Saturday, August 27, 2011

மழையால் ஏற்படும் தனிமை உணர்வு...!


மழைக்கும், தனிமைக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கிறதோ தெரியவில்லை... மழை என்றாலே நாம் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. மழை நம் மனதுக்கு உற்சாகம் அளித்தாலும், தொடர்மழை ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். மழை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், இன்னொரு மழையில் நினைவுக்கு வரும்.

மழையில் ஏற்பட்ட விபத்துக்கள் நினைவிழந்தவர்களுக்கு மீண்டும் அதே மழையில் நினைவு திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள், மருத்துவ நிபுணர்கள். மழையால் ஏற்படும் தனிமையுணர்வு நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இனிய நினைவுகளை திரும்பக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றது. அந்த வகையில் மழையும் ஒரு மருத்துவர் தான்.

தொடர் மழையும், இடியும் மின்னலும் நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தும். நம்மைச் சுற்றி திடீரென்று பரவும் இருள், நம் மனதில் ஒரு திகிலை மூட்டக்கூடியதாக உள்ளது.

இதை நம்ம ஊர் சினிமாக்காரர்கள் கூட நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏதாவது திகில் காட்சியை காட்ட வேண்டுமானால் மழையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். `கிளு..கிளு..' காட்சிகளுக்கும் மழையே சிறந்த கூட்டணி. கவிஞர்களும், எழுத்தாளர்களும் கூட மழையை விட்டு வைப்பதில்லை. மழையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்ணின் அலங்கோல நிலையை சித்தரிக்கும் கதைகள் ஏராளமாக வந்து `உச்' கொட்ட வைத்திருக்கிறது.

மழையில் பல தவறுகள் நிகழ, மனிதர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்தான் காரணம். மற்ற பருவங்களின் தாக்கம் அவ்வளவாக நம்மை பாதிப்பதில்லை. மழையின் தாக்கம் தான் நம்மை வெகுவாக பாதிப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். `மழையானது மக்கள் போற்ற வேண்டிய ஒன்று ஏனெனில் அது உண்ணும் பொருள்களை உண்டாக்கி கொடுத்து, தானும் உணவாக மாறுகிறது 'என்று முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறி இருக்கிறார்.

மழையின் மகத்துவம் தெரியாதவர்கள் யாரும் இல்லை. மழையின் துவக்கத்தில் உற்சாகம் ஏற்பட்டாலும் தடைபடும் பணிகளை கருத்தில் கொண்டு `போதும்' என்று நாம் சில நேரங்களில் நினைப்பதுண்டு. சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ``ரெயின் ரெயின் கோ அவே'' என்று தான் நினைப்பார்கள். மழையை `அமிழ்து' என்று கூறிய வள்ளுவர் தான், அதுவே அளவுக்கு மிஞ்சினால் `ஆபத்து' என்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொடர்மழையை அவர் `அளவுக்கு மிஞ்சிய அமிர்தமும் விஷம்' என்கிறார்.

மழையின் அவசியம் புரிந்த உழவர்களும், மழையின் வரவுக்காக யாகம் செய்த ஆன்மிகவாதிகளும், பெய்தமழைக்காக இறைவனுக்கு ஒரு பக்கம் நன்றி கூறினாலும், மறுபக்கம் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பயந்து அது நின்று போக வேண்டும் என்று நினைப்பதும் உண்டு.

நமக்கு மழையை வரவேற்கவும் தெரிய வேண்டும். பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் மழையை கொண்டாட முடியும்.

பருவநிலை மாற்றங்கள் பூமியில் மட்டுமல்ல, மனிதர்கள் மனதிலும் வாழ்க்கையிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக ஒரு குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டுவதும் மழைதான். குற்றத்தை உணரத் தூண்டுவதும் மழை தான்.

மழையின் தனிமை எல்லாதரப்பு மனிதர்களுக்கும் பொதுவானது. அந்தத் தனிமையை இனிமையாக மாற்றிக் கொள்ள முற்படுவோமேயானால் மழை சுகமானது.


மழையினால் ஏற்படும் தொந்தரவுகள்:

* போக்குவரத்து பாதிப்பு, காலதாமதம், வாகனம் பழுதடைதல்.

* தொலைபேசி இணைப்புதுண்டிப்பு.

* பிரேக்டவுனால் வழியில் நின்றுபோகும் தங்கள் வாகனங்கள் பற்றிய தவிப்பு.

* சாலையில் மூடியில்லா சாக்கடை, பள்ளம், மேடு மறைந்து வாகனங்கள் தடுமாறுதல்.

* பாலங்களின் அடியில் நீர் தேங்கி மணிக்கணக்கில் டிராபிக் ஜாம் ஆதல்.

* ஆட்டோ கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதிக கட்டணம் கேட்பது.

* மின் ஓயர்கள் அறுபட்டு நீரில் விழுதல் போன்ற பல அபாயங்களை தாண்டி வீடு போய் சேரவேண்டிய நிலை.

* வீட்டில் இருப்பவர்களுக்கு, இத்தனை தொந்தரவுகளை தாண்டி வெளியே போனவர்கள் வீடு திரும்ப வேண்டுமே என்ற தவிப்பு.

* மின் தடையால் வீட்டு வேலைகள் பாதிப்பு.

* முக்கிய பயணங்கள் ரத்து.

* மழைக்கால தொற்று நோய்களை சமாளிப்பது.

* மாசுபட்ட குடிநீர்.

* அத்தியாவசியப் பொருட்கள் தாமதம்.

 
அரசாங்கத்திற்கு ஏற்படும் தொந்தரவுகள்:

* தாழ்வான பகுதியில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய கடமை.

* வெள்ள அபாயம் நேராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

* கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை.

* அணைக்கட்டுகளின் நீர்த்தேக்க அளவை கண்கொத்திப்பாம்பாக கண்காணிக்கும் அவசியம்.

* தொற்று நோய் பரவாமல் நோய் தடுப்பு நடவடிக்கை.

* சாலை பாதுகாப்பு.

* சாலையோர திறந்தவெளி வடிகால்களை சரிசெய்தல்.

* போக்குவரத்து நெரிசலால் விபத்து.

* சுகாதார சீர்கேடு.

* வீடு இழந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு, இருப்பிடம் வழங்குதல்.

* வெள்ள மீட்புப் பணி.

* பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வெள்ள நிவா ரணம்.

இப்படி ஏராளமான உடனடி வேலைகள் அரசாங்கத்துக்கு வந்து விடுகிறது.

No comments:

Post a Comment