Sunday, June 26, 2011

60 லட்சம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை! குர்ஷித்


சென்னை : நடப்பு கல்வி ஆண்டில்  இந்தியா முழுவதும் உள்ள 60 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தீவிர நடவடிக்கை  எடுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை, பஷீர் அகமது சையது கல்லூரியில் நேற்று நடந்த இந்திய சிறுபான்மையினரின் பிரச்னைகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடங்கி வைத்து பேசியபோது: சிறுபான்மையினர் நலன் குறித்த, சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள 60 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, 2011-12ம் கல்வி ஆண்டில், கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

பிஎச்.டி., படிக்கும் சிறுபான்மை மாணவர்கள் 800 பேருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, இனி 1,400 பேருக்கு வழங்கப்படும். "ஜின்னா' என்ற சினிமாவில், சிறுவன் ஒருவன், இழந்த தன் தாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்கும்போது, பதில் அளிக்க முடியாமல் ஜின்னா, அவனிடம் மன்னிப்பு கேட்டு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட விளைவுகளை விளக்குவார். பிரிவினையால் பாதிப்புகள் தான் அதிகம் என்பதால், பிரிவினை, வேற்றுமையை மறந்து நாம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சிறுபான்மையினர் அதிக அளவில் இடம் பெற வேண்டும். சிறுபான்மையினரால் துவங்கப்படும் கல்லூரிகளில் அவர்களை விட, மற்ற மாணவர்கள் அதிக அளவில் இடம்பெறுகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு இந்திய அளவில் சிறுபான்மையினர் கல்லூரிகளை அதிக அளவில் துவக்க வேண்டும். அவ்வாறு துவக்கினால் எல்லா தரப்பினரும் பயன் பெற முடியும்.

லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்  சிறுபான்மையினர் அதிகம் கலந்து கொள்ளவில்லை. இது போன்ற நிகழ்வுகளில் சிறுபான்மையினர் அதிகம் கலந்து கொள்ள வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். என்று சல்மான் குர்ஷித் பேசினார்.

No comments:

Post a Comment