Tuesday, August 2, 2011

பொடுகு தொந்தரவு...

ஆண்- பெண் இருபாலருக்கும் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை பொடுகு. உலக அளவில் 60 சதவீதம் பேர் பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.  இந்தியர்களில் 70 சதவீதம் பேருக்கு பொடுகுப் பிரச்சினை இருக்கிறது. பொடுகு; அரிப்பை ஏற்படுத்துவதோடு நிரந்தர தொல்லையாக இருந்து எரிச்சலூட்டும் பிரச்சினையாகும். உச்சந்தலை தோல் செல்கள் இறந்து உதிர்வதைத்தான் பொடுகு என்கிறோம்.
 
தலையில் பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் வளர்வதாலும், தலைமுடியில் எண்ணெய் அதிகமாகவோ அல்லது எண்ணையின்றி இருந்தாலும் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும்.


தலையில் சுரக்கும் சீபம் என்னும் திரவம் பூஞ்சை வளர காரணமாகிறது. மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பூஞ்சைகளும் சில நுண்ணுயிர்களும் தலையில் பெருகி வளர ஏதுவாகிறது.

ஆண்களுக்கு அதிகமாக சீபம் சுரப்பதால் அவர்களுக்கு பொடுகு பாதிப்பும் அதிகமாக ஏற்படுகிறது. பெண்களுக்கு கவலை மற்றும் தலையில் சேரும் ரசாயன மிச்சங்கள் காரணமாக அதிக அளவில் பொடுகு பிரச்சினை வருகிறது.
தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதனால் பொடுகு நீங்கிவிடாது. மழைக்காலத்தில் பொடுகு உதிர்வது அதிகரிப்பதால் மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். தவறி, நனைந்துவிட்டால் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவ வேண்டும். முற்றிலுமாக முடியை காய வைக்க வேண்டும்.

`கிளியர் பாரிஸ் இன்ஸ்டியூட்' என்ற அமைப்பு இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் சீனாவிலும், இந்தியாவிலும் அதிகம்பேர் (70%) பொடுகு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. குறைந்த அளவாக ஜெர்மனில் 40 சதவீதம் பேருக்கு பொடுகுப் பிரச்சினை இருந்துள்ளது. தலையை சுத்தமாக வைத்திருப்பதும், சத்தான உணவுகள் உண்பதும், மனதை அமைதியாக வைத்திருப்பதும் பொடுகு தொந்தரவை குறைக்கும்.
நன்றி: உங்களுக்காக

No comments:

Post a Comment