Monday, June 20, 2011

தேர்வில் வெற்றி பெற திட்டமிடுவது எப்படி?


ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ / மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். அவர்களுக்கு ஏதுவாக தற்போது எண்ணற்ற கல்வி வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவத்துறை போன்ற தொழில் துறைக் கல்விகளில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் சேரும் வாய்ப்பு உள்ளது.


தொழிற் கல்லூரிகளில் மட்டும் அல்லாமல் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கிடைக்கும் பட்டங்கள் கூட தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும். வணிகவியல், உயிரியல்,உணவு பதப்படுத்தும் துறை, செய்தி தொடர்புத்துறை, மருத்துவ நிலையச் சேவைத்துறை, விளம்பரத்துறை, சுற்றுலாத்துறை போன்ற பல பட்டப்படிப்புகள் உள்ளன. மாநிலக் கல்வி நிலையங்களிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் அணுகி தேவையான விவரங்களை சேகரித்து அவரவர்களின் தகுதிக்கேற்றவாறு விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மேற்கண்டவாறு கல்லூரிகளிலும், பயிற்சி நிலையங்களிலும், நேரடியாகப் பயில வாய்ப்பில்லாதவர்கள் கீழ்கண்ட பல்கலைக் கழகங்கள் மூலம் தொலைத்தூரக் கல்வி முறை மூலம் படிக்கலாம்.
1. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம், சென்னை
2. சென்னை பல்கலைக்கழகம், சென்னை
3. மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், மதுரை
4. பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்
5. பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி
6. பெரியார் பல்கலைக் கழகம், சேலம்
7. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி
8. அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி
9. அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்
10. மதர்தெரசா பல்கலைக் கழகம், கொடைக்கானல்

தற்போது கல்லூரிகளில் மேற்படிப்புப் படிக்கச் செல்லும் மாணவ, மாணவியர் பட்டம் பெற்றபின் போட்டித் தேர்வுகள் எழுதினால் அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தனியார் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றவோ தாமாகவே தொழில் தொடங்கவோ கல்லூரிகளில் படிக்கும்போதே தயார் செய்து கொள்ள வேண்டும். சில பாடத்திட்டங்களில் பாடத்திட்டத்துக்கும் மேலாக பல திறமைகளைப் பெற வழிமுறைகளைக் கண்டறிந்து கூடுதல் திறமைகளைப் பெற வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடரவும், இருக்கும் தகுதியுடன் வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன திட்டமிடுதலும், திட்டத்தைச் செம்மையாக நிறைவேற்றுதலுமே வெற்றியைத் தரும்.
பதினோராம் வகுப்பு சேர்ந்த நாள் முதல் முறையான திட்டம் வகுத்து அதன்படி தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரைப் படிப்பும் எளிமை, தேர்வும் எளிமை. மேனிலைப்படிப்பை அவ்வாறு அல்லாமல் ஒவ்வொரு மணித்துளியும் மேன்மைக்கு உதவும் வகையில் காலத்தை வீணாக்காமல் படித்தல் வேண்டும். செளிணிமுறைப் பயிற்சி செளிணிவதுடன், உடனடியாக ஏட்டில் எழுத வேண்டும். கடும் உழைப்பும், உயர்ந்த இலட்சியமும் நிச்சயம் வெற்றியைத் தரும்.
பல மாணவர்களிடத்தில் படிப்பு தவிர, விளையாட்டு, ஓவியம், இசை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பான திறமைகள் இருக்கும். மேனிலை வகுப்புக்கு வந்தவுடன் படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தித் தங்கள் தனித்திறமைகளைப் புறக்கணிப்பது பொதுவாகக் காணப்படுகிறது. அத்திறன்களும் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கக் கூடும் என்பதை மறக்காமல் இருப்பது நன்று. 

விளையாட்டில் தனிச்சிறப்புப் பெற்றவர், மேற்படிப்பைத் தொடரவும், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. விளையாட்டு வீரர்கள் உதாரணமாகக் கிரிக்கெட் வீரர்கள் / வீராங்கனைகள், சதுரங்க விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள், ஹாக்கி வீரர்கள் / வீராங்கனைகள்,  கூடைப்பந்து வீரர்கள் / வீராங்கனைகள், ஆகியோருக்கு விளையாட்டின் மூலமே பெரிய நிறுவனங்களில் பணி தேடிவருவதைக் காணலாம். எத்துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்தப் பருவத்தின் அனுபவம் சரியான பதிலை எல்லோருக்கும் அளித்துவிடாது; எப்போதும் கொஞ்சம் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது அவசியம். எல்லோருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அது தனிச்சிறப்பாக மாறும் சாத்தியம் இருக்கிறது. பணிவு, பொறுமை, பக்குவம், விடாமுயற்சி ஆகியவற்றைக் கையாளும்போது வெற்றியை நிச்சயம் பெற முடியும்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ மாணவியர் அடுத்து என்ன படிப்பது என்ற சிந்தனையில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் முக்கியமான இரு கட்டங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. பத்தாம் வகுப்பு படித்து முடித்த உடன் அடுத்துப் படிப்பது பற்றிய கவலை பலருக்கும் ஏற்படுகின்றது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் சுமார் ஏழு லட்சம் மாணவ, மாணவியரில் நான்கு லட்சம் பேர் மட்டுமே, 11, 12 ஆம் வகுப்புகளில் தொடர்ந்து படிக்கின்றனர். சுமார் 3 லட்சம் பேர் பத்தாம் வகுப்போடு படிப்பதை நிறுத்திய பிறகு, தொடர்ந்து பலவிதத் தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சிபெற முயல்கின்றனர். அப்பொழுது அவரவர் ஆர்வத்துக்கேற்பப் பயிற்சி நிலையங்களைத் தேர்ந்தெடுத்துச் செயல் திறமைகளைப் பெறுவது நலம்.

அதையடுத்து பிளஸ் டூ எழுதும் சுமார் 4 லட்சம் பேரில் 2 லட்சம் மாணவ, மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மாணவ மாணவியருக்கு 9 ஆம் வகுப்பு முதலே மேற்படிப்பு குறித்து வழிகாட்ட அறிவுரை, ஆலோசனை வசதிகள் தேவைப்படுகின்றன. நம் நாட்டில் அத்தகைய வழிகாட்டும் மையங்கள் மிகக் குறைவாக உள்ளதால் மாணவர்களின் மன உளைச்சல் அதிகரிக்கிறது. ஒரு சிலர் அவரது பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் அறிவுரை
பெறும் வசதி பெற்றிருப்பர். பெரும்பாலோனாருக்கு இவ்வசதி இல்லை. இது குறித்து மாணவர்கள் ணுகும்போது ஒருசில பள்ளி ஆசிரியர்கள் தன்னிச்சையாக அறிவுரை அளிக்க முன் வருகிறார்கள். இதுவும் மிக அரிதாக உள்ளது. எதிர்காலத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள்-பெற்றோர்களின் கூட்டு முயற்சியாக, பொது அறிவுரை மையங்களை ஏற்படுத்தலாம்.

மாணவர்களுடைய குடும்பச் சூழ்நிலை மேற்படிப்பு ஆர்வத்தைப் பாதிக்கும். தங்கள் பிள்ளைகளை உள்ளூரிலோ அல்லது அருகில் உள்ள கல்லூரிகளிலோ சிலர் மட்டுமே படிக்க வேண்டும் என்பார்கள். ஒரு சில பெற்றோர்கள் பெண்களாக இருந்தால், அதிக து£ரத்தில் உள்ள கல்வி நிலையத்துக்குச் செல்வதைப் விரும்புவதில்லை. பலர் தங்களது ஏழ்மையின் காரணமாக தங்களது குழந்தைகளை அதிகச் செலவாகும் மேற்படிப்புக்கு அனுப்பமாட்டார்கள். மிகவும் திறமையும் ஆர்வமும் உள்ள மாணவ மாணவியர் இத்தகைய குடும்பச் சூழ்நிலையில் சிக்கி இருந்தால், அதை எதிர்கொண்டு தொடர்ந்து அவர்களது விருப்பத்துக்கும் தகுதிக்கும் ஏற்ற படிப்பு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அதை அடைவதற்கு ஏற்ற வழிமுறைகளை காட்ட வேண்டும்.
ஒரு வேளை தவிர்க்க முடியாத குடும்பச் சூழ்நிலையால் அருகிலேயே படிக்க வேண்டியிருந்தாலும் அதற்கேற்ப உள்ள வாய்ப்புகளை அறிவதற்கு பெற்றோர்கள் வழிவகை செய்யவேண்டும். அரசு பொதுத் தேர்வில் மாணாக்கர்கள் அதிக மதிப்பெண்களை இழப்பதற்கான காரணிகள் சில...

1. அனைத்து பாடங்களிலும் தொடர்ந்து தயார் செய்யாமை மற்றும் பயிற்சி போதாமை
2. தேர்வு நேரங்களில் மன இறுக்கம் /பதற்றம்
3. வினாக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான / தொடர்பற்ற விடையளித்தல்
4. தேர்வு அறையினுள் பறக்கும் படையினர் நுழைந்தால்,தேவையற்ற வகையில் பதற்றம் கொண்டு விடைகளைத் தவறாக எழுதுதல்
5. அடுத்த மாணவனைப் பார்த்து விடை எழுதுதல்
6. தெளிவற்ற கையெழுத்து
7. விடை எண்களைச் சரியாக எழுதாமை
8. விடைத்தாள்களைச் சரியாகக் கட்டாது இருத்தல்
9. அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதாமை
10. முக்கியக் கருத்துக்களைக் கோடிட்டுக் காட்டாமை

No comments:

Post a Comment