Friday, December 9, 2011

நெல்லையில் கொல்லப்பட்ட ப்ளஸ் டூ மாணவி மைமூன் ஷர்மிளா.


ஈவ் டீசிங்கில் கொல்லப்பட்ட சென்னை மாணவி சரிகாஷாவை மக்கள் யாரும் மறக்க முடியாது. அதே பாணியில் நெல்லையில் கொல்லப்பட்டிருக்கிறார் ப்ளஸ் டூ மாணவி மைமூன் ஷர்மிளா.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைச் சேர்ந்த செய்யது முகம்மதுவின் மகள் மைமூன் ஷர்மிளா. பதினேழு வயதான இவர், பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். வகுப்பில் முதல் மாணவியான ஷர்மிளா, கடந்த 5-ம் தேதி மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார்.


அவரது சைக்கிளை பின்தொடர்ந்து காரில் வந்த மாணவன் ஷர்மிளாவோடு பேச முயற்சி செய்திருக்கிறான். ஷர்மிளா அதை அலட்சியப்படுத்தவே, கோபத்தில் காரை வேகமாக ஓட்டி மிரட்டியிருக்கிறான். தனது வீடு இருக்கும் தெருவில் ஷர்மிளா சைக்கிளில் திரும்பும்போது, திடீரென வேகமெடுத்த அந்த கார் அவரை மோதித் தள்ளிய து. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், தலையில் அடிபட்டதால் ஷர்மிளா உயிரிழந்தார்.

மாணவி கொல்லப்பட்ட சம்பவம் அறிந்ததும் பாளையங்கோட்டையில் ஏகப்பட்ட பரபரப்பு... இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் மருத்துவமனை முன்பு திரண்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானப்படுத்திய பின்னரே, அவர்கள் கலைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய பேச்சிமுத்து, ‘‘இது அப்பட்டமான ஒரு கொலை. மாணவி மைமூன் ஷர்மிளாவைக் கொன்றவன் மருத்துவக் கல்லூரி மாணவன் மோனிஷ் ராஜா. மானூரில் மறைந்த டாக்டர் மோகன்தாஸின் மகன். அவரது அம்மா டாக்டர் மலர்விழி மானூரில் கிளினிக் வைத்திருக்கிறார். மோனிஷ் ராஜா சென்னை யிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். பாளையங்கோட்டையில் உள்ள தனது பள்ளி நண்பர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார். அப்படி வரும்போது, அவர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளிகளுக்கு முன்பு நின்று மாணவிகளை கிண்டல் செய்வது வழக்கம். இதேபோல், மாணவி ஷர்மிளாவிடமும் பேச மோனிஷ் பலமுறை முயற்சித்தும் அதை அந்தப் பெண் அலட்சியப்படுத்தினாராம்.

சம்பவத்தன்றும் ஷர்மிளாவைக் கவர மோனிஷ் காரில் சென்றிருக்கிறார். ஷர்மிளா அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவே, தனது ஹீரோயிசத்தைக் காண்பிப்பதற்காக காரை வேகமாக ஓட்டியிருக்கிறார். இந்த ஹீரோயிசம் சின்னப்பெண்ணை பலிவாங்கிவிட்டது. மோனிஷை கொலை வழக்கில் கைது செய்வதோடு, இதுபோல் சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார் பேச்சிமுத்து.

இறந்தவர் இஸ்லாமியர் என்பதால் அது மதப் பிரச்னையாக உருவெடுத்து விடக்கூடாது என்பதில் விழித்துக்கொண்ட போலீஸ், மோனீஷை உடனடியாக கைது செய்துவி ட்டது. நெல்லை போலீஸ் கமிஷனர் கருணாசாகர் நேரடியாக ஷர்மிளாவின் வீட்டிற்குப் போய் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

கூடவே, ‘‘பள்ளி மாணவர்களிடமும், சம்பவத்தைப் பார்த்தவர்களிடமும் விசாரித்த போது இது ஒரு திட்டமிட்ட கொலை என்றே தெரிய வருகிறது. எனவே, இ.பி.கோ 304எ (விபத்து) என்று வழக்குப் பதிந்ததை 302 (கொலை) என்று மாற்றியிருக்கிறோம். மாணவன் மோனிஷ் ஏற்கெனவே அந்தப் பெண்ணிற்கு பலமுறை தொல்லை கொடுத்ததும், ஷர்மிளா அவனை அலட்சியப்படுத்தியதால் அவன் இப்படி நடந்துகொண்டதும் தெரியவந்தது’’ என்றார்.மாணவனின் இந்தக் குரூரப் போக்கு பற்றி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் கண்ணனிடம் பேசினோம். ‘‘தனியார் பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலானோர் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். வீட்டில் கண்டித்தால் ஓடிவிடுவார்கள். பள்ளியில் கண்டித்தால் படிக்க மாட்டார்கள். பணத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகள் மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு பள்ளி முன்பும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது அரசு விதி. அதையும் யாரும் பின்பற்றுவதில்லை. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை கொலை செய்யும் நோக்கில் அம்மாணவன் செயல்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட மனநிலை இந்த வயதில் எழாது.


புது காரைக் காண்பித்து ஹீரோவாக முயற்சி செய்திருப்பான். அப்போது கார் மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம். மாணவர்களுக்கு கார் வாங்கிக் கொடுத்து வசதியைப் பழக்கும் பெற்றோர்களும், அலட்சியமாக இருக்கும் பள்ளி, கல்லூரிகளும் தான் இதற்குக் காரணம்’’ என்றார்.


தன்னுடைய பிடிவாதத்தாலும், ஹீரோயிசத்தாலும் ஒரு மாணவியின் வாழ்க்கையை மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையையும் இழந்திருக்கிறார் மோனிஷ்!


அ. துரைசாமி


நன்றி: குமுதம் ரிபோர்ட்டர்

No comments:

Post a Comment