எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ அது கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரி்க்காவின கடன் தர வரிசை 'AAA' என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதாவது, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை, எதிர்பார்த்ததை விட வேகமாகவே தொட்டுவிட்டது.
அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதம். ஆனால், இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது. இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.
இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது. 2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.
இந்த விஷயத்தை நான் முந்தைய கட்டுரையில் விவரித்திருந்தேன். (உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!) ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்க அமெரிக்கா தனது கடன் வாங்கும் அளவை மேலும் 2.5 டிரில்லியன் வரை உயர்த்தியது. இதையடுத்து இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கும், ராணுவத்தினருக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் போட முடிந்தது அமெரிக்க அரசால். சம்பளம் தான் போட்டாச்சே.. பிரச்சனை தான் தீர்ந்துவிட்டதே.. என்று நினைத்துவிடாதீர்கள். இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது.
உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலைந்திருக்கும்.
ஆக, அமெரிக்கா உண்மையிலேயே AAA தரம் கொண்ட ஒரு நாடு தானா என்ற கேள்விகளை சர்வதேச நிதி அமைப்புகள் கிளப்பின. இதில், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிதி அமைப்பு கொஞ்சம் முந்திக் கொண்டு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. அதாவது, நாம் ஒரு 'பர்சனல் லோனுக்கு' அப்ளை செய்தால், நமது வருமானம், நமது கடன்கள், நமது மாத செலவுகள், கடனை திருப்பிச் செலுத்தும் பலம் ஆகிய பல விஷயங்களை பார்த்துவிட்டே நமக்கு வங்கிகள் கடன் தருகின்றன. இதில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தாலும் கடனைத் தருவதில்லை அல்லது கேட்ட அளவுக்கு கடனைத் தராமல், கேட்டதில் பாதியைத் தருகி்ன்றன.
கிட்டத்தட்ட இதே நிலைமைக்குப் போய்விட்டது அமெரிக்கா. AAA என்பது, அமெரிக்கா கேட்காமலேயே வங்கிகளும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிப் போய் பணத்தை அந்த நாட்டில் முதலீடு செய்யும் நிலைமை. AA என்பது அமெரி்க்காவே கெஞ்சிக் கேட்டாலும்.. யோசித்துவிட்டு, ஆராய்ந்து பார்த்துவிட்டு தருகிறோம் என்று கூறும் நிலைமை. ''எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'' என்பது தான் இதற்கான லோக்கல் விளக்கம்.
அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே முதுகுத்தண்டில் 'ஜில்' என்ற ஒரு பயம் பரவிவிட்டது. இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது ஏற்பட்ட கஷ்டங்களை உலகம் இன்னும் மறக்கவில்லை. பல நாடுகளும் நிறுவனங்களும் இன்னும் அந்த வீழ்ச்சியின் தாக்கத்திலிருந்தே மீளவில்லை. இந் நிலையில் மீண்டும் ஒரு பொருளாதாரத் தேக்கமோ அல்லது பொருளாதார சறுக்கலோ ஏற்பட்டால்.. என்ன செய்வது என்ற பயம் உலகம் முழுவதுமே பரவியுள்ளது.
இந்த பயத்துக்கு எண்ணெய் ஊற்றும் வகையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் 'ரத்தக் களறி' தொடர்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் சறுக்கிவிட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி 130 புள்ளிகள் சறுக்கி, ஒரு வருடத்துக்கு முன் இருந்த நிலைமைக்குப் போய்விட்டது.
தங்களது வருமானத்துக்கு அமெரிக்கா, ஐரோப்பாவை சார்ந்திருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகள் தான் பெரும் அடி வாங்கியுள்ளன. அதே போல நிதி சிக்கலால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படலாம் என்பதால் இரும்பு நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் லட்சுமி மிட்டல்கள், அம்பானிகள், டாடாக்கள், ஆசிம் பிரேம்ஜிகளுக்கு இரண்டே நாளில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு என்றால், 'கடன ஒடன' வாங்கி முதலீடு செய்த சிறிய முதலீட்டாளர்களுக்கும் ஏராளமான இழப்பு.
இந்த இழப்புகள் தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதால், அடுத்தது என்ன நடக்குமோ என வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்துள்ளனர் நிதியமைச்சக அதிகாரிகள். இதே நிலைமை தான் உலகம் எங்கும்.. ஐரோப்பாவிலும் நிலைமை சரியில்லை. கிரீஸ், போர்சுகல் ஆகிய நாடுகள் கடனில் மூழ்கிக் கிடக்க, அவற்றை மீட்க ஐரோப்பிய மத்திய வங்கி உலகம் முழுவதும் நிதி திரட்டிக் கொண்டுள்ளது. தனது கஷ்டத்துக்கு இடையிலும் அமெரிக்கா 100 பில்லியன் டாலர்களை தந்துள்ளது. இந்தியாவும் 2 பில்லியன் டாலர்களைத் தர உள்ளது.
இப்படி எல்லா பக்கமும் நிலைமை சரியில்லாததால், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ இல்லையோ.. தங்கத்தின் விலை மட்டும் நிச்சயம் பல மடங்கு உயரப் போகிறது. இதுவரை அமெரிக்கப் பங்குகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் முதலீடு செய்து வைத்திருந்த நிறுவனங்கள், இந்த நாடுகளில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, அதை வேறு பாதுகாப்பான 'இடங்களுக்கு' திருப்பலாம். அந்த பாதுகாப்பான இடங்களில் மிக முக்கியமான இடம் தங்கம் தான் என்கிறார்கள். இதனால் உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை தாறுமாறாக உயரப் போகிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
அமெரிக்கா அதிகளவில் கடன் வாங்கியது இப்போது தான் வெளி உலகுக்குத் தெரியுமா.. இத்தனை நாட்களாக விட்டுவிட்டு இப்போது ஏன் திடீரென அதை AAAவிலிருந்து AA என்று தரம் குறைத்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இப்போது, அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தைக் குறைக்கக் காரணமாக இருந்தது அதன் பொருளாதார நிலைமை மட்டும் அல்ல. அந் நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தான் முக்கியக் காரணம் என்கிறார்கள்.
கடன் வாங்கும் அளவை கடைசி நாள் வரை உயர்த்த முடியாமல் நாடாளுமன்றத்தில் ஒபாமா பட்ட பாட்டை வைத்துத் தான், அந் நாட்டின் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது என்கிறார்கள். இது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட சரிவு என்பதை விட தனிப்பட்ட முறையில் ஒபாமாவுக்கு விழுந்த அடி தான். ஆனால், அந்த வலியை அனுபவிக்கப் போவது ஒட்டு மொத்த உலகமும் தான்.
இந்த விவகாரம் போதாது என்று அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்ற படையினரை ஆப்கானிஸ்தானில் நடந்த சண்டையில் ஒட்டுமொத்தமாக பலி கொடுத்துவிட்டு நிற்கிறது அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு. அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி 31 சீல் படையினரை கொன்றுள்ளனர் தலிபான்கள். இந் நிலையில், அமெரிக்கா தனது 'பொருளாதார ஒழுக்கத்தை' சரி செய்து கொள்ளாவிட்டால், அதன் தரத்தை மேலும் குறைப்போம் என்று அறிவித்துள்ளது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்.. ஒபாமாவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது... உலகத்துக்கும் தான்.!
Tannai sari saiyamala aduththavargalai sari saiya ninaithu,tharkolai saiyappohum nilaiku thallappatu vittathu USA...Sinthippara Obama...?
ReplyDelete