Wednesday, August 3, 2011

பேஸ் மேக்கர் (pace maker) வேலை செய்வது எப்படி..?


பேஸ் மேக்கர் பணி இயற்கையாக நடைபெறவில்லை எனில், செயற்கை பேஸ் பேக்கர் பொருத்த வேண்டியுள்ளது. இது ஒரு ரூபாய் அளவுள்ள மருத்துவக் கருவி. குறைந்த இதயத் துடிப்பை அதிகமாக்க, உடலில் பொருத்தப்படும் கருவி. இந்த கருவியில், கீழ்கண்ட பகுதிகள் உள்ளன. பேட்டரி உள்ளது. இது, லித்தியம் சக்தி கொடுக்கிறது. இதில் உள்ள சிறிய கம்ப்யூட்டர், இதயத் துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்று அறிய உதவும். அதன் தகவலை பேட்டரிக்கு அனுப்பும்.


துடிப்பு சாதாரணமாக இருந்தால், பேஸ் மேக்கர் எவ்வித மின்சாரத்தையும் கொடுக்காது. இதயத் துடிப்பு குறைந்தால் கம்ப்யூட்டர், பேட்டரிக்கு தகவல் கொடுத்து, பேட்டரி, மின்சாரத்தைச் செலுத்தி, இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. பேட்டரியிலிருந்து மின்சாரம், “லீட்ஸ்’ என்ற மெல்லிய கம்பிகள் மூலம், இதயத்தின் வலது கீழறைக்குச் செலுத்தப்படுகிறது. பேஸ் மேக்கர், மார்பின் மேல் பகுதியான காலர் எலும்புக்குக் கீழ் பொருத்தப்படுகிறது.

அதன் அருகிலுள்ள தமனியின் மூலம், இதயத்தின் வலது கீழறையின் கீழ்ப்பகுதி வரை, “லீட்ஸ்’ செலுத்தப்பட்டு, அப்படியே வைக்கப்படும். பேஸ் மேக்கரில் இரண்டு, “லீட்ஸ்’ கொண்ட கருவியும் உண்டு. ஒரு, “லீட்,’ வலது மேலறையில் இருக்கும்; இன்னொரு “லீட்’ வலது கீழறையின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படுகிறது.

சி.ஆர்.டி., என்ற கார்டியாக் ரீசிங்க்ரனைசேஷன் தெரபி: இதுவும் ஒருவகை, பேஸ் மேக்கர் சிகிச்சை முறை. இதயத்தின் இரண்டு கீழறைகளை ஒரே சமயத்தில் இயங்க வைப்பது இதன் வேலை. இறுதிக் கட்ட ஹார்ட் பெய்லியர் உள்ளவர்களுக்கு, இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

இதயம் வீங்கி, ” கார்டியோ மையோபதி’ என்ற நோயால் அவதிப்படுபவர்களுக்கு, இதயத் துடிப்பு, 35 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும். இவர்கள், நடந்து கழிவறை, குளியலறை சென்றாலே மூச்சு இறைப்பு ஏற்படும். மேலும், கார்டியோ மையோபதி உள்ளவர்களுக்கு, இதயத்தின் அறை நரம்பு கற்றில், “பிளாக்’ இருந்தால், இந்த சி.ஆர்.டி., தேவை. மருந்து மாத்திரைகளால் குணமாகாத நிலையில், இந்த சி.ஆர்.டி., என்ற சிகிச்சை பலன் அளிக்கும். 

மருத்துவ பரிசோதனையை தவறாமல் செய்து, இ.சி.ஜி., மூலம், இதை கணிக்க வேண்டும். இதய நோயாளிகளில் 50 சதவீதம் பேர், ஹார்ட் பெய்லியர் நோயாளிகளாக இருப்பர். இவர்கள், இந்த கடுமையான ஹார்ட் பெய்லியருக்கு போகாமல், இதயத்தைக் காப்பது நல்லது.
நன்றி: உங்களுக்காக

No comments:

Post a Comment