Wednesday, December 21, 2011

ஒரு பெண்... ஓராயிரம் பொய்கள்! அனுஷ்கா என்ற அபிநயா பிடிபட்ட கதை

மதிய நேரத்தில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பலரையும் ஸ்தம்பிக்கவைத்தது, ஓர் இளம் பெண்ணின் அபயக் குரல். 'என்னைக் காப்பாத்துங்க... பணக்காரப் பையன் ஒருத்தன் என்னை ஏமாத்திக் கர்ப்பமாக்கிட்டு கல்யாணம் பண்ணிக்காம ஏமாத்திட்டான். போலீஸ்ல புகார் செஞ்சேன். ஆனா, போலீஸ் என் மேல பொய் கேஸ் போட்டிருச்சு... எனக்கு யாராச்சும் உதவி பண்ணுங்க...' என்று உச்சஸ்தாதியில் கத்தி அழுது புரண்டார்.உடனே நீதிமன்றத்தில் இருந்த வழக்கறி ஞர்கள் ஓன்று கூடி அந்தப் பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்க, 'இந்தப் பெண் சொல்றது எல்லாமே பொய்... நம்பாதீங்க’ என்று பெண் போலீஸார் எடுத்துச் சொல்லி விரட்டினார்கள். கடந்த 16-ம் தேதி நடந்த சம்பவம் இது! யார் அந்தப் பெண்? அவருக்கு என்ன சிக்கல்?


அனுஷ்கா என்றும் அபிநயா என்றும் தன்னுடைய பெயரைச் சொல்லும் அந்தப் பெண்ணுக்கு 23 வயது இருக்கும். இவர், கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் எம்.பி-யுமான ஒரு தொழிலதிபரின் மகள் என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். மேலும், சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் தனக்கு 350 கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்துகள் இருப்பதாகவும் பரந்த மனப் பான்மைகொண்டவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார். ஃபேஸ்புக்கில் தனது ஒரிஜினல் புகைப்படத்தை வெளியிடாமல், வேறு ஓர் அழகிய பெண்ணின் படத்தை வெளியிட்டு இருந்ததால், ஏராளமான நட்பு வட்டாரம். அதில் நல்ல வசதி படைத்த ஆண்களை மட்டும் தேர்ந்து எடுத்து நட்புகொண்டார்.


நட்புகொள்பவர்களிடம் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்போனில் அரட்டை அடிப் பாராம். கொஞ்ச நாட்கள் கழிந்ததும் மிகவும் சோகமாகப் பேசுவாராம். பெற்றோரின் புறக்கணிப்பு காரணமாக கடன் வாங்கியதாகவும், அதனை அடைக்க முடியவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்றும் உடைந்த குரலில் தெரிவிப்பாராம். அழுகுரலைக் கேட்டு பலர் பண உதவி செய்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் ஆறுதலாக அனுப்பிய மெசேஜ், இ.மெயில், செல் போன் பேச்சு போன்றவற்றை எல்லாம் ஆதாரமாக சேகரித்துக் கொள்வாராம். அந்த ஆதாரங்களைக் காட்டியே அடுத்தடுத்து பணம் பறித்து இருக்கிறார். பணம் தரவில்லை என்றால் போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுவாராம். அதனால் பிரச்னைக்குப் பயந்த சிலர் பணம் கொடுத்துத் தப்பித்து இருக்கிறார்கள்.

அதில் ஒருவர்தான் திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபரான முருகன். இவருக்கு ஏராளமாக சொத்துகள் இருப்பதை பேச்சுவாக்கில் தெரிந்துகொண்ட அனுஷ்கா, வலிந்து வலிந்துப் பேசிக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அனுஷ்காவை நேரில் வரவழைத்து சந்தித்த முருகனுக்கு பலத்த அதிர்ச்சி. ஏனென்றால் ஃபேஸ்புக்கில் இருந்த போட்டோவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருந்தார் ஒரிஜினல் அனுஷ்கா. அதனால் தொடர்பைத் துண்டிக்க முயன்றார் முருகன். ஆனால், அவரை விடுவதாக இல்லை அனுஷ்கா. முருகனின் அலுவலகம், வீடு என சென்று, 'என்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது சொத்தில் பாதியை எழுதிவைக்க வேண்டும்’ என்று டார்ச்சர் செய்திருக்கிறார். நிலைமை சமாளிக்க முடியாத அளவுக்குப் போகவே, வெறுப்படைந்த முருகன் போலீஸில் புகார் செய்து அனுஷ்காவைப் பிடித்து ஒப்படைத்து விட்டார்.

போலீஸில் சிக்கியதும் அனுஷ்கா செய்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு ஆரம்பத்தில் காவல் துறையினரே அசந்துவிட்டார்கள். அதனால் அவரை தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்து, உபசரித்து இணக்கமாகப் பேசி தகவல்களைக் கறந்தனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியிலும், கரூர் முகவரி யிலும் அனுஷ்கா அல்லது அபிநயா என்கிற பெயரில் யாருமே இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொண்ட பிறகுதான், காவல் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

போலீஸ் விசாரணையில் இருந்த அனுஷ்காவுடன் பேசினோம். 'கரூரில் உள்ள முன்னாள் அமைச்சரின் இரண்டாவது மனைவி தமிழ் செல்வியின் மகள் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது அம்மா இறந்துவிட்டார். எனது அப்பா என்னைப்பற்றி வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்து, என்னுடன் பேசுவது இல்லை. திருச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் என்னை கல்யாணம் செய்வதாகச் சொல்லி என்னைக் கெடுத்துக் கர்ப்பமாக்கினார். பிறகு தில்லை நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்துக் கர்ப்பத்தைக் கலைக்க ஏற்பாடு செய்தார்'' என்று கண்கள் கலங்கப் பேசினார்.

அனுஷ்கா மீது வழக்குப் பதிவு செய்த கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரவாசுதேவனிடம் பேசினோம். ''விசாரணையில் அந்தப் பெண் தெரிவித்த தகவல்கள் எல்லாம் பொய். ஆகஸ்ட் மாதம் அபார்ஷன் நடந்ததாகச் சொன்ன ஆஸ்பத்திரியும்கூட பொய். பெண் என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் விசாரணையைக் கொண்டுசெல்ல முடியவில்லை. அந்த பெண்ணை பெயிலில் எடுக்க யார் வருகிறார்கள் என்பதை வைத்துதான் அவளைப்பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ள முடியும். ஏமாற்றுதல், மிரட்டுதல் ஆகிய இரண்டு குற்றங்களுக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம்'' என்றார்.

அனுஷ்கா சொல்வது உண்மையா, பொய்யா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!

- அ.சாதிக் பாட்சா
நன்றி : ஜூனியர் விகடன்

1 comment:

  1. இந்த மாதிரியான பொண்ணுங்கள நடு ரோட்ல நிக்க வெச்சு கல்லாலா அடிக்கணும். மூஞ்ச பாத்தா தேரில அவ ஒரு திருட்டு இவனு. வயிறு எரியுது !
    பெண் இனத்துக்கு இழிவு !
    பாவம் இந்த நாயால பாதிக்க பட்டவர்கள் எத்தனை பேரோ தெரியல. கடவுள் தண்டனை கண்டிப்பா உண்டு. தெரியாத பெண்ணிடம் பழகுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் !

    ReplyDelete