என்றும் பதினாறாக இருக்க எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் வயதாக வயதாக உடலின் ஒவ்வோர் உறுப்புகளும் நலிவடைகின்றன. எலும்புகள் தேய்ந்து போகின்றன. கண் பார்வை குறைந்து கொண்டே போகிறது. காது கேட்காமல் போகிறது. சர்க்கரை வியாதி, இதய நோய், புற்றுநோய் என்று நிறைய நோய்கள் வந்து உடலைப் படாதபாடு படுத்துகின்றன. இவற்றிலிருந்து மனிதன் மீள முடியுமா? முதுமையை வெல்ல முடியுமா? என்று கேட்டவுடனேயே, "முடியாது' என்பதுதான் எல்லாருடைய பதிலாகவும் இருக்கிறது.
ஆனால் அறிவியல் அறிஞர்கள், மருத்துவநிபுணர்கள் மனிதனின் வாழ்நாளை மேலும் அதிகரிக்க பல முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, மனித உடலிலுள்ள ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, பலவிதமான உடற்குறைபாடுகளை, நோய்களை, உடல் உறுப்புகள் நலிவடைந்திருப்பதைச் சரி செய்யும் முயற்சி.
இந்த ஸ்டெம் செல்களை மனிதனின் உடம்பிலிருந்து எடுத்து அதை உரிய முறையில் பாதுகாக்கும் வங்கிகள் கூட நமது நாட்டில் இப்போது வந்துவிட்டன. இதற்கு முன்பு எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்துப் பாதுகாத்தார்கள். இப்போது பற்களிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து பாதுகாக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஸ்டெம்மெட் பயோடெக் என்ற நிறுவனம். பற்களிலிருந்து ஸ்டெம் செல்களை எடுக்கும் இந்த முறையைப் பற்றி சென்னை தியாகராய நகரில் குழந்தைகள் பல் மருத்துவராக 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் அருணாமோகனிடம் கேட்டோம்:
ஸ்டெம் செல் என்றால் என்ன? எப்படிஎடுக்கிறார்கள்? எப்படி பாதுகாக்கிறார்கள்?
மனித உடலின் அடிப்படையான மூலப் பொருள் என்று ஸ்டெம் செல்களைச் சொல்லலாம். குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியில் ஸ்டெம் செல்கள் உள்ளன. அவை ரத்த அணுக்களை உருவாக்கும் ஸ்டெம் செல்கள். உடலின் எந்த உறுப்பிலும் உள்ள திசுக்களை உருவாக்கும் ஸ்டெம் செல்களும் உள்ளன. அவை எலும்பின் உட்புறத்தில் உள்ள மஜ்ஜையில் உள்ளன. பற்களின் உட்பகுதியில் உள்ள பற்கூழில் உள்ளன.
இப்போது பற் கூழில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்துப் பாதுகாப்பது நடைமுறையில் உள்ளது. குழந்தைகளுக்கு முதலில் தோன்றுபவை பால் பற்கள். இந்தப் பால் பற்கள் 6 முதல் 12 வயதுக்குள் விழுந்து விடும். விழுந்துவிடக் கூடிய இந்தப் பால் பற்களிலிருந்து ஸ்டெம் செல்களை இப்போது எடுக்கிறார்கள். ஒரு வேளை, 12 வயதுக்குள் எடுக்க முடியாவிட்டால் 17 வயதுக்குப் பின்பு வாயில் உள்ள ஞானப் பற்களில் உள்ள ஸ்டெம் செல்களை எடுக்கிறார்கள்.
இப்படி எடுத்த ஸ்டெம் செல்களைப் பாதுகாப்பது எளிதான செயலல்ல. தண்ணீர் பனிக்கட்டியாக ஸீரோ டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலை வேண்டும். அதைவிடக் குறைவாக -190 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்த ஸ்டெம் செல்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு பயன்படுவது திரவ வடிவிலுள்ள நைட்ரஜன் ஆகும். இப்படி பாதுகாக்கும் முறையை "கிரியோ ப்ரசர்வேசன்' என்பார்கள். இந்த முறையில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஸ்டெம் செல்களைப் பாதுகாக்க முடியும்.
இந்த ஸ்டெம் செல்களைப் பலமடங்கு பெருக்க முடியும். கிட்டத்தட்ட 140 மடங்கு பெருக்க முடியும். ஒரு ஸ்டெம் செல்லை இன்னொரு மடங்காக ஆக்கினால் 2 ஆகும். இந்த 2 செல்லை இன்னொரு மடங்காக ஆக்கினால் 4 ஆகும். இந்த நான்கை 16 ஆக அதிகரிக்க முடியும். இப்படியே 140 மடங்காகப் பெருக்க முடியும் என்றால் எவ்வளவு அதிகமான ஸ்டெம் செல்களை உருவாக்க முடியும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதால் என்ன பயன்?
இந்த ஸ்டெம் செல்களை வைத்து மூளையிலுள்ள தசைகளின் திசுக்களை, இதயத்தில் உள்ள தசையின் திசுக்களை, எலும்புத் திசுக்களை, சிறுநீரகத்தின் திசுக்களை, கண்களின் திசுக்களை என்று உடலின் எந்தப் பாகத்திலும் உள்ள திசுக்களையும் உருவாக்க முடியும். இதனால் மனிதனுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் எந்தப் பாதிப்புகளையும் சரி செய்ய முடியும்.
உதாரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் மூளை திசுக்களைப் புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம். இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இதய திசுக்களை உருவாக்கிச் சரி செய்ய முடியும். கண்களின் திசுக்களை உருவாக்கி கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கி விட முடியும். எலும்பு தேய்ந்து மூட்டு வலியால் நடக்க முடியவில்லை; தண்டுவட எலும்புகள் தேய்ந்து கடுமையான முதுகுவலியால் அவதிப்படுதல் போன்ற எல்லாப் பிரச்னைகளையும் இந்த ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, தேவையான எலும்புத் திசுக்களை உருவாக்கிச் சரி செய்து கொள்ள முடியும். கணையத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சரி செய்து இன்சுலினை சரியான அளவில் சுரக்கச் செய்து சர்க்கரை நோயை சரி செய்யும் ஆராய்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
மனிதனுக்கு ஏற்படும் முதுமையை முற்றாக ஒழித்து இளமைப் பொலிவோடு இருக்கச் செய்ய முடியும். நோய்களிலிருந்து மீள ஸ்டெம் செல்களைப் பயன்படுத்த முடியும். இப்படி ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வைத்துக் கொண்டால், குழந்தைகள் பெரியவர்களாகி, முதுமையடையும் வரை ஏற்படும் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளைச் சரி செய்து கொள்ளலாம்.
இப்போது ஸ்டெம் செல்களைப் பாதுகாக்கும் வங்கிகள் வந்துவிட்டன. ரத்த வங்கிகளில் எப்படி பல்வேறு வகைகளைச் சேர்ந்த ரத்தத்தைச் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அதைப் போன்று ஸ்டெம் செல் வங்கிகளில் பலரின் ஸ்டெம் செல்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஸ்டெம் செல்களுக்கான வங்கியை நடத்தும் ஸ்டெம்மெட் பயோடெக் நிறுவனத்தின் சென்னை மையத்தின் தலைவர் எஸ்.கஜபதியிடம் பேசினோம்:
ஸ்டெம் செல்களைப் பாதுகாக்க எவ்வளவு செலவு ஆகும்? என்று கேட்டோம்.
""கண்பார்வைக் குறைபாடு, எலும்புத் தேய்மானம், சர்க்கரை வியாதி போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வரப் பிரசாதம் போல வந்திருப்பது இந்த ஸ்டெம் செல் மருத்துவம். எங்கள் நிறுவனம் மும்பை, சென்னை, ஹைதராபாத், டெல்லி, புனே, பெங்களூரு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களின் ஸ்டெம் செல்கள் எங்களால் பாதுகாக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்களை எடுத்துப் பாதுகாப்பது என்பது கடினமான பணி. விலை உயர்ந்த கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஸ்டெம் செல்களை உரிய முறையில் எடுக்கும் செயல்முறைகளுக்காக ரூ.60 ஆயிரமும், தொடர்ந்து பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும் கட்டணமாகப் பெறுகிறோம்'' என்றார்.
நன்றி: தின மணி
No comments:
Post a Comment