதிகபட்சமாக ஒரு சுழற்சியில் 201 புள்ளிகள் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முறை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு அடிக்கடி நடைபெறும் நிகழ்வென்றாலும் பூமியின் காந்த மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக துருவப்பகுதியில் நிகழும் அரோரா ஒளிக்காட்சி வழக்கத்தை காட்டிலும் அதிகமாக காணப்படுவதோடு, கடந்த முறை ஏற்பட்டதைப் போலவே பெரும்பாலான நாடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியைத்தாக்கும் சூரியப்புயலும் இதோடு கைகோர்த்து வரவுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வளிமண்டலம் இருப்பதால் பூமிக்கு ஆபத்து இல்லையென்றாலும், புவி நிலை செயற்கைக்கோள்களில் உள்ள சில கருவிகளில் பாதிப்புகள் ஏற்படுவதோடு, கப்பல், விமானப்போக்குவரத்து உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எப்போதுமே தனித்தனியாக வரும் இந்த நிகழ்வுகள் ஒரே நேரத்தில் வரவுள்ளதால் வழக்கத்தை விட அதிகமான கதிரியக்கம் ஏற்படும் என்றும் தெரிகிறது.
Source: puthiya thalaimurai tv
No comments:
Post a Comment