Thursday, August 18, 2011

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்'



ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகவுரவம் உண்டு. அது தான் அவனை தன்னம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல உதவுகிறது. ஒரு பழைய கதை உண்டு. அதாவது, ஒரு விளக்கில் அடைபட்டுக் கிடந்த பூதமானது, அந்த விளக்கை துடைத்து. தன்னை விடுதலை செய்பவனின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாக கூறியது. இந்தச்சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால். நீ என்ன கேட்பாய்?
ஒரு கார் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது ஏராளமான செல்வம் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது தனக்கு கவலையே இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்பாயா?


அல்லது நீ உன்னைப் பற்றியே சுயமாகச் சிந்திக்காமல் இருந்தால் வேறு என்ன கேட்பாய்?


உனது நண்பர்களுக்காகவும், நீ விரும்புகிறவர்களுக்காவும், நீ உன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும், நீ என்ன வரம் கேட்பாய்?


உனது சுய கவுரவத்தை பாதிக்காத வகையில், மிகவும் திருப்தி அளிக்கக்கூடிய சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும் கேட்டால், அது எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.


மற்றவர்கள் உன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லுவது சுய கவுரவம் ஆகாது. நீ விலை மதிப்பற்றவன் என்பதை நீயே உணர்ந்து கொள்ளுவது தான் சுயகவுரவம்.


நீ முழுமையாக குற்றமற்றவன் என்று நினைத்தால் மட்டும் போதாது. நீ குற்றமற்றவன் என்பதை, உன்னை நேசிக்கிற மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


சுயகவுரவம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அது அவன் முன்னேற தூண்டுகோலாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.


நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவைகள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சுய கவுரவம் என்று அமெரிக்க மனோதத்துவ நிபுணர் ஆபிரகாம் மஸ்லோ கூறுகிறார்.


சுய கவுரவத்தை இரண்டு வகையாகச் சொல்வது உண்டு. ஒன்று நம்மை நாமே மதிப்பது. இன்னொன்று, மற்றவர்கள் நம்மை மதிக்கும்படி நடந்து கொள்வது.


நமது உள்மனதின் மதிப்பீடு தான் சுயகவுரவம். இது தான் நிரந்தரமானது. மற்றவர்கள் நம்மை அங்கீகரிப்பது, நமது தகுதியை ஏற்றுக்கொண்டு பாராட்டுவது என்பது நிரந்தரமானது அல்ல.


சுயகவுரவத்தை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன.


நம்மை நோக்கி வரக்சுடிய துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது தான் உனது சிந்தனையாக இருக்க வேண்டும்.


உனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய 3 விஷயங்களை மனதில் நிறுத்திக் கொள்.


நம்மால் முடியும் என்று நீயே உன்னை பாராட்டிக் கொள்.


தவறு செய்யும்போது தான், நீ மேலும் உறுதியாக வளர அதிக அளவில் வாய்ப்பு ஏற்படும்.


குற்றங்களை ஒத்துக் கொள். காரணம், குற்றம் செய்யாதவர்களே இல்லை. தவறு தான் நமது வாழ்க்கையின் படிப்பினை ஆக அமைகிறது.


உன்னுடைய திறமைகளை எல்லாம் நீ பரிசோதித்துப் பார். அப்போது தான் உனக்குள் இருக்கும் புதிய திறமைகள் வெளிப்படும்.


உன்னால் முடியாத இலக்கை நிர்ணயிக்காதே. ஆனால் பெரிய இலக்குகளை, சிறிது சிறிதாக நிறைவேற்ற வேண்டும். அப்போது உனக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.


நடந்த நல்லவற்றையே நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கையில் உன்னை விட உயர்ந்தவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்க்காதே.


உனக்குச் சமமாக இருப்பவர்களை கவனி. பலரது வாழ்க்கையில் குறைபாடுகளும், பிரச்சினைகளும் இருப்பதை நீ புரிந்து கொள்வாய்.


அப்போது உன் மனதில் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, உன்னை விட்டு, காலைப்பனி போல மறைந்து விடும்.


உனக்கு ஏற்றத் தாழ்வுகள் வரும்போது கூட, உன்னைப் பாராட்டுபவர்களும், உனக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியவர்களும் உன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொள்.


சுய கவுரவம் உள்ளவர்களே வெற்றி பெறுபவர்களாக திகழ்கிறார்கள். எனவே சுய கவுரவத்தையே உனது குறிக்கோளாக வைத்துக் கொள்.உன்னைப்பற்றி நீ நல்ல விதமாக உணர்ந்தால், வெற்றி உன்னைத் தானாகத்தேடி வரும்.


No comments:

Post a Comment