Wednesday, December 21, 2011

சசிகலா வெளியேற்றப்பட்ட பின்னணியின் பரபரப்பு தகவல்கள்!

"அதிகார வர்க்கமாக' செயல்பட்ட சசிகலா குடும்பத்தாரின் தடைகளை மீறி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத நிலையை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலம், தமிழக உளவுத் துறையினர் தகர்த்து, சசிகலா குடும்பத்தார் கூண்டோடு வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளனர். அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது. அவர்களது ஆதரவாளர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரிகள், அமைச்சர்கள், பொறுப்புகளில் செயல்பட முடியும் என்ற நிலை இருந்தது. உளவுத்துறை தகவல்கள் கூட சசிகலா குடும்பத்தார் நேரடி பார்வைக்குப் பின், "வடிகட்டப்பட்டு' ஜெயலலிதாவை சென்றடையும். அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் செல்லும் தபால், பதிவுத்தபால், போயஸ் கார்டனில் நேரில் பலர் கூட்டமாக சென்று கொடுக்கப்பட்ட மனுக்கள் கூட, ஜெயலலிதா பார்வைக்கு செல்லாது. ஆனால், ஜெயலலிதாவின் கார் வரும் வழியில், வழிமறித்து யார், எந்த மனுக்கொடுத்தாலும், சில மணி நேரத்தில் பலனை வழங்கியது அனைவரும் அறிந்தது. 
இதில், உயர் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம். உளவுத்துறையினரால் கூட முழு தகவல்களையும் ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆறு மாதங்களில் சசிகலா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட பல தரப்பினர், தங்கள் அடக்கப்பட்ட முறைகளை, ஜெயலலிதாவிடம் முறையிட முயன்றும் முடியவில்லை.




உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ராமானுஜம், ஜெயலலிதாவின் அதிக நம்பிக்கை பெற்றவர் என்பதால், அவர் மட்டும் எப்போதாவது முதல்வரை தனியாக சந்திக்க வாய்ப்பு கிட்டியது. ஆனாலும், அதிகம் பேச முடியாத நிலை நீடித்தது. இதனால், ராமானுஜத்தின் செயல்பாட்டை முடக்க, உளவுத்துறையில், ஐ.ஜி., ராஜேந்திரன், அவரை தொடர்ந்து டி.ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆகியோர், சசிகலா கும்பலின் விருப்பத்துக்காக நியமிக்கப்பட்டனர். "நீங்கள் சட்டம் ஒழுங்கை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், உளவுத்துறை தகவல்களை ராஜேந்திரன் மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகியோர் பார்ப்பர்' என, ராமானுஜத்திடம், சசிகலா தெரிவித்துள்ளதாக, கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், "உளவுத்துறை குறித்த தகவலை முதல்வர் கேட்டால், நான் பதில் சொல்ல வேண்டி வரும். முதல்வர் கூறும் வரை நான் அனைத்தையும் கவனிக்கிறேன்' என, தர்ம சங்கடமான நிலையில் ராமானுஜம் கூறி வந்துள்ளார்.




இதற்கிடையே தான் உளவுத்துறையில் இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்டார். சில நாட்களில் தன் பதவி பறிபோய்விடும் என்ற நிலையை அறிந்த ராமானுஜம், புதிய திட்டம் வகுத்தார். குஜராத் மாநில டி.ஜி.பி., ஒருவரும், ராமானுஜமும், ஐ.பி.எஸ்.,ல் ஒரே பேட்ஜ்மெட். இப்பிரச்னை குறித்து அவரிடம் முழு தகவலையும் தெரிவித்து, அ.தி.மு.க., மற்றும் ஜெயலலிதாவை காப்பாற்றவும், சசிகலா குடும்பத்தினர் நடவடிக்கையை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கவும் முயன்றார் ராமானுஜம். இவ்விஷயங்களை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் அம்மாநில டி.ஜி.பி.




பின்னர் நடந்ததுதான் சுவாரஸ்யம்! இப்பிரச்னையை அறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர் நரேந்திரமோடி, தானே நேரடியாக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக உளவுத்துறை மூலம் தனக்கு கிடைத்த அனைத்து தகவல்கள், ஆவணங்களையும், தனக்கு நம்பிக்கைக்கு உரிய ரகசிய நபர் மூலம், முதல்வர் ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்த்துள்ளார். அவற்றை பார்த்த பிறகே, முதல்வர் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். இச்சூழலில் தான், பெங்களூரூ நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து சசிகலாவும் நேரில் ஆஜராக நேரிட்டது.




ஆரம்பத்தில் இருவரும் ஆஜராகி, விசாரணை முடியும் வரை இருவரும் சேர்ந்தே, பெங்களூரூ சென்று வரத்திட்டமிட்டனர். மோடியின் தகவல் கிடைத்த பின், சசிகலா பெங்களூரு நீதிமன்றம் சென்ற போது, ஜெயலலிதா சென்னையிலேயே தங்கி விட்டார். அப்போது கிடைத்த மூன்று நாள் அவகாசத்தில், பல அதிகாரிகள், அமைச்சர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை அழைத்து பல தகவல்களின் உண்மைகளை முதல்வர் ஜெயலலிதா பெற்றார். இதன் வெளிப்பாடாக, சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சசிகலா குடும்பத்தால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், பொறுப்பாளர்கள், தொழிலதிபர்கள் என பலரும், ராமானுஜத்தையும், உளவுத்துறையின் வெற்றியையும் கொண்டாடுகின்றனர். இதில் தூக்கி எரியப்பட்ட போலீஸ் அதிகாரிள் பலர் உற்சாகத்தில் உள்ளனர்.
மூலம்: தினமலர்

No comments:

Post a Comment