Sunday, December 4, 2011

ஆதார் அடையாள அட்டைப் பதிவு - மிக முக்கியம்

அன்புடன் சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரின் கவனத்திற்காக.
இந்திய அரசின், தேசிய தனிச்சிறப்பு அடையாள ஆணையம் சார்பாக ஆதார் என்ற தேசிய அளவிலான அடையாள அட்டைக்கான விபரங்கள் திரட்டும் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது என்பது மிக முக்கியமானதும், தேவையானதுமாகும். வரும் காலங்களில் இந்த ஆதார் அட்டையின் முக்கியத்துவம் மிகவும் தவிர்க்கமுடியாத ஒனறாக இருக்கப்போகிறது என்பது உண்மை. மேற்படி, ஆதார் அட்டைக்கான பதிவுகள் தற்போது நமது மாவட்டத்தில் ஒரே ஒரு அலுவலகத்தில் வைத்து தான் நடைபெற்றுவருகிறது.


 
அது குறித்த விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை காலம் தவறாமல் பயன்படுத்தி, உங்களை குறித்த தகவல்களை பதிவு செய்து ஆதார் அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு நடைபெறும் இடம் : நாகர்கோவில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள கார்வி (KARVI) அலுவலகம். (நாகர்கோயில் நீரழிவு நோய் மருத்துவர் ராஜ்பால் மருத்துவ மனையின் அருகாமையில், லெட்சுமி ஏஜென்சீஸ் என்ற கட்டிட பகுதியல் உள்ளது) நேரம்: தினமும் காலை 9 .00 - மாலை 5 .00 மணிவரை. காலை 9 மணியிலிருந்து 10 மணிவரையிலும் 120 நபர்களுக்கு மட்டும் உரிய படிவம் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு படிவம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. படிவம் பெறும் நபர் தனது புகைப்படம் அமையப் பெற்றுள்ள சரியான முகவரி பொறிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு அத்தாட்சி கடவினைக் காண்பித்தால்தான் உங்களுக்கு படிவம் கிடைக்கப்பெறும். 
 
அத்தாட்சி கடவு நகலும், ஒரிஜினலும் கையில் கொண்டு செல்லவேண்டும்.(குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படம் ஒட்டிய வங்கி கணக்கு புஸ்தகம், பேன் கார்ட், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் இதர இதுபோன்ற புகைப்படம் ஒட்டிய அத்தாட்சி கடவுகள். மேலும் இணைப்புகளை பார்க்கவும்) படிவம் உங்களுக்கு தரும் நேரம், கார்வி அலுவலக பெண் அலுவலர்கள் உங்களுக்கான வரிசை எண்ணை படிவத்தில் குறித்து தருகிறார்கள். பெறப்பட்ட படிவம் உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன்பின், காலை 10 மணிக்குப்பின் பதிவாளர்கள் ஒவ்வொருவரையும் வரிசைப்படி அழைத்து அட்டைதாரர் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் கொடுக்கும் தகவல்கள் கணனியில் சரியாக பதிவு செய்யப்படுகிறதா என்பதனை, நீங்கள் உடனுக்குடன் சரிப்பார்க்க உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
உங்களிடமிருந்து திரட்டப்படும் தகவல்கள்: உங்கள் பெயர், தகப்பனார் பெயர், பாதுகாவலர் பெயர், பிறந்த தியதி, வயது, முகவரி, உங்கள் தொலைதொடர்பு எண், மின் அஞ்சல் முகவரி (இருக்குமென்றால்), உங்களை நேரடியாகவே புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள், (புகைப்படம் கொண்டு செல்லத் தேவையில்லை), புகைப்படம் எடுக்கும்போது தலையிலுள்ள துண்டுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும், அட்டைதாரர்களின் இரு கண்கள், இரு கை விரல்களும் பெருவிரல் உட்பட முறையே பதிவு செய்கிறார்கள்.

பதிவு முடிந்ததும், பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டு (Acknowledgement) உங்கள் கையொப்பம் பெறப்பட்டு உங்களுக்கு ஒரு நகல் தருவார்கள்.
ஒரு நபர் குறித்த விபரங்கள் பதிவு செய்வதற்கு, குறைந்தது இருபது நிமிடங்களிலிருந்து முப்பது நிமிடங்கள் ஆகும்.(எந்தவித இடையூறுகளும் இல்லாதிருந்தால்) அத்தாட்சி பத்திரத்தில் உள்ள புகைப்பட நபர்களுக்கு மட்டுமே படிவம் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் கொடுக்கப்பட்டு, உங்கள் பகுதி தபால் அலுவலரால் உறுதி செய்யப்பட்ட தகவல் ஆணையத்திற்கு கிடைக்கப்பெற்றவுடன், மூன்று மாதத்திற்குள் இந்திய தேசிய தனித்தன்மை அடையாள அட்டை (AADHAAR) தபால் வழியாக உங்கள் இல்லம் வந்து சேரும்.

அன்பு சகோதரர்களே, மேற்சொன்ன இந்த விபரங்களை உங்கள் இல்லங்களில் உள்ளவர்களுக்கு காலம் தவறாமல் தெரிவித்து, உடனடியாக சென்று பதிவு செய்ய சொல்லுங்கள். மின் அஞ்சல் முகவரி இல்லாத நண்பர்களிடம் இதனை தெரிவியுங்கள்.

எஸ்.அப்துல் வாஹித்
செயலாளர். "PACT"
பீர்முஹம்மது அப்பா கல்வி கலாச்சார அறக்கட்டளை
அ.பீ.மு.அ.
தக்கலை.

No comments:

Post a Comment