Monday, December 12, 2011

கூடங்குளத்தில் பேராபத்து ஏற்பட வாய்ப்பு- விஞ்ஞானி தகவல்!


கூடங்குளத்தில் அணு உலைகளுக்குத் தேவையான தண்ணீர் இல்லை. எனவே, எப்போது வேண்டுமானாலும் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் கூறினார்  அணு உலைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மற்றும் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து அணு எதிர்ப்பாளர்கள் களம் சென்னையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஞ்ஞானி பத்மநாபன் கூறியது:

சென்னை அருகே கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு உலைகளைக் குளிர்விக்கத் தேவையான தண்ணீர் கடலிலிருந்து மட்டுமின்றி, ஆற்றிலிருந்தும் எடுக்கப்படுகிறது. அதாவது, பாலாற்றிலிருந்து பெருமளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

ஆனால், கூடங்குளத்தில் இயற்கை வளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்படவில்லை. பேச்சிப்பாறை அணையிலிருந்தும், கோதையாறு அணையிலிருந்தும் தண்ணீர் எடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கு விவசாயிகள் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்படவில்லை.

இதனால், கூடங்குளம் அணு உலைகள் கடல் நீரையே பெருமளவில் நம்பியுள்ளன. கூடங்குளத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் 4 பிளான்ட்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்று, அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

எனவே, மூன்று பிளான்ட்டுகள் மட்டுமே எப்போதும் இயங்கும். இவற்றின் மூலம் ஒரு நாளுக்கு 75 லட்சம் லிட்டர் சுத்தமான நீர் உற்பத்தி செய்ய முடியும். இதைக் கொண்டு 2 அணு உலைகளை மட்டுமே இயக்க முடியும். மீதமுள்ள நீர் அங்குள்ள குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவைப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கையிருப்பாக 12 டேங்குகளில் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு 2 அணு உலைகளை 36 மணி நேரம் இயங்க வைக்க முடியும். மீதமுள்ள நீர் குடியிருப்புகளுக்குத் தேவைப்படும்.

அணு உலை இயங்கினாலும், இயங்காவிட்டாலும் தண்ணீர் மூலம் தொடர்ந்து குளிர்விக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அணு உலை இயங்கும் போது நாளொன்றுக்கு ஒரு அணு உலைக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், இயங்காதபோது 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் தேவை.

இந்த நிலையில், கடல்நீரை குடிநீராக்கும் பிளான்ட்டுகள் அனைத்தும் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்சாரம் தடைப்படும்போது சுத்தமான நீர் கிடைக்காது.

கூடங்குளத்தில் நவீன தொழில்நுட்பம் என்பதால், அணு உலைகள் தண்ணீர் இல்லாமல் 24 மணி நேரம் வரை தாங்கும் சக்தியுடையவை. ஆனால், அதன் பிறகு அதிலுள்ள எரிபொருள் வெப்பமடைந்து கதிர்வீச்சு பரவ ஆரம்பித்துவிடும் என்றார்.

கல்பாக்கத்திலிருந்து வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது: கல்பாக்கத்தில் பாதிப்பு இல்லை என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. அணு உலைகளுக்கு பாலாற்றிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்படுவதால், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தைராய்டு புற்றுநோய், குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்பாக்கம் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதன் பிறகே கூடங்குளம் திட்டத்தை தொடங்க வேண்டும் என்றார்.
Source: payanulla thagavalkal

No comments:

Post a Comment