Thursday, August 18, 2011

குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதெப்படி...?


குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறோமோ அதுபோலவே அவை வளரும். `வரிசையில் செல்' என ஒழுக்கம் கற்பிக்கிறோம். யதார்த்தத்தில் வரிசையில் நிற்க நேரிட்டால் `இப்படி நின்றால் யாரும் வழிவிட மாட்டார்கள், முண்டிக் கொண்டுதான் போக வேண்டும்' என்று விதியை தளர்த்துகிறோம். தவறு செய்யாதே என்கிறோம். ஆனால் நிஜத்தில், `வாழ்வது சந்தோஷத்திற்காக... அதற்காக எதுவும் செய்யலாம்' என சமாதானம் சொல்கிறோம். இப்படி செய்தால் குழந்தைகள் எப்படி வளர்ந்து வருவார்கள்.

குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவது அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பதை காட்டுவதாக பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளோ தங்கள் நலனுக்காக பெற்றோரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வரும் சூழலும் இதனால் உருவாகலாம். யார் அதிகம் பாசம் காட்டுகிறார்களோ அவர்களை சார்ந்து கொண்டு மற்றவரை குறைசொல்லும் வழக்கமும் வரலாம். குழந்தைகள் இப்படி செல்வதை தடுக்க, முதல்வழி, பெற்றோர் உதாரணமாய் வாழ்ந்து காட்டுவதுதான். ஒழுக்கம் கற்பித்தல், அன்புடன் நடந்து காட்டுவதன் மூலமே போதிக்கப்பட்டால் மட்டுமே நல்லது.

குழந்தைகள் ஒழுக்க விதிமுறைகளை மீறும்போதே சுட்டிக்காட்ட வேண்டும். கண்டிப்பதிலும் மகனுக்கும், மகளுக்கும் பாரபட்சம் கூடாது. தவறுகளுக்கு வெறுமனே மிரட்டாமல் தண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிரட்டலை பொருட்படுத்த மாட்டார்கள். தண்டிக்கும்போது கோபமில்லாமல் `குழந்தையின் நலனுக்காக செய்கிறோம்' என்ற எண்ணம் இருக்க வேண்டும். குழந்தை பழைய பேப்பரை கிழிக்கும்போது ரசித்துவிட்டு, இன்றைய பேப்பரை கிழிக்கும்போது கண்டித்தால் அது குழம்பிவிடும். எனவே குழந்தையின் கோணத்தில் கவனித்து சரிப்படுத்த வேண்டும்.

உறுதிக்குப் பின்னால் மென்மையும், மென்மைக்குப் பின்னால் உறுதியும் உள்ள பெற்றோரே சிறந்த பெற்றோர். குழந்தை வளர்ப்பில் பெற்றோர் 3 நிலைகளை கடக்க வேண்டும். அவை- 1. மழலை, 2. குழந்தை, 3. பருவ வயது. அந்தந்த பருவத்துக்கேற்ற குழந்தையின் மாற்றங்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். மழலைப் பருவத்தில் குழந்தைகளை மார்போடு அணைத்து பாசத்தையும், பாதுகாப்பையும் தர வேண்டும். அதேபோல முகத்தோடு முகம் பொருத்துவது, நேர்மறையாக பேசுவது, தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவது போன்றவை பாசத்தை நிலை நிறுத்தவும், பண்பை வளர்க்கவும் உதவும்.

குழந்தைப் பருவம் தான் அவர்களின் உண்மையான வளர்ச்சிப் பருவம். இந்தப்பருவத்தில் தான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். அப்போது பெற்றோர் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது மிக முக்கியம். நீங்கள் கூறும் அறிவுரைகளை கேட்பதோடு, உங்கள் செயலையும் கவனிப்பார்கள். பெற்றோர் தான் நமக்கு பாதுகாப்பு என்பதை உணர்வார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவாக இருப்பதோடு, தவறு செய்யும் பட்சத்தில் திருத்தவும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையை சுய மதிப்புடையவர்களாக உருவாக்குவது தான் பெற்றோரின் கடமை.

குழந்தை சாதனை படைக்க விரும்பினால் அபாயத்தையும் துணிந்து எதிர்கொள்பவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும். புலம்புவதையும், குறை கூறுவதையும் தடை செய்யுங்கள். `நீ கெட்ட பையன்' என்பதற்கு பதிலாக `உன் நடத்தை மாற ஆசைப்படுகிறேன்' என்று கூறுங்கள். மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கவும், விட்டுக்கொடுக்கவும் கற்றுத் தாருங்கள். குழந்தையை பெரிய மனிதனாக எண்ணி வளர்த்திடுங்கள். அழுவதால் எதையும் சாதிக்க முடியாதென்றும், உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்தவும் கற்றுக்கொடுங்கள். அடிக்கடி அணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துங்கள்.

பெற்றோரே குழந்தைகளின் நிரந்தர ஆசிரியர். குழந்தைகளை நலம் பேணவும், சுயநலம் பார்க்காமல் இருக்கவும் பழக்குங்கள். சுயமதிப்பு உடையவர்களாக உருவாக்குவதோடு, மற்றவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும். அறிவிற்கும், திறமைகளுக்கான பயிற்சிக்கும் உதவி செய்வதோடு, சரியான விமர்சனமும் அவசியம். திறமைக்கேற்ப இலக்கை நிர்ணயிக்கவும், வெற்றி தோல்விகளை சமமாக கருதவும் கற்பிக்க வேண்டும். சொந்த ஆர்வங்களை ஊக்குவிக்க வேண்டும். வேலைகள் கொடுக்கவும், அதை மதிப்பிடவும், அவர்களது செயல்களுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கவும் செய்யுங்கள்.

சாப்பிடும்போது ஒன்றாக சாப்பிடுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வப்போது ஒரு கருத்து பற்றி விவாதியுங்கள். சுற்றுலா செல்லுங்கள். ஒன்றாக அமர்ந்து டி.வி. பார்த்தால் தேவையற்ற சேனல்களை குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்க முடியும். பிறந்த நாள், திருமண நாள், சாதனை தினம் போன்றவற்றை கொண்டாடுங்கள். விருந்துகளை ஏற்படுத்தி உறவு கொண்டாடுங்கள். மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொடுங்கள். பாராட்டுவதையும், விமர்சிப்பதையும் சொல்லிக் கொடுங்கள். நியாயமாக நடக்கவும், விட்டுக் கொடுக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் பருவ வயது, பெற்றோருக்கு கஷ்டமான காலகட்டமாகும். குழந்தைகளின் சந்தேகங்களுக்கு நல்ல விளக்கம் அளிப்பதுடன், நட்புறவையும் வளர்த்து வர வேண்டும். இப்பருவத்தில் 90 சதவீத குழந்தைகள் பெற்றோருடன் நெருக்கம் காட்டுவதில்லை. எனவே தவறான வழியில் சென்று விடுவார்களோ என்று பெற்றோர் கவலை கொள்கிறார்கள். பருவ வயதினர் பதிலுக்குப் பதில் பேசினாலோ, அல்லது புறக்கணித்தாலோ கூட பெற்றோர் தங்கள் கடமையிலிருந்து பின்வாங்கக் கூடாது. பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், பாரபட்சமின்றி தீர்வு சொல்லவும் வேண்டும்.

தந்தைக்கும் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கிருக்கிறது. கட்டுப்படுத்துபவர், கவனிப்பவர், பராமரிப்பவர், முழு ஈடுபாடு காட்டுபவர் என 4 வித தந்தைகள் இருக்கிறார்கள். காலமாற்றத்தில் குழந்தைகளை பராமரிக்கும் அப்பாக்கள் பெருகி வருகிறார்கள். கருணை, விவேகம், நீதி, மனோபலம், தன்னடக்கத்துடன் பெற்றோர் நடப்பதன் மூலம் குழந்தைகளும் அதே குணங்களைப் பெறுவார்கள். பாசப் பிணைப்பில் ஒருவருக்கொருவர் பிரிய மனமில்லாத சூழல் ஏற்படக்கூடாது. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் குழந்தைகளை தனிமனிதர்கள் என்ற மனோபாவத்துடன் நடத்துவதே நல்ல பெற்றோரின் அடையாளம்.

No comments:

Post a Comment