Friday, October 7, 2011

"வாழைத்தண்டு" சிறுநீரக கல்லுக்கு சிறந்த மருந்து!


பாஸ்ட் புட்' கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு... சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது. பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று... சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.


அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை...

வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.  உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
source: ungalukkaaga

No comments:

Post a Comment