Thursday, August 18, 2011

காய்கறி, பழங்களில் ரசாயனம் (Chemicals) ஜாக்கிரதை!


நமது அன்றாட உணவில் காய்கறிகள், பழங்களுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியர்களின் உணவில் 23 சதவீதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன என, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை, காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன. பல்வேறு நோய்களைத் தடுக்கும் மருந்தாக, பச்சைக் காய்கறிகள், பழங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்த காய்கறி, பழங்களை தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டோம். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்காமல் அவை நமக்குக் கிடைத்தன.

இன்று, விதைகளைப் பதப்படுத்துவதில் துவங்கி, மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் வரை பல்வேறு கட்டங்களில், காய்கறி, பழங்களில் ரசாயனப் பொருள்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும், மறைமுகமாகச் சேர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் 10 கோடி டன் காய்கறிகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க,6,000 டன் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது, சர்வதேச அளவுடன் ஒப்பிட்டால் 70 சதவீதம் அதிகம். இந்தியாவில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்களில், ரசாயனப் பொருள்களின் அளவு, அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் உள்ளதாக, "உலக காய்கறி மையம்' (அ.ங.கீ.ஈ.இ.,) எச்சரித்துள்ளது.

பெரு நகரங்களின் சுற்று வட்டார பகுதிகளில், விளை நிலங்கள் குறைந்துவிட்டதால், நீண்ட தொலைவில் உள்ள கிராமப் புறங்களில் இருந்து காய்கறிகள் தருவிக்கப்படுகின்றன. இந்த காய்கறிகள், குளிர்பதன குடோன்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கும்போது, பூச்சி, புழுக்கள் தாக்காமல் இருக்க, பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. பயிர் நிலையிலேயே, ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் காய்கறிகளோடு கலந்துவிட்ட நிலையில், அவற்றை சேமித்து வைக்கும்போது, காய்கறிகளின் மீது பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதால், அதில் சேரும் ரசாயனத்தின் அளவும் அதிகமாகிறது. இதுதவிர, காய்கறிகள் வாடாமல் இருக்க, அலுமினியம் பாஸ்பைட், பேரியம் கார்பனேட் போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. பழங்களை பழுக்க வைக்கவும், புத்தம் புதிதாக தோற்றமளிக்கவும், "காப்பர் சல்பேட்' பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, விதைகளைப் பதப்படுத்துவதிலிருந்து மார்க்கெட்டில் விற்கும் வரை, பல ரசாயன பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

உணவு வகைகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, குறிப்பிட்ட அளவு பூச்சிக் கொல்லி மருந்துகளையும் ரசாயனப் பொருள்களையும் பயன்படுத்திக் கொள்ள உணவு கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது. ஆனால், நடைமுறையில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் சேர்க்கப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சகம், 2009ல் நடத்திய ஆய்வில், காய்கறி, பழங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 60 கிலோ எடையுள்ள ஒருவரது உடலில், நாள்தோறும் 0.48 மில்லி கிராம் வரை பூச்சிக் கொல்லி மருந்து சேர்ந்தால் பாதகம் இல்லை என அளவிடப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல், உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமானால், பூச்சிகளிலிருந்து விளை பொருள்களை பாதுகாப்பது அவசியம்தான். இதற்காக, பூச்சிக் கொல்லி மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் தான், ஒரு வரைமுறை இல்லாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கண்காணிக்க அமைப்புகள் இல்லை. உயிர் வாழ உணவு அவசியம், ஆனால், அந்த உணவே உயிரைப் பறிக்கும் எமனாக மாறுவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

பழக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் பழங்கள், பார்க்க, "பளபள' என, அழகாக இருக்கும். ஆனால், அதன் மேலே பூசப்பட்டிருக்கும் மெழுகின் ஆபத்து பலருக்கு தெரியாது. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பழங்கள், காய்கறிகளில் பூசுவதற்கு, உலக சுகாதார மையம் அனுமதித்துள்ளது. இந்த மெழுகுக்கு பதிலாக, செயற்கையாக தயாரிக்கப்படும் ரசாயன மெழுகை பயன்படுத்துகின்றனர். இது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

No comments:

Post a Comment