மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும்.
தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தவது, குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும். இது தவிர தைராய்டு சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தைராய்டு நோயினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனதளவில் பாதிப்பு
நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, புகைபிடித்தலால் தோன்றும் உடல் பருமன் போன்ற நோய் தாக்கிய பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உடலுறவில் ஈடுபாடு குன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பாலியல் நிபுணரான டாக்டர் கோல்டுமேன் தெரிவித்துள்ளார். அதேபோல் தைராய்டு குறைபாடினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு அதனால் இல்லற வாழ்க்கையில் விருப்பமின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாகவே உறவில் ஈடுபாடு குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள்.
பிரச்சினைக்கு தீர்வு
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். மெனோபாஸ் உடன் தைராய்டு குறைபாடும் இணைந்து கொள்வதால் உறவில் ஈடுபாடு குறைந்து வருவதாக கூறும் மருத்துவர்கள் வயக்ராவின் வருகைக்குப்பின்னர் ஆண்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதைப்போல பெண்களின் பிரச்சினைக்கு இன்னும் சரியான தீர்வு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கப்படுகிறது. அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால் மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
source: unggalukkaaga
No comments:
Post a Comment