சென்னை: எப்போதும் வெறிச்சோடிக்கிடக்கும் வெங்கடா சலம் நகர். 141-ம் வீட்டுக் கதவைத் தட்டுகிறார் கள் கட்டுமஸ்தான வாலிபர்கள் இருவர். கதவைத் திறந்த யாஸ்மின் முகத்தில் 1,000 வாட்ஸ் மகிழ்ச்சி. சிரித்த முகத்துடன் அந்த வாலிபர்களை உள்ளே அழைத்து கதவைச் சாத்துகிறார். அடுத்த கணமே அந்த வாலிபர்கள், யாஸ்மினை முரட்டுத்தனமாகத் தாக்கி, திடுமெனக் கத்தியால் குத்திச் சாய்க்க... அதிர்ச்சி விலகாமலே உயிர் விடுகிறார் யாஸ்மின். வீட்டில் இருந்த நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பின் வாசல் வழியே சாவகாசமாக இருவரும் தப்பிச் செல்கிறார்கள்.
இது கதை அல்ல, கடந்த 12-ம் தேதி பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம்.
யார் இந்த யாஸ்மின்? கொலையாளிகள் யார்? என்று விசாரணையை முடுக்கிவிட்டது காவல் துறை. கொலை முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துபோக, யாஸ்மின் குடும்பம் தலை குனிந்து நிற்கிறது.
47 வயதாகும் யாஸ்மின் 25 வருடங்களுக்கு முன்பு, லியாகத் அலியைக் காதலித்துக் கரம் பிடித்தவர். வயதுக்கு வந்த இரண்டு மகள்கள். செலவுக்குப் பணம் கேட்டு கணவருடன் அடிக்கடி சண்டை பிடித்து ஓய்ந்துபோன யாஸ்மின், பண வரவுக்காக புதிய(?) தொழிலைத் தேர்வு செய்தார். அந்த வழிதான் இன்று அவரது மரணத்துக்கும் குடும்பத்தின் அவமானத்துக்கும் காரணமாகிப்போனது.
கொலை நடந்த இரண்டே நாட்களில், குற்றவாளி களைப் பிடித்துவிட்ட தனிப் படைப் போலீஸார், ''ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பம் என்பதால், வீட்டில் லியாகத் அலியைத் தவிர வேறு யாரிடமும் செல்போன், டெலிபோன் எதுவுமே கிடையாது என்ற தகவல் முதலில் கிடைத்தது. 'ஏதாவது பேச வேண்டும் என்றால்கூட ஒரு ரூபாய் காயின் போனில்தான் பேசுவோம்’ என்றார்கள். பக்கத்தில் உள்ள பி.சி.ஓ-வில் விசாரித்தபோதுதான், யாருக்கும் தெரியாமல் யாஸ்மின் தனியாக ஒரு செல்போன் உபயோகித்த தகவல் தெரிந்தது. சம்பவம் நடந்த அன்று, யாஸ்மின் வீட்டில் இருந்து இரண்டு நபர்கள் பின் வாசல் வழியாக வெளியேறிச் சென்றதை, அங்கே இருந்த கட்டடத் தொழிலாளர்கள் சொன்னார்கள். இந்த இரண்டு தகவல்களையும் வைத்துத்தான் விசாரணைகளைத் துரிதப்படுத்தினோம்.
யாஸ்மினுக்கு கோபிநாத், சுப்பிரமணி இருவருடனும் நெருக்கமானத் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களிடம், தனது கணவர் வைத்திருந்த பணம், நகை போன்ற விபரங்களை யதார்த்தமாகப் பகிர்ந்து இருக்கிறார். ஆனால், அந்த பண விவகாரம் இருவருக்கும் ஆசையைத் தூண்டியிருக்கிறது. அதனால், யாஸ்மினைக் குரூரமாகச் கொலை செய்துவிட்டு பணம், நகையை கொள்ளையடித்துச் சென்றார்கள். யாஸ்மின் காதில் அணிந்திருந்த கம்மலைக் கழட்ட முடியாத ஆத்திரத்தில், காதோடு அறுத்து எடுத்து இருக்கிறார்கள். யாஸ்மின் பயன்படுத்திய ரகசிய செல்போனை சுக்குநூறாக உடைத்து கொரட் டூர் சுடுகாட்டில் வீசிவிட்டார்கள். ஆனால் அந்த செல்போன் நம்பரை வைத்து நாங்கள் பிடித்து விட்டோம்...'' என்று சொன்னார்கள்.
லியாகத் அலிகான் குடும்பத் தரப்பில் பேசிய போது, ''யாஸ்மின் குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படும் செய்திகளை ஜீரணிக்க முடியாமல் துடித்துக்கிடக்கிறோம். இந்த நிலையில், நாங்கள் யாருடனும் பேச விரும்பவில்லை'' என்கிறார்கள் சோகமாக.
சென்னையை அதிரவைத்திருக்கும் இந்த விஷக் கலாசாரம் குறித்துப் பேசிய சில காக்கிகள், ''கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகள், சிட்டியில் உள்ள ஹோட்டல், லாட்ஜ்களில் அடிக்கடி போலீஸ் ரெய்டு நடக்கும். அதனால், பாதுகாப்பாக சென்னையின் புறநகர்ப் பகுதிக்கு பலரும் மாறிவிட்டார்கள். சென்னை மாதிரியான நகர்ப்புறங்களில், இன்டர்நெட் மூலமே இந்த நெட்வொர்க் நடக்கிறது.
'ஹாய், நான் ........... காலேஜ் ஸ்டூடன்ட். என்னோடு டேட்டிங் வர விருப்பமா?’ என்பதில் ஆரம்பித்து 'அழகழகான சென்னை குடும்பப் பெண்களோடு உல்லாசம் அனுபவிக்க விருப்பமா?’ என்பது வரை.... அந்தரங்க ஆசை காட்டும் வாசகங்களோடு செல்போன் நம்பரையும் இன்டர்நெட்டிலேயே வெளியிடுகிறார்கள். இந்த செல்போன் நம்பர்கள் எல்லாமே பக்கத்து மாநில எண்களாகவே இருக்கும். அதுவும் போலியான முகவரியில் வாங்கப்பட்ட சிம்கார்டுகள். அப்பட்டமாக நடக்கும் இந்த விபச்சாரக் கும்பலின் நெட்வொர்க்கை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.
நெட்டில் காணப்படும் நம்பரைப் பார்த்து ஒருவர் தொடர்புகொண்டால், 'இந்த எண்ணிற்கு 500 ரூபாய் ரீசார்ஜ் செய்யுங்கள். மற்ற விபரங் களைத் தெரியப்படுத்துகிறேன்’ என்பார்கள். இதுவே ரெகுலர் கஸ்டமராக இருந்தால், வங்கி கணக்கு எண்ணைச் சொல்லி நேரடியாகப் பணம் கட்டச் சொல்வார்கள். அதன் பிறகு, அவர் கேட்கும் மாதிரியான ஒரு பெண்ணின் முகவரியைக் கொடுக்கிறார்கள். இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குத் தெரிந்த குடும்பப் பெண்களை உள்ளே இழுக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்குத் தோழியைப் பார்ப்பது போல் போய் வந்தால், ஆயிரக்கணக்கில் பணமும் இன்பமும் கிடைக்கும் என்று சொல்லி ஆசை காட்டி இழுத்துவிடுகிறார்கள். இந்தப் பெண்களுக்கு, புரோக்கர்களின் உண்மையான பெயர்கூட தெரியாது. ஒரு முறை சென்று வந்தவர்களால், பின்னர் அதில் இருந்து மீள முடியாது. அவர்களும் வேறு புதிய பெண்களை உள்ளே இழுத்துவிடுகிறார்கள்.
சமீபத்தில், நெசப்பாக்கத்திலும் இதே போன்று ஒரு வீட்டில் விபசாரம் நடத்திவந்த ஒரு பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டார். மாம்பலத்திலும் இப்படி ஒரு படுகொலை நடந்தது. இப்போது யாஸ்மின் கொலை. இந்த கலாசாரம் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. எதிர் விளைவுகளை எண்ணிப் பார்த்துத் திருந்தாவிட்டால், எளிதில் தடுக்க முடியாது'' என்கிறார்கள் கவலையோடு.
எல்லை மீறினால் குடும்பம் மட்டும் அல்ல, உயிரும் மானமும் பறிபோகும் என்ற விழிப்பு உணர்வை பெண்களிடம் ஊட்டப்போவது யார்?
- த.கதிரவன்
நன்றி:ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment