Monday, October 17, 2011

குழந்தைகளுக்கு ஒரே ஊசியில் 5 தடுப்பு மருந்துகள்:தமிழகத்தில் அறிமுகம்


ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளை கொண்ட, "பெண்டாவேலன்ட் வேக்சின்' குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, 5 மருந்துகளைக் கொண்ட தடுப்பூசி வரும் நவம்பர் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்த பெண்டா தடுப்பூசியில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் "ஹிப்' (Haemophilus influenzea&)- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய, 5 தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அடங்கியிருக்கும்.

சிசு மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக, தேசிய தடுப்பூசி திட்டம், 1985ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, காசநோய், தட்டம்மை ஆகிய நோய்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. பின், போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. போலியோவை முழுமையாக ஒழிப்பதற்காக, பல்ஸ் போலியோ வாய் வழி மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம், 1,000க்கு 30ஆக குறைந்துள்ளது. மேலும், 11 லட்சம் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
தீவிர போலியோ தடுப்பு திட்டத்தின் காரணமாக, தமிழகம் 2004ம் ஆண்டிலிருந்து போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதுபோல், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி ஆகிய நோய்களும், தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரணஜன்னி முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்திற்கு, உலக சுகாதார மையம், 2006ல் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த மூன்று நோய்களுக்கு ஒரே தடுப்பூசியாக, டி.பி.டி., போடப்பட்டு வருகிறது.

இருப்பினும், வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, வெப்பமயமாதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதுப் புது நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.இந்த வரிசையில் ஹெப்படைட்டீஸ் பி தடுப்பூசி, தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதுபோன்று, மூளைக் காய்ச்சல் மற்றும் நிமோனியாவுக்கான "ஹிப்' தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட, மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்தடுப்பூசி இப்போது, தனியார் மருத்துவமனையில் போடப்படுகிறது.

ஹீமொபிளஸ் இன்புளுயன்சா-பி ("ஹிப்'), வைரஸ் கிருமியால் ஆண்டு தோறும், 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 30 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, தேசிய இலவச தடுப்பூசி அட்டவணையில், "ஹிப்' தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது.தடுப்பு மருந்து பட்டியலில் ஏற்கனவே, டி.பி.டி., தட்டம்மை, போலியோ, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ( குறிப்பிட்ட மாவட்டங்களில்) ஹெப்படைட்டீஸ் பி, என பட்டியல் நீண்டு கொண்டே போவதால், தடுப்பூசிகளால், குழந்தைகள் சிரமப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இதைக்கருத்தில் கொண்டு, டி.பி.டி., முத்தடுப்பு (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி) ஊசியுடன் இப்போது ஹெப்படைட்டீஸ் பி, "ஹிப்' ஆகியவற்றையும் ஒரே ஊசியில் போடுவதற்கு மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்தது.தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் முதல் கட்டமாக, பெண்டாவேலன்ட் வேக்சின் நவம்பரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு சிரமம் குறையும்:பெண்டா வேக்சின் குறித்து, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: பெண்டா தடுப்பூசி குழந்தைகளுக்கு, 6, 10, 14 வாரங்களில் போடப்படும். பின்னர் பூஸ்டர் ஊசிகள், 15 மற்றும் 18வது மாதங்களில் போடப்படும். ஐந்து தடுப்பு மருந்துகளையும் தனித்தனி ஊசியாக போட்டால், குழந்தையை அதிக முறை, ஊசியால் குத்தி சிரமப்படுத்த வேண்டியதிருக்கும். 

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளையும் சேர்ப்பதால், ஊசியால் ஒரே ஒரு முறை குத்தினால் போதுமானது. மேலும், தடுப்பூசி போடும் போது, தற்காலிகமாக காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை தடுப்பூசி போடும் போதும் குழந்தைகள் இதுபோன்ற தொல்லைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால், குழந்தைகளின் சிரமத்தை குறைக்க, 5 தடுப்பு மருந்துகளை ஒரே ஊசியில் செலுத்துவதே பெண்டாவேலன்ட் வேக்சின் ஆகும். இவ்வாறு ஜெயச்சந்திரன் கூறினார்.
 
தமிழகம் எப்படி?
* போலியோ இல்லாத மாநிலம்* தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் 11 லட்சம்* தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000க்கு 30* ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் முற்றிலும் ஒழிப்பு.- 

தகவல்: எஸ். ராமசாமி -

No comments:

Post a Comment