Sunday, October 23, 2011

சொந்த வீடு Vs வாடகை வீடு


'இக்கரைக்கு அக்கரை பச்சை’ கதைதான் சொந்த வீடும், வாடகை வீடும்! வாடகை வீட்டில் இருப்பவர்கள், 'பேசாமல் கடனை வாங்கிச் சொந்தமாக வீடு கட்டிவிட்டால் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாமே’ என்று நினைக்கிறார்கள். அதுவே, சொந்த வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், 'வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாளவில்லையே; பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்திருக்கலாம்’ என்று நினைக்கிறார்கள்!


வங்கிக் கடனில் வீடு வாங்கி, மாதா மாதம் இ.எம்.ஐ. கட்டுவது லாபமா? அல்லது வாடகை வீட்டிலேயே கடைசி வரைக்கும் இருப்பது லாபமா? இந்த இரண்டில் 'எது பெஸ்ட்?’ என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த இரண்டில் எது சரி?

முதலில் வாடகை வீடு அல்லது கடனில் சொந்த வீடு இவற்றில் உள்ள சாதக, பாதக அம்சங்களைப் பார்ப்போம்...

சொந்த வீடு சாதகங்கள்!
 
சொந்த வீட்டுக்காரன் என்கிற அந்தஸ்தும் கௌரவமும் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு-இணை எதுவுமில்லை. கூடவே நிரந்தர முகவரி; பல தகவல் பரிமாற்றங்களுக்கு அவசியமான ஒன்றாக இது இருக்கிறது.

அடிக்கடி வீட்டைக் காலி செய்யும் சிக்கல் இல்லை. கூடவே, வீட்டு உரிமையாளர் தொல்லைகள் இல்லை.

கடனில் வீடு வாங்கும்போது, மொத்த காலம் முழுக்க ஒரே அளவிலான தவணை கட்டி வந்தால் (நிலையான வட்டி விகிதமாக இருக்கும் பட்சத்தில்) கடன் அடைந்துவிடும். வட்டி அதிகரித்தாலும் உங்களின் சம்பளம் அதிகரித்திருக்கும் பட்சத்தில் மாதத் தவணையை சுலமாக முடித்துவிட முடியும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலே, வருமான வரியில் லட்சக்கணக்கில் சலுகைகள் இருக்கின்றன. இந்தச் சலுகைகளைப் பொறுத்தவரை குடியிருக்க வீடு வாங்கும்போது, திரும்பக் கட்டும் அசலில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் (80சி நிபந்தனைக்கு உட்பட்டு), ஆண்டுக்கு வட்டியில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை இருக்கிறது.

மின்சார கட்டணத்தைப் பொறுத்தவரை அரசு நிர்ணயித்ததைக் கட்டினால் போதும். இதன் மூலமாகவே சாதாரண குடும்பம் ஒன்று குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை மிச்சம் பிடித்துவிடலாம்.

சொந்த வீடு பாதகங்கள்!

வேறு ஊருக்கு பணி மாற்றம் வந்துவிட்டால் அவ்வளவுதான்! சொந்த வீட்டை விட்டுவிட்டுப் போவதா என்ற பெரும் குழப்பம் வந்துவிடும். போய்த்தான் ஆகவேண்டும் எனும்பட்சத்தில், வீட்டை நல்ல நபராகப் பார்த்து வாடகைக்கு விட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மாதத் தவணை போக, தண்ணீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வரி, சொத்து வரி, வீடு பராமரிப்பு, வெள்ளை அடித்தல் என பல செலவுகள் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும்.

ஃபிளாட் என்றால், குடும்பம் பெரிதாகும்போது போதுமானதாக இருக்காது. பெரிய வீடு தேவைப்படும். இருக்கும் வீட்டுக்கே இ.எம்.ஐ. கட்டமுடியாமல் கண்விழி பிதுங்கும் நிலையில் வேறு பெரிய வீடு வாங்குவது குறித்து யோசிக்கவே முடியாது.

வாடகை வீடு சாதகங்கள்:

'இருக்கிறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு ஊரே வீடு!’ என்பார்கள். அந்த வகையில் நம் வசதிக்கு ஏற்ப விருப்பப்பட்ட இடத்துக்கு வீட்டை மாற்றிக் கொண்டு போகலாம்.

பிள்ளைகளின் பள்ளி, கல்லூரிகளின் அருகிலேயேகூட வீட்டை எடுத்துக் கொள்ள முடியும்.

வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை (நிபந்தனைக்கு உட்பட்டு) பெற முடியும்.

வாடகை வீடு பாதகங்கள்:

வீட்டு உரிமையாளர் காலி செய்யச் சொன்னால் உடனே அடுத்த வீடு தேடி அலைய வேண்டும். மேலும், நீங்கள் கொஞ்சம் வசதியாக இருப்பதுபோல் தெரிந்தாலே வீட்டு உரிமையாளர்கள் வாடகையை கூட்டிவிடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அடுத்து, ஆண்டுக்கு ஆண்டு விலைவாசியைவிட வீட்டு வாடகை வேகமாக உயர்ந்து வருகிறது.

மின்சார கட்டணம் பெரும்பாலும், அரசு நிர்ணயித்ததைவிட யூனிட்டுக்கு கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும். மேலும், வீட்டு உரிமையாளர் கட்டும் சொத்து வரி, தண்ணீர் வரியை கிட்டத்தட்ட குடித்தனக்காரர் களிடமிருந்தே, ஏதாவது ஒருவகையில் வசூலித்து விடுகிறார்கள்.

அட்வான்ஸ் என்பது இன்றைக்கு லட்சங்களில் இருக்கிறது. வீட்டு வாடகை 10,000 என்றால், சென்னை போன்ற நகரங்களில் ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடு என்று கேட்கிறார்கள்.

மிக முக்கியமாக, அடிக்கடி முகவரி மாறுவதால் ரேஷன் கார்டு தொடங்கி பல ஆவணங்களில் முகவரி மாற்ற வேண்டியிருக்கும். இதற்காக நிறைய அலைய வேண்டியிருக்கும்; பணம் செலவாகும், வர வேண்டிய தகவல்கள் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. இப்படி பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
பணிக் காலத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டு வாடகைப்படி கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால், பணி ஓய்வுபெறும்போது மொத்த வாடகையையும் கையிலிருந்து கொடுப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருக்கும்.

இவையெல்லாம் நடைமுறை யில் உள்ள லாப - நஷ்டங்கள். ஆனால், ஃபைனான்ஷியலாக எது உகந்தது என்பதை அறிய உலக வங்கியின் ஆலோசகர் ஆர்.எஸ்.நம்பியிடம் கேட்டோம்.

''நம்மில் பலருக்கும் வாடகை வீட்டிலேயே காலம் கழிந்துவிடுகிறது. வாடகை வீட்டில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அது அடுத்தவர் வீடுதானே! வாடகையில் காலத்தைக் கழிப்பதைவிட, கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கிவிடுவது உத்தமம். ஆனால், அந்தக் கடன் உங்கள் கழுத்தை நெரிப்பது போல இருக்கக்கூடாது. பிடித்தம் போக கையில் கிடைக்கும் மாத வருமானத்தில் வீட்டுச் செலவு மற்றும் சேமிப்பு போக

40 சதவிகிதத்தை வீட்டு கடனாகச் செலுத்தலாம். மற்ற கடன்கள் எதுவும் இல்லாதபட்சத்தில், வட்டி உயர்வு போன்றவற்றை சமாளிக்க ஆரம்பத்திலேயே சம்பளத்தில் 40% என்ற அளவுக்கு வீட்டுக் கடனை வைத்துக் கொள்ளலாம்.

உச்சத்தில் இருக்கும் சொத்து விலை மற்றும் இரட்டை இலக்கத்திலிருக்கும் வீட்டுக் கடன் வட்டி ஆகியவற்றைக் காரணம் காட்டி சொந்த வீடு லாபமே இல்லை என்கிறார்கள். ஆனால், வீட்டு வாடகை மட்டும் உயராமலா இருக்கிறது? வாடகை வீடு, அல்லது கடனில் வீடு எது பெஸ்ட் என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்...

மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வாங்கும் 30 வயதான ஒருவர் புறநகர் ஒன்றில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை கடனில் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 21.25 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் கிடைக்கும். கடனை 11% வட்டியில் 20 வருடங்களில் திரும்பக் கட்டுகிறார் என்றால், மாதத் தவணை 21,934 ரூபாய். வருங்காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதால் இருபது ஆண்டு காலத்துக்கு சராசரியாக 11 சதவிகிதமாக வட்டியை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

இந்த 25 லட்ச ரூபாய் வீடு வாங்கும் ஏரியாவில், அதுபோன்ற ஒரு வீட்டில் குடியிருந்தால் மாத வாடகை 10,000 ரூபாய் என்று இருக்கும். இந்த வாடகை ஆண்டுக்கு 5% அதிகரிப்பதாக கணக்கு எடுத்துக் கொள்வோம். பல இடங்களில் 8-10% கூட அதிகரித்துவிடுகிறார்கள்.

5% வாடகை அதிகரித்தாலே வாடகை 10,000 ரூபாய் என்பது 18-வது ஆண்டிலேயே 22,800 ரூபாயாக அதிகரித்துவிடும். அதாவது, இ.எம்.ஐ. தொகையை விட வாடகை தாண்டிவிடுகிறது, அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே!

20 வருட காலத்தில் கடனில் வீடு வாங்கியவர் மொத்தம் 52,75,900 ரூபாய் கட்டி இருப்பார். இதுவே, வாடகை வீட்டில் இருப்பவர் 39,67,900 ரூபாய் வாடகையாகக் கொடுத்திருப்பார். சொந்த வீட்டுக்காரருக்கு வாடகை வீட்டுக்காரரைவிட சுமார் 13 லட்ச ரூபாய் அதிகம் செலவாகி இருக்கும். இருப்பினும் இந்த 13 லட்ச ரூபாயில் சுமார் 4 லட்ச ரூபாய்க்குச் சொந்த வீட்டுக்காரருக்கு வரிச் சலுகை கிடைத்திருக்கும். இதை வைத்துப் பார்த்தால் சொந்த வீட்டுக்காரர் கூடுதலாக சுமார் 9 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். வாடகை வீட்டில் இருப்பவர், சொந்த வீட்டில் இருப்பவர் கட்டும் மாதத் தவணையை விட குறைவான வாடகையைத்தான் கட்டி வருவார். உதாரணத்துக்கு, முதல் ஆண்டில் இ.எம்.ஐ.யை விட 11,943 ரூபாயை வாடகை வீட்டில் இருப்பவர் செலவழித்து இருப்பார். 

இந்தத் தொகையை அவர் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டாக ஆண்டுக்கு ஒரு முறை போட்டு வருவதாக வைத்துக் கொள்வோம். இந்த மிச்சமாகும் தொகை அடுத்து வரும் ஆண்டுகளில் குறைந்துக் கொண்டே வந்து 17-வது ஆண்டில் மாதம் சுமார் 350 ரூபாயாகி விடும். இந்த மிச்சமாகும் தொகையை வாடகை வீட்டில் குடியிருப்பவர் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் 54.43 லட்ச ரூபாய் மொத்தமாகச் சேர்ந்திருக்கும். வீட்டின் மதிப்பு 20 வருடத்தில் எவ்வளவாக உயர்ந்திருக்கும்.? சொத்தின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 15 சதவிகிதம் அதிகரித்தது (கடந்த காலங்களில் இதை விட அதிகமாகவே அதிகரித்திருக் கிறது) என்று வைத்துக் கொண்டால், வீட்டின் மதிப்பு சுமார் 75 லட்ச ரூபாயாக உயர்ந்திருக்கும்! இதில் எக்ஸ்ட்ராவாகக் கட்டிய 9 லட்ச ரூபாயை கழித்தால் 66 லட்ச ரூபாய் லாபம்! வாடகை வீட்டில் இருப்பவருக்கு சேர்ந்திருக்கும் தொகை 54.43 லட்சத்தைக் கழித்தால் 11.5 லட்ச ரூபாய் லாபம். 

மேலும், வட்டி மற்றும் அசலுக்கு கிடைத்திருக்கும் வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த லாபம் இன்னும் பல மடங்குதான். அந்த வகையில் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை கட்டும் தகுதி இருக்கும் பட்சத்தில் சொந்த வீடுதான் பெஸ்ட். எனவே, இப்போது வாடகை வீட்டில் இருப்பவர்கள், மாதத் தவணைக்கான தகுதியை அதிகரித்துக் கொண்டு சொந்த வீடு வாங்குவதே நல்லது.'' என்றார்.

ஆக, வாடகை வீட்டில் இருப்பதால் வீடு குறித்த பெரிய பொறுப்புகள் எதுவும் இன்றி இருக்கலாம் என்றாலும், பணி ஓய்வுபெறும் போது சொந்த வீடு என்பது மிகப் பெரும் பாதுகாப்பு. அந்த சமயத்தில் வருமானம் நின்றுபோனாலும்கூட வீட்டை 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ முறையில் வங்கியில் அடமானம் வைத்து, கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர்ந்து கழிக்க முடியும். அதனால், அகலக் கால் வைக்காமல் நமது விரலுக்கு ஏற்ற வீக்கம் கொண்ட வீட்டை சொந்தமாக்கிக் கொண்டால் அதுவே பெஸ்ட்!

No comments:

Post a Comment